சனி, பிப்ரவரி 06, 2021

‚மல்லிகை‘ டொமினிக் ஜீவா: அரை நூற்றாண்டு கால எழுத்து இதழியல் ஊழியம்! 40ஆவது இலக்கியச் சந்திப்பின் உயரிய கௌரவம்!

தோழமைக்கும் பெருமதிப்பிற்குமுரிய டொமினிக் ஜீவா அவர்களை, அவரது அயராத உழைப்பிற்கும் அதன் சமூக முக்கியத்துவத்திற்குமாக கௌரவம் செய்து, எமது ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்துவது முக்கிய கடமை எனக் கருதுகிறோம்!

டொமினிக் ஜீவா நமது சமூக, பண்பாட்டு, எழுத்து செயற்பாட்டில் அரை நூற்றாண்டிற்கும் மேலான பங்களிப்புடைய போராளி! காயங்களையும் வலிகளையும் தாங்கி ஓங்கி ஒலித்த குரல் ஜீவாவுடையது. 'மல்லிகை ஜீவா' என்கின்ற ஒரு இயக்கத்திற்கு நாம் செய்ய வேண்டிய சமூகக் கடமையில் இந்த நிகழ்வு ஒரு சிறு துளியானதே!

இனம், மதம், சாதி, பால், பிரதேச, மேலாதிக்க, அனைத்துவகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக புகலிட நாடுகளில் மாற்றுக் குரலாக செயற்பட்டு வரும் 25 வருட வரலாற்றைக் கொண்ட 'இலக்கியச் சந் திப்பு அரங்கு', அதே மூல நோக்கினை தனது வாழ்நாள் இலட்சியமாகவும் நாளாந்தப் பணியாகவும் கொண்டிருந்த ஜீவா என்கின்ற அந்த மகத்தான வரலாற்று மனிதனை கௌரவிப்பதானது, எம்மில் ஒருவரை கௌரவம் செய்வது என்கின்ற அரசியல் தெளிவுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் இன்று நடைபெறுகிறது.

தோழர் டொமினிக் ஜீவா அவர்களே! உங்கள் அர்ப்பணத்திற்கும் ஓர்மத்திற்கும் முன் நாம் தலை தாழ்த்தி நிற்கிறோம். அதே நேரம் நமது சமூக, அரசியல் தளத்தில் மிகப் பெரும் பங்களிப்பினை வழங்கிய ஒரு மனிதனை, ஒரு தொடர்ச்சியான இயக்கத்தை கௌரவிப்பதற்கு, 'சாதியத்தின் பெயரால்' முடியாதுள்ள சாதிய மேலாதிக்கத்தை அதன் வரலாற்றுக் குருடையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்! இத்தகைய மேலாதிக்கப் போக்குகளை சதா நிராகரித்தும் மறுத்தோடியும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புவதை நமது பணிகளில் முதன்மையானதாகவும் கருதுகிறோம்!ஜீவா அவர்களின் அரை நுாற்றாண்டுப் பணி நம் கண் முன் உள்ளது. 89 வயது, மல்லிகை 401 இதழ்கள், சிறுகதையாசிரியர், இதழியலாளர், பதிப்பாளர், சமூக செயற்பாட்டாளர், அரசியல் கருத்தாளர், பேச்சாளர், விமர்சகர், சுயசரிதையாளர் என டொமினிக் ஜீவா அவர்களின் பங்களிப்பு பன்முக ஆளுமை நிறைந்தது.

நமது தமிழ் எழுத்தியக்க சமூக வரலாற்றில், உற்சாகமும் தன்னம்பிக்கையும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான துணிச்சல்மிகு போர்க்குணாம்சம் கொண்ட வரலாற்று மனிதனாக தனது வாழ்வினை வரித்துக் கொண்ட ஜீவாவின் வரலாறு, ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் மனிதர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகும்.

'சாதியம்' என்னும் மனித சமத்துவத்திற்கு எதிரான கொடூரம், பாகுபாடு டொமினிக் ஜீவாவின் உழைப்பினை மதிப்பதற்கும் அவருக்குரிய இடத்தினை வழங்கத் தடுப்பதற்கும், சமூகப் பொதுத் தளத்தில் பெரும் ஆதிக்க அதிகாரமாக நிலைபெற்றிருக்கிறது. குறுக்கீடும் ஒதுக்கலும் கண்டு கொள்ளாமையும் புறக்கணிப்புமென நிகழ்த்திக் காட்டப்படு கிறது.

'வாழ்நாள் உழைப்பிற்கும் அர்ப்பணத்திற்குமாக' இதுவரையான பங்களிப்புகளை நேர்மையுடன் கணக்கீடு செய்து, நமது தமிழ் வாழ்வில் ஒரு மனிதனை, ஒரு பங்களிப்பாளனை கௌரவிக்க வேண்டுமென நினைத்தால், அதற்கான முழுத் தகுதியும் முன் உரித்தும் வாழ்ந்து கொண்டிருப்போரிடையே டொமினிக் ஜீவா அவர்களுக்கே உள்ளது. ஈழத்து தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, உலகளாவிய தமிழ்மொழிச் சூழலில் ஜீவாவே இந்த கௌரவிப்புக்கு தகுதியான முதலாமவர்.

மொழி, கலை, பண்பாடு, எழுத்து என்கின்ற தளத்தில் ஜீவா அவர்களே வயதினாலும் வாழ்நாளினாலும் தளராத பணியாலும் நம்முன் உள்ளார். ஆனாலும் ‚வாழ்வை விட வலியது சாதி' என்கிற மேலாதிக்கமிகு சாதிய அதிகாரம் ஜீவாவிற்குரிய இடத்தினை வழங்க மறுத்தது, மறுக்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்க மறுத்த கௌரவம் வரலாற்றுக் கறைக்குரியது. இதுவரை டொமினிக் ஜீவா அவர்களுக்குரிய கௌரவத்தினையும் மதிப்பினையும் வழங்க மறுத்து நிற்கின்ற சமூக, கல்வியியல் நிறுவனங்களின் அரசியலை ஜீவா துணிச்சலுடன் எதிர்கொண்டு நின்ற உறுதிநிலை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கௌரவத்தினைத் தந்தது. சாதிய மேலாதிக்கத்தின் கரிய முகத்தினை உலகிற்கு அம்பலப்படுத்தியது.

„ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்“ஒடுக்கப்பட்ட மக்களின் பெயரால், நமது பெருமதிப்பிற்குரிய ஜீவா அவர் களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியைக்கண்டு, மானிட குலத்தை சமத்துவமாக நேசிக்கும் உள்ளங்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றன.

கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்புலத்திலிருந்து வந்து, பொதுவுடைமைவாதியான மு.கார்த்திகேசன் மாஸ்டரைத் தனது அரசியல் முன்னோடியாக வரித்து, 'இழிசனர் இலக்கியம்' என அடையாளப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் கதைகளை எழுதியவர் ஜீவா! அவரது எழுத்துக்கள் சாதாரண மக்களின் பாடுகளைப் பேசியதுடன், அவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிக்கெதிரான வீச்சான உணர்வுகளையும் மனித நீதியை நிலைநாட்டப் போராடும் கலகக் குரலையும் தன்னகத்தே ஒருங்கேகொண்டவை. 'மல்லிகை இதழ்' இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒடுக்கப்படுகின்ற அனைத்து மக்களின் குரலாகவும் அதற்கான விளைநிலமாகவும் இருந்தது. ஒடுக்குமுறையாளர்களுடன் சமரசம் என்பதே ஜீவாவின் வாழ்வில் இருந்ததில்லை.

மல்லிகை இதழ் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒடுக்கப்படுகின்ற அனைத்து மக்களின் குரலாகவும் அதற்கான விளை நிலமாகவும் இருந்தது அவரது அரசியல் பார்வையையும் வழிமுறையையும் பொறுத்தவரை அவர் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் இணைந்த வாழ்வையும், இன அரசியல் வழிமுறையை முன்னிலைப்படுத்தாத நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடிய, இனவாதத்திற்கெதிராக எழுதிய, பேசிய அனைவரையும் ஜீவா நேசித்தார். இந்தக் கருத்தியலுக்கு அமைய சிங்கள மக்களிடமிருந்து வந்த சிங்கள மூலமொழிப் படைப்புகளை, தனது மல்லிகை ஊடாக தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். மல்லிகையில் முஸ்லிம், மலையக மக்களின் படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து களம் தந்தார்.

அம்பேத்கார் அவர்களின் நூற்றாண்டையொட்டி 1990களில் தமிழ்ச் சூழலில் மேற்கிளம்பி வந்த 'தலித் எழுத்து கருத்தியல் அடையாளம், ஈழத்தில் 1960, 1970 களில் தொடங்கி ஒரு பெரும் எழுத்தியக்கமாக செயற்பட்டது என்பதற்கு டானியல், டொமினிக் ஜீவா அவர்களின் எழுத்துக்கள் சான்று பகர்கின்றன. தமிழில் தலித்திய எழுத்தியக்கத்திற்கு ஜீவாவின் பங்களிப்பு கணிசமானது.

டொமினிக் ஜீவா அவர்களின் சுயசரிதமான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' தலித் செயற்பாட்டாளர்களுக்கும் சமூகப் போராளிகளுக்குமான துணிச் சல்மிகு வாழ்வுப்பிரதி. இப்பிரதி ஜீவாவின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, சாதியக் கட்டுமானம் மிகுந்த சமூகத்தின் முகத்தை ஆவணப்படுத்தியுள்ள ஒரு தலித் போராளியின் வாழ்வும் அனுபவமும் கூடி வந்த ஒரு பிரதியாகவும் உள்ளது. இதுவரை வெளியாகி உள்ள ஈழத்தமிழ் பிரதிகளில் ஜீவாவின் சுயசரிதம் தனித்த ஒரு இடத்தினை கொண்டது.

சாதியத்தின் பெயரால் பெரும்பான்மையான மூத்த தலைமுறையாலும், நமது காலகட்ட தலைமுறையாலும் ஒதுக்கப்பட்டு வந்த இத்தகைய பிரதிகள், 1990க்குப் பின் எழுத்துத்துறைக்கு வந்த இளைய தலைமுறையாலும் சரியாக வாசிப்பு செய்யப்படவில்லை. ஜீவா போன்றவர்களின் எழுத்துத் தன்மை குறித்தும், அதன் அழகியல் குறித்தும், அவரது இதழியல், மற்றும் பதிப்பு பணி குறித்தும் ஒரு மறுவாசிப்பு பார்வை மேற்கிளம்பவில்லை. இன்னொரு வகையில் சொல்வதானால் புதிய இளைய தலைமுறையின் பெரும்பான்மையான பகுதியினர் இந்த வகை எழுத்துக்களை - பிரதிகளை கண்டு கொள்ளவில்லை. இதற்கு ஒருவகையில் தேசிய இனப்பிரச்சினையும், அதன் பாற்பட்ட எழுத்துக்கள் எழுதப்படும் காலகட்ட சூழலும் காரணம் என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படலாம். ஆனாலும் தமிழ் தேசியப் பிரச்சினையில், தலித் மக்களின் இடம் தொடர்ந்தும் மறுக்கப்படுவதே இந்த நிலைக்கான பிரதான கார ணமாகும். தலித் எழுத்துக்கள் மீதான அதிகக் கவனக் குவிப்பும் அது தொடர்பான வாசிப்புப் பெருக்கமும் ஈழத் தமிழ் சூழலையொட்டி நிகழாதது பெரும்குறைபாடே.

டொமினிக் ஜீவா அவர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்வில் ஈழத் தமிழ்ப்பரப்பில் வெளியான தலித் படைப்புகள் மற்றும் விளிம்பு நிலை படைப்புகளை முற்கற்பிதங்களைக் கடந்து வாசிப்பு செய்வது அவசியமானது என்பதனை வலியுறுத்துகிறோம். அப்படி வாசிக்கப்படுவது தொடங்கப்படுமானால் பல வாசல்கள் திறக்க வாய்ப்புள்ளது. நிறைவாக, இந்த உயரிய கௌரவத்திற்கும் வரலாற்றுப் பதிவிற்கும் டொமினிக் ஜீவா அவர்கள் முழுப்பெறுமதி உடையவர், அந்த வரலாற்று மனிதனை கௌரவிப்பதனுாடாக இலக்கியச் சந்திப்பு அரங்கு பெருமிதமடைகிறது.

40வது இலக்கியச்சந்திப்பு - லண்டன்
6-7, ஏப்ரல் 2013

கருத்துகள் இல்லை: