சனி, ஏப்ரல் 17, 2021

எழுத்தாளர் டானியலுடன் ஒரு மாலைப் பொழுது…

நேருக்கு நேர்:

எழுத்தாளர் டானியலுடன் ஒரு மாலைப் பொழுது…

-பூமணிமைந்தன்


தொழில் வாய்ப்புகளும், வேலைப் பளுக்களும் நிரம்ப உள்ள போதும் தாங்கள் எழுத்துலகில் பிரவேசித்ததற்கான காரணம்?

இதற்கான காரணத்தை நான் தேடிப்பிடிக்க முயற்சிக்கவில்லை. ஒழிவு மறைவின்றிக் கூறுவதானால் எனது காதலி ஆனவளுக்கு மனதைத் திறந்து காட்டுவதற்காகவே எழுதத்தொடங்கினேன் என்று சில வார்த்தைகளில் கூறிவிடலாம். இதில் வெட்கம் என்ன இருக்கிறது? நான் ஒருத்தியைக் காதலித்தேன். அவள் என்னை ஏமாற்றிவிட்டாள். அதனாலேயே சோதனையின் கொடுமை அல்லது பழிக்குப்பழி" என்ற முதலாவது சிறுகதை பிறந்தது.

எழுத்துலக ஆரம்பம் அப்படி இருந்தபோதிலும் உங்களால் எழுதப்பட்ட நாவல், சிறுகதைகளைப் படிக்கும்போது ஆழமான கருப்பொருளைக் கொண்டனவாகக் காணமுடிகிறதே.... அது எப்படி?

ஏறக்குறைய இருபத்துரெண்டு, இருபத்துமூன்றாவது வயதுக் காலகட்டத்தில் அரசியலில் கால் வைத்தேன். என்னை ஆகர்சித்த அரசியலுக்காக மக்களுடைய பிரச்சனைகளுடன் கலக்க வேண்டியதாயிற்று. அதனால் பெற்றுக்கொண்ட அனுபவங்களை அப்போதைக்கப்போது வெளிக்கொண்டு வருவதற்காக எழுத்தைப் பயன்படுத்தினேன். என்னால் எழுதப்பட்ட ஒவ்வொரு படைப்புக்குமான கருப்பொருள், பேச்சு,மொழி, களம், சம்பவத் தொடர்புகள்சகலதையும் மக்கள் மத்தியிலிருந்தே பெற்றுக்கொள்வதனால் படைப்புகள் கனதி பெறுவது இயல்பாயிற்று.

இதுவரை நீங்கள் எழுதியுள்ள நாவல்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்வீர்களா?

முதலில் வீரகேசரி' தின இதழில் “நெடுந்தூரம்'' என்ற தொடர் நாவலை எழுதினேன். அதை விமர்சித்து எழுதியவர்கள் 'டானியலுக்கும் நாவலுக்கும் நெடுந்தூரம்' எனக் குறிப்பிட்டார்கள். நான் சோர்வடையவில்லை; 'பஞ்சமர்' நாவலின் முதற்பாகத்தை எழுதினேன். அதில் இடம்பெற்ற சம்பவங்களில் நானும் பங்கு வெற்றியும் கிடைத்தது. அந்த உற்சாகத்துடன் 'போராளிகள் காத்திருக்கின்றனர்நாவலை எழுதினேன். அதற்கு யாழ்ப்பாணக் கடற்பிரதேசத்து மக்கள் தந்த வரவேற்பு 'பஞ்சமரி'ன் மறு பாகத்தையும் எழுதத் தூண்டியது.'கோவிந்தன்'நாவலை எழுதினேன். அதற்கு இரட்டிப்பு வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்துடன் 'அடிமைகள்'' கானல்" ஆகிய நாவல்களையும் எழுதிமுடித்து பதிப்பிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தவேளை 'ஈழநாடு' வார இதழ் கேட்டுக்கொண்டதற்காக 'மையக்குறி' நாவலையும், 'தினகரன்'வார இதழுக்காக 'முருங்கையிலைக் கஞ்சி'யையும் எழுதிக்கொடுத்தேன். இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இலக்கியம் மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமென விரும்புகிறீர்கள்?

வஞ்சிக்கப்பட்ட சகல மக்களும் தங்கள் பலத்தை உணர்ந்து, தன் நம்பிக்கையுடன் எழுந்து நின்று இன்றைய நடைமுறைச் சமூக அமைப்பை உடைத்தெறியும் துணிவினை ஏற்படுத்துவதாகவும்; சகல சீரழிவுகளுக்கும் காரணமான சமூகத்தை மாற்ற முற்படும் பெரும் சக்தியாம் மக்கள்சக்திக்கு உறுதுணை புரியும் பாதிப்பை வருவிப்பதாகவும் இருக்கவேண்டும்.

சமுதாய மாற்றத்தை பேனா முனையால் ஏற்படுத்திவிடலாம் என்று சொல்லப்படுவதுபற்றி...?

இது மிகவும் பிழையான ஒரு கருத்தாகும். சமுதாயத்தை மாற்றும் பிற சக்திகளுக்கு பேனா ஒத்தா சையாக இருக்கமுடியுமே தவிர தனித்து அதனால் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியவே முடியாது.

உங்களுடைய படைப்புகளில் வழக்கொழிந்துபோன சொற்களும், அருகிவரும் சொற்களும் இடம்பெறுகின்றனவே!இவற்றை எப்படித் தேடிக்கொள்கிறீர்கள்?

அதற்காக நான் ஒன்றும் சிரமப்படுவதில்லை. கிராமப்புற வயதானவர்களைச் சந்தித்து அவர்களின் வாயிலாக அனுபவங்களைக் கேட்கும் போது சொற்கள் தானாகவே கிடைத்து விடுகின்றன. நீங்கள் நினைப்பது போல் அவை வழக்கொழிந்துபோகவில்லை. அவைகள் கிராமப்புறங்களில் இன்றும் வாழ்கின்றன. இப்போதாவது ஆவணமாக்காவிட்டால் காலக்கிரமத்தில் அவை அழிந்தும் போகலாம்.

தமிழர் பிரச்சனையை விட்டு. சாதியை வைத்துத்தான் உங்களால் இலக்கியம்செய்யமுடியும் என்று பொதுவில் பேசப்படுகிறது. இதுபற்றி ......

சாதியைத் தொடாமல் என்னால் சிருட்டிக்கப்பட்டவைகளை சரியாக இவர்கள் படிக்கவில்லை என்றுதான் அர்த்தம். அத்தகைய ”போராளிகள் காத்திருக்கின்றனர்'' என்ற நாவலைப் படிக்கக் கிடைக்காதவர்கள் இப்பொழுது 'தினகரன்' வார இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் "முருங்கையிலைக் கஞ்சி'' என்னும் யாழ்ப்பாண விவசாய மண்ணின் கதையைப் படித்துப் பார்க்கட்டும். இவர்கள் சொல்வதுபோல, நான் எழுதும் சாதியை, தமிழர் பிரச்சனை என்று ஒப்புக்கொள்வதற்கு ஏன் மறுக்கின்றனர்? எதை இழந்தாலும் சாதிக் கௌரவத்தை இழக்கமுடியாதிருக்கும் தமிழர் வாழ்க்கையை இவர்கள் தமிழர் பிரக்சனையாகக் கருதவில்லையா? தெரிந்துகொண்டுதான் என் மீது பழிசுமத்துகிறார்கள் என்றால் அது பெரும் அயோக்கியத்தனமாகும். மனதார இவர்கள் இந்த அயோக்கியத்தனத்தை விடும்வரை யாருமே தமிழர்களின் சரியான பிரச்சனைகளை உணர்ந்தவர்களாக மாட்டார்கள்.

உங்களுடைய இலக்கிய நோக்கங்கள் என்றாவது நிறைவேறும் என்று நம்புகிறீர்களா?

அந்த நம்பிக்கையை இழந்துவிடும் அளவுக்கு என் சிந்தனைகள் இன்னும் வக்கரித்துவிடவில்லை. ”இது நிறைவேற முடியாதது" என்று நானே சொல்வேனாகில் எனது மூளையில் பழுது ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் நம்பலாம். மனித வரலாறு ஒரு தொடர்ச்சியான போர். அதற்கு இலக்கியமும் விதிவிலக்கானதல்ல. நான் இல்லாவிட்டால் எனக்குப்பின் இன்னொருவன்; அவனுக்குப்பின் வேறொருவன் இப்படியே உலகின் சுகபோகங்களைத் தனித்தனியே தன்னது, ஆக்கிக்கொண்டிருக்கும் வர்க்கத்தை அழித்தொழித்து எல்லாம் எல்லாருக்கும் என்ற எல்லைவரை இந்தப் போரை நடத்தி வெற்றிபெறுவர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அந்நாள் இப்பொழுதே என் கண்களுக்கும் தெரிகின்றது.

உங்கள் படைப்புகளில் தாழ்த்தப்பட்ட பாத்திரங்களாக வரும் செல்லனின் மனைவி 'செல்லி'யாகவும் எல்லிப்போலையின் மனைவி 'இத்தினி' யாகவும் காரணப்பெயர்ப் பொருத்தம் பெறுவதற்கான ஞாயங்கள் என்ன?

கிராமப்புறத்தில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவனுக்கு 'மாதன்' பெயர் இருந்தால் அவர்களைக் குடிமைகளாக வைத்திருப்பவர்கள் அவனது மனைவியை 'மாதன் பெண்டில்' என்றழைக்கத் தொடங்கி கடைசியில் 'மாதி' ஆக்கிவிடுகின்றனர். நாளடைவில் அதுவே அவளின் இயற் பெயராகியும் விடுகிறது. இதுபோலவே செல்லனின் மனைவி 'செல்லியாகவும், எல்லிப்போலையின் மனைவி ‘இத்தினி' என்றும் ஆகின்றனர். இது இன்றுவரை யாழ்ப்பாணக் கிராம மண்ணுடன் ஒட்டிப்போயே இருக்கிறது. அந்த மண்ணின் வாசனை வெளிப்படுகிறதே அன்றி வேறல்ல.

நீங்கள் இலக்கண நூல்கள் ஒன்றையும் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை என்கிறார்களே இது பற்றி…

எனது மாணவ காலத்தில் 5ம் வகுப்புக்கு இலக்கண நூல் வரவில்லை; அதுவரை வகுப்பாசிரியர் பேசிய வார்த்தைகள் தான் இலக்கணப் பாடமாகும். வாழ்க்கையில் பின்தள்ளப்பட்ட மக்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதற்கும் அவர்கள் பேசும்விதத்திலேயே விசயங்களை இலகு படுத்திக் கூறுவதற்கும், எழுதுவதற்கும் எனக்கு இலக்கணம் தெரியும். இலக்கணம் என்பது மனித ஜீவன் உதயமான பின்னர் வந்த ஒன்றே தவிர அதற்கு முற்பட்டதல்ல. அதனால் மனிதன் எப்படிப் பிறந்தான், எப்படி இருக்கிறான், எப்படி வாழவேண்டும் என்பதற்குப் பின் தான் இலக்கணம் என்ற ஒன்று இருக்கமுடியும்.

எழுத்தாளர்களை எந்தெந்த அளவுகோல்களால் வரிசைப்படுத்துகிறீர்கள்?

பழைய சமூகப் பழக்கவழக்கங்களுக்கும்; அந்த அமைப்புகளுக்கும் உட்பட்டு எழுதுபவர்கள். அந்தக் கட்டுக்கோப்புகளைக் கடந்து எழுதுபவர்கள். அக்கட்டுக்கோப்புகள், வரம்புகள் சகலதையும் அழித்துப் புதிய ஒரு சமூகக் கட்டுக்கோப்பை உருவாக்க எழுதுபவர்கள் என்ற வரிசைகளில் .!

குறிப்பிடத்தக்க சிறுகதையாளராக விளங்கிய நீங்கள் எழுபதுகளில் தான் நாவலாசிரியராகப் பரிணமித்தீர்கள்; இந்த இரண்டு இலக்கிய வடிவங்களிலும், சமூகத்திற்கு தங்களால் சொல்ல நினைக்கும் விடயத்தை இலகுவாகப் பதிய வைப்பதற்கு உகந்ததென்று எதனைக் கருதுகிறீர்கள்?

குறிப்பிடக்கூடிய ஆணி அடித்தாற் போன்று பட்டென்று புரியக்கூடியதான கருப்பொருளைச் சிறுகதைக்கூடாகவும்; ஒரு விசயத்தை விஸ்தாரமாக்கி, அதனோடுணைவுள்ள உபவிசயங்களையும் விளக்கிக் கூறவேண்டும் என்ற அவசியம் ஏற்படும் பட்சத்தில் அதை நாவலுக்கூடாகவும் கொண்டுவருகிறேன். இவை இரண்டில் எதை முதன்மைப் படுத்துவதென்ற கேள்விக்கு இடமே இல்லை. இலக்கியத்தின் இலக்கில் இரட்டைத் தன்மை இருக்கும்போது தான் வடிவங்களை ஆளுமைப்படுத்துவதிலும் வெவ்வேறு மச்சோரம் ஏற்படுமே தவிர மற்றப்படி அப்படி ஏற்படநியாயம் இல்லை.

உங்களை இலக்கியக்காரனாக உருவாக்குவதற்கு யார் யார் உறுதுணையாக நின்றனர் என்பதை குறிப்பிடுவீர்களா?

யாரையும் யாரும் உருவாக்குவதில்லை என்பது எனது கருத்து. அந்தந்தக் காலத்தின் தேவைகள் தான் எதையும் உருவாக்குகின்றன. அதற்கு இலக்கியக்காரனும் உட்பட்டவனே! 'நான் அவனை உருவாக்கினேன்' என்பதெல்லாம் அகம்பாவத்தின் வெளிப்பாடே! நான் எழுத்துலகில் பிரவேசித்த காலத்தில் எனது எழுத்துக்களைத் திருத்தங்கள் செய்தும் அச்சுவாகனம் ஏறுவதற்கான ஒத்தாசைகள் புரிந்தவர்கள் திருவாளர்கள் எஸ். பொன்னுத்துரை,என். கே. ரகுநாதன் ஆகியோர். இதைச் சொல்வதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?

எஸ். பொ. வின் இலக்கிய ஆளுமையைப் பற்றிய உங்கள் கருத்து?

ஆளுமை என்ற வரையில் எஸ்.பொ.மிகவும் உன்னதமானவர். ஆனால் அதுமட்டும் ஒரு சிருஷ்டி கர்த்தாவுக்குப் போதுமானதல்ல. எப்போது -- எதற்காக ஆளுமையைப் பயன்படுத்துவதென்பதில் தான் ஆளுமையின் பரிபூரண வெற்றி தங்கி இருக்கிறது. மழை எல்லாராலும் வேண்டப்படுவதொன்று. அம் மழை கடலில் பெய்யுமானால் அதனால் யாருக்குப் பயன் கிடைக்கப்போகிறது? மனித இனத்தின் முதன்மையான தேவைகளை மையப்படுத்தாமல் பிறப்பெடுக்கும் கருவூலங்களை வெறும் ஆளுமையால் மட்டும் மேன்மைப் படுத்த நினைப்பது சரியானதென்று நான் கருதவில்லை.

இலக்கியத்தில் பாலியல் பற்றி உங்கள் அபிப்பிராயம்?

இலக்கியத்தில் பாலியல் கூடாதென்று கொள்ளலாகாது. அப்படி எழுதக்கூடாதெனக் கட்டளை இடுவது வேறோர் வகையில் 'உயிருள்ள எதைப்பற்றியும் எழுதாதே!' என்று கூறுவதற்கே ஒப்பானதாகும். மனித வாழ்க்கை முழுவதும் பாலியல் மயமானதோ, அன்றி அதிலே தங்கி நிற்பதோ அல்ல. அதேபோன்று இலக்கியம் பாலியலை முதன்மைப்படுத்தும் விதத்திலோ அன்றி அதில் தங்கிநிற்கும் முறையிலோ அமைவது இயல்புக்கு மாறானதும், தேவைகளுக்குப் புறம்பானதுமாகும். சந்தர்ப்பத்தால் பாலியல் வியாபாரத்தை நடத்தும் ஒருவள், முழுமனித சமூகத்துக்கும் எதிரியான ஒருவனை அல்லது ஒரு வர்க்கத்தை அழிக்க பாலியலையே ஆயுதமாக உபயோகித்து செயல்படுவதாக சிருஷ்டி அமையுமெனில் அக்கருவூலத்தை எவரும் 'பாலியல்' என்பதற்குள் அடக்கிவிடமுடியாது.

இறுதியாக ஒரு கேள்வி எதுவும் விளங்கிக்கொள்ள முடியாதவாறு எழுதுபவர்கள்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆதியும் அந்தமுமில்லாத – தொட்டோ உணர்ந்தோ கொள்ளமுடியாத 'கடவுள்என்ற ஒரே ஒரு வாசகனுக்காக மட்டும் எழுதுபவர்கள் என்றுதான் கூறுவேன்.

இதுவரை 'தாரகை' வாசகர்கள் சார்பாகவும், ஏனைய இலக்கிய நெஞ்சங்களுக்காகவும் நான் தொடுத்த கேள்விகளுக்கு பொறுமையுடன் மிகவும் அருமையான பதில்களைத் தந்துதவினீர்கள் அதற்காக அவர்கள் சார்பில் வணக்கத்தையும்; நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே என்னிடம் இருந்து இந்தப் பேட்டியை எடுத்து வெளியிடும் 'தாரகை' வெளியீட்டாளர்களுக்கும் எனதுமார்ந்த நன்றி உடையதாகும்.

கருத்துகள் இல்லை: