சனி, பிப்ரவரி 20, 2021

ஏழுபிள்ளை நல்லதங்காள்எங்கள் வீட்டில் இருந்து கூப்பிடு தொலைவில் தென்மேற்குத் திசையில், வெந்த வளவிற்குத் தெற்கால் இருந்தது இராமலிங்கம் அப்பப்பா வீடு. சீதேவி அப்பாச்சிதான் என் நினைவில் முன்னணியில் நிற்பதால் அவர் தான் குடும்ப வண்டியின் சாரதியாய் இருந்திருக்க வேண்டும். அவர்களது கடைசி மகன் யோகநாதன், என் வயதொத்தவன், அவனே ஆரம்ப வயதுகளில் எனக்கு மந்திரியாகவிருந்தவன். பஞ்சமியில் இறந்துவிட்டார் என் பூட்டியின் கடைசித் தங்கை, நாகுட்டியார் பெண்சாதி. இறக்கும்போது அவளுக்கு வயது தொண்ணூறுக்கும் அதிகமாக இருந்திருக்கும். தகப்பனிடம் அடிவாங்கும் எனக்காக அவள் பரிதாபப் பட்டதான மெல்லிய அரைகுறை நினைவுகள் கொஞ்சம் இன்னமும் என்னிடம் எஞ்சியிருக்கின்றன. பிரேதம் எடுத்தவுடன் அந்தப் பஞ்சமிக் குடிலை எரித்துவிடுவார்கள். அங்கே மிஞ்சிய கயிறுகளைச் சேகரித்து நானும் யோகநாதனும் மாடுகட்டி விளையாடியது நன்றாகவே ஞாபகத்தில் உண்டு. அவனுக்கு ஓர் பட்டப் பெயர். ”கட்ட விதான” (கட்டை விதானை).கட்ட விதான வீட்டின் தலை வாசலுக்குள் ஒரு மேசையிருந்தது. படுத்துறங்கும் ஓர் வாங்கில் (கட்டில்) இருந்தது. அங்கிருந்த மேசையில் பலவெல்லாம் இருந்திருக்கக் கூடும். ஆனால் எப்பொழுதும் அந்த வருஷத்திற்குரிய இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் உங்கள் கவனைத்தை நிறைத்துவிடும். அதன் இடைநடுப் பக்கமொன்றில் ”தொடுகுறி சாஸ்திரம்” இருக்கும். 108 எண்களைப் பலகோணக் கூம்பு வடிவத்தில் அடுக்கி வைத்து, ஒவ்வொரு எண்ணுக்குமான பலன்களை அடுத்துவரும் பக்கங்களில் எழுதிவைத்திருப்பார்கள். அந்தத் தொடுகுறி சாஸ்திரப் பக்கத்தை அவர்களது மேசையின் கீழ் இருந்து நாள் முழுவதும் தொடுவதும், பலன்களை எழுத்துக்கூட்டி வாசிப்பதும் எனக்குப் பிடித்தமான விளையாட்டு. பலனில் ‘ஸ்திரீ லாபம்` என்றும் பலவேளைகளில் வரும். பொருள் தெரிந்ததில்லை. கட்ட விதானையின் மூத்த அக்காவிற்கு கல்யாணம் நடந்தது. அவர்கள் வீட்டின் முன்னால் ஒருமுள்முருக்கு ஒன்றை நாட்டி, அதற்கு மஞ்சள் நிறத்தில் ஒரு பொன்-துண்டும் கட்டி நீறு, சந்தனம், குங்கும் போட்டு வைத்திருந்தார்கள். எத்தனையோ ஆண்டுகள் பின்னாடி அகலிகையின் கதைக்கும் இந்த முள்முருக்கு நாட்டுவதற்கும் உள்ள தொடர்ந்து அறிந்தபின்னர், ’இந்திரனின் உடலெங்கும் யோனி’ என்றவுடன் இந்த முள்முருக்கே என் நினைவில் வந்துவிடுகின்றது.

சீதேவி அப்பாச்சி வீட்டில்தான் புகழேந்திப்புலவர் இயற்றிய, ”நல்லதங்காள் கதை”, ”அல்லி அரசாணிமாலை”, ”அபிமன்னன் சுந்தரி மாலை” போன்ற பெரிய எழுத்துப் புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். எல்லாமே புகழேந்திப் புலவர் இயற்றிய, பெரிய எழுத்து என்று அச்சிடப்பட்டிருக்கும். அப்பொழுது உள்ளிருக்கும் பாடல்களைப் படிக்க முயற்சித்ததில்லை. ஆனால் அவற்றில் இருக்கும் படங்களை ப் பார்ப்பதில் கொள்ளை இன்பம். அந்த உருவங்கள் யாவும், அதிகமாகப் பெண் உருவங்கள் பலவும் கட்டையாய், மொத்தமாய்ப் பருமனாய் இருப்பதைப் பார்ப்பதில் அலாதி இன்பம். இந்தப் புத்தகங்களை அவர்கள் வீட்டில் யார் படிப்பார்களோ ? ஆனால் அழிந்துவிடாது என்றும் நினைவில் நிற்கும் இராகத்துடன் , சோகமே உட்பொதிவாக இராமலிங்கம் அப்பப்பா அந்தப் பாடல்களைப் பாடிய ஞாபகமும் இருகின்றது.

’ஏழுபிள்ளை நல்லதங்காள்…’, ’மூளியலங்காரி மொய்குழலாள்…’ என்ற தொடர்களும் நினவில் இருக்கின்றன. இந்த நூல்களைப் படித்தாதலும் கேட்டதாலும், இந்த ஊரவர்கள் பாடும் ஒப்பாரிகளும், பொருள்பொருந்துவதாய், பொருள் பொதிந்தவையாய் இருக்கின்றனவோ என்று நான் சிந்திப்பதுண்டு.இந்தப் பெரிய எழுத்துப் புத்தகங்கள் பற்றி ஆய்வு நூலொன்றை நண்பர் டாக்டர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள் எழுதியிருகின்றார். இலங்கையின் பிற இடங்களில் இந்த வெகுஜன இலக்கியங்கள் பரம்பலடைந்திருந்தனவா…போன்ற தகவல்கள், ஆய்வுகள் நான் காணக் கிடைக்கவில்லை.

1 கருத்து:

J. P Josephine Baba சொன்னது…

அரிய தகவல்கள்.