வெள்ளி, ஏப்ரல் 23, 2021

ஈழத்தின் நவீன தமிழ்ப் படைப்பிலக்கிய வரலாற்றில் கே. டானியல் ஒரு திறனாய்வு நோக்கு****************பேராசிரியர் நா. சுப்பிரமணியன்*****************

[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்மன்றம் 23.03.1994 அன்று நிகழ்த்திய எழுத்தாளர் கே.டானியல் நினைவு அரங்கில்நிகழ்த்தப்பட்ட உரை. மல்லிகையின் இரண்டு இதழ்களில் (மே 1994, ஜூலை 1994)வெளியானவை இங்கே மீளப் பதிவாகின்றது. ]

கணேசலிங்கனின் நாவல்கள் 50-70 காலகட்ட சமுதாயவரலாற்றுப் போக்கைச் சித்திரிப்பன. பஞ்சமர் வரிசை நாவல்கள் மேற்படி காலப்பகுதியை உள்ளடக்கி, அதற்கும் முன்னாக ஏறத்தாழ இந்த நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முற்பட்ட காலப்பகுதி தொட்டு அமையும் சமுதாய லரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் வகையில் பார்வை வீச்சுக் கொண்டு திகழ்வனவாகும். குறிப்பாக அடிமைகள் நாவல் 1890-1956 காலகட்ட வரலாறாக அமைந்தது. 'கானல்’, ’தண்ணீர்’ நாவல்களின் கதை நிகழ்ச்சிகள் இந்த நூற்றாண்டு தொடக்கப் பகுதியிலிருந்து தொடர்கின்றன. மூன்று, நான்கு தலைமுறைகளின் வரலாறுகள் இவற்றில் விரிகின்றன.

கணேசலிங்கனின் படைப்புக்களிலிருந்து டானியலின் பஞ்சமர் வரிசை நாவல்களை வேறுபடுத்தி நிற்கும் மற்றொரு முக்கிய கூறு இவரது சமூக அனுபவ நிலைகள் ஆகும். கணேசலிங்கனுக்கு அடக்குமுறைக் கொடுமை என்பது வாழ்வியல் அனுபவம் அல்ல. அது அவரது பொதுவுடைமைப் பார்வையினூடாகப் புலப்படும் ஒரு காட்சி மட்டுமே. கண்டும் கேட்டும் உணர்ந்ததைக் கருத்து நிலைப்படுத்தி கதை அமைத்து அவர் நாவல் புனைந்தார். ஆனால் டானியலுக்குப் பஞ்சமர் பிரச்சினை என்பது வாழ்க்கையின் அநுபவ தரிசனம் ஆகும். தான் பிறந்த சமூக நிலையாலும் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களின் அடிநிலை மாந்தரின் வாழ்க்கை நிலைகளோடும் கொண்ட நேரடித் தொடர்புகளாலும் தீண்டாமை ஒழிப்புக்கான வெகுஜனப் போராட்டத்தில் பங்கு கொண்டமையாலும் அவர் பெற்றிருந்த அனுபவத்தெளிவு அது.


“…இந்தப் பஞ்சமரில் நானும் ஒருவனாக நிற்கின்றேன். அறிவறிந்த பருவம் முதல் இன்றுவரை இந்த மக்கட் கூட்டத்தினரின் பிரச்சினைகளிற் பங்கு கொண்டு, இவர்கள் துன்பப்பட்டுக் கண்ணீர் விட்டபோதெல்லாம் சேர்ந்து கண்ணீர்விட்டு, சிறு சிறு வெற்றிகள் கண்டு மகிழ்ந்தபோதெல்லாம்சேர்ந்து மகிழ்ந்து பெற்றுக் கொண்ட அனுபவங்களோ எண்ணிக்கை யற்றவை,…”
என அவர் கூறியுள்ளவை ('பஞ்சமர் உள்ளே நுழைவதற்கு முன்...') இத்தொடர்பில் நமது கவனத்துக்குரியன. டானியல் அவர்களுக்கு இருந்த இந்த அனுபவத் தெளிவு பஞ்சமர் வரிசை நாவல்களுக்குத் தனியான கன பரிமாணத்தைத் தந்துள்ளமையை உய்த்துணரமுடிகின்றது. இந்நாவல்களின் சம்பவங்களில் இருந்து கதையம்சத்தை உருவாக்குவதில் திட்டப்பாங்கான அமைப்புக்கு அதிக இடம் இல்லை. ஆசிரியரின் கற்பனைத் தொழிற்பாட்டிற்கு அதிக அவசியம் இருக்கவில்லை. சமூக வரலாற்றுப் போக்கில் பல்வேறு கட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்களைப் பொருத்தமுற இணைப்பதன் மூலம் - அவற்றினூடாகப் புலப்படும் சமூக அசைவு இயக்கத்தை உணர்த்துவதன் மூலம் இந்நாவல்களுக்கான கதையம்சத்தை டானியல் அவர்களால் புலப்படுத்திவிட முடிகின்றது. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நிஜமான சமூக மாந்தரைப் பெயர் மாற்றங்களுடன் நடமாட வைப்பதன் மூலமும் பல்வேறு கிராமப்புறங்களின் நடைமுறை வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், உணவுமுறை, பொழுது போக்குகள், சடங்கு-சம்பிரதாயங்கள் முதலியவற்றை இயற்பண்புடன் சித்திரிப்பதன் மூலமும் ஒரு, உயிரோட்டமான - நிஜமான -- சமூக வரலாற்றை டானியல் அவர்களால் காட்சிப்படுத்திவிட முடிகின்றது. வாழ்க்கையிலிருந்து கலை உருவாகின்றது என்ற நிலைக்குப் புறம்பாக வாழ்க்கையே கலையாகிவிடும் நிலையை பஞ்சமர் வரிசை நாவல்களில் தரிசிக்க முடிகின்றது.

"…வாழ்க்கை - கலை இவற்றின் எல்லைக் கோடுகள் அழிந்து இரண்டும் இரண்டறக் கலந்து மெய்மையாக நூலைநிறைத்துள்ளன…" எனப் பேராசிரியர் க. கைலாசபதி பஞ்சமர்-முதற்பாகம் தொடர்பாக முன்வைத்துள்ள கணிப்பு. (தினகரன் வாரமஞ்சரி, 1972.10.22; பக். 10) பஞ்சமர் வரிசை நாவல்கள் அனைத்திற்குமே பொருந்தக்கூடிய கணிப்பாகும். பஞ்சமர் வரிசை நாவல்கள் அனைத்தினதும் பொதுவான கதையம்சத்தைப் பின்வரும் இரு கூறுகளுக்குன் அடக்கிவிடலாம்.

(அ) உயர்சாதியினர் எனப்படுவோர் தாழ்த்தப்பட்டோர் மீதுநிகழ்த்தி வந்துள்ள பல்வேறு நிலைக் கொடுமைகளின் விவரணம்
(ஆ) அவற்றுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டோரும் மனிதநேயம்கொண்ட உயர்சாதியினர் எனப்படுவோரும் இணைந்து மேற்கொள்ளும் எழுச்சி சார்ந்த நடவடிக்கைகளின் விவரணம்.

முதல் நாவலான பஞ்சமரில் இந்த இரு கூறுகளும் நேரடியாகவே கதையம்சமாக விரிகின்றன. உயர் சாதியினர் எனப்படுவோரில் சாதித்திமிர், அதனால் அவர்கள் புரியும் அட்டூழியங்கள் என்பன தொடர்பான பல கதைகள், செய்திகள் என்பவற்றையும் தாழ்த்தப்பட்டோரின் வர்க்க ரீதியான எழுச்சியையும் இந்நாவல் கட்டம் கட்டமாக விவரித்துச் செல்கிறது. “கோவிந்தன்'' நாவலிலே சாதித்திமிர் பிடித்த ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி சித்திரிக்கப்படுகின்றது. பஞ்சமரின் எழுச்சிக்குமுன் சாதித்திமிர் நிலை' தளர்ந்து போவதாகக் காட்டுவது இந்நாவலின் அகநிலையான கதையம்சம். ஆனால் புறநிலையிலே "சாதி மீறிய காதல் - பாலியல் உறவு'' என்ற அம்சத்தை முதன்மைப்படுத்தியதாக இந்நாவல் அமைந்துள்ளது. "அடிமைகள்” நாவலும் கோவிந்தனைப் போலவே வேளாளகுலக் குடும்பம் ஒன்றின் வீழ்ச்சியைப் பேசுவது. நிலம், புலம்,சொத்து, அதிகாரம், அடிமை-குடிமை என்பவற்றுடன் ராசவாழ்வு நடத்திய அக் குடும்பம் கேளிக்கைகள், ஆடம்பரங்கள், சண்டித்தனங்கள் முதலியவற்றால் சீரழிந்து செல்வதை நான்கு தலைமுறை வரலாற்றினூடாக இந்நாவல் காட்டியமைகின்றது. “கானல்'' நாவலின் கதையம்சம் மேற்கூறியவற்றினின்று சற்று வேறுபட்டது. தமிழர் மத்தியிற் பரவிய கிறிஸ்தவ மதம் சாதிப்பிரச்சினைக்குத் தீர்வு காட்டும் ஒன்றாக அமைந்ததா? என்ற வினா எழுப்பி விடைகாணும் நோக்கில் - விமர்சிக்கும் நோக்கில்-இது அமைகின்றது.

சாதி ஏற்றத்தாழ்வுப் பிரச்சினையில், குடி தண்ணீர் பெறுவதில் தாழ்த்தப்பட்டோர் எய்தும் அவலங்களை மையப்படுத்திக் கதைப்பொருள் கொண்ட மைந்தது ”தண்ணீர்” நாவல். தாழ்த்தப்பட்டோரின் சமத்துவம் நோக்கிய எழுச்சி வரலாற்றுடன் தமிழரின் இனவிடுதலைக்கான இயக்கங்களின் உருவாக்க சூழலை இணைத்துப் புனையப்பட்ட நாவல் ”பஞ்சகோணங்கள்”. தாழ்த்தப்பட்டோரின் எழுச்சி மேற்படி சூழலில் எத்தகு பாதிப்புக்களை எய்திற்று என்பதை இந்நாவல் மூலம் டானியல் உணர்த்த விழைகின்றமை புரிகின்றது. மேற்குறித்தவாறான பஞ்சமர் வரிசை நாவல்களின் கதைகள் நிகழ்களங்கள் என்ற வகையில் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல்வேறு கிராமப்புறங்களும் டானியலின் பார்வைப் பரப்புக்குள் வந்துள்ளன. குறிப்பாக பஞ்சமர் நாவலின் கதை நந்தாவில், வட்டுக்கோட்டை முதலிய கிராமங்களில் நிகழ்ந்தது.

'கோவிந்தன்' நாவலின் முக்கிய களம் சுதுமலை. ’அடிமைகள்' நாவல் மந்துவில், புத்தூர், சுட்டிபுரம் ஆகிய கிராமங்களில் நிகழ்கின்றது. 'கானல்' தாவடி, சின்னக்கலட்டி, திருநெல்வேலி ஆகிய கிராமங்களைக் களமாகக் கொண்ட ‘தண்ணீர்' வட மராட்சிப் பகுதியை-குறிப்பாகக் கரவெட்டியை மையப்படுத்தியது. 'பஞ்சகோணங்களின்' கதை நிகழ் களங்களாக புன்னாலைக்கட்டுவன், கட்டுவன்,உரும்பிராய், சுன்னாகம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்நாவல்களின் கதை நிகழ் களங்களைப் போலவே நிகழ்கால எல்லைகளும் விரிவானவையாகும் பஞ்சமர் நாவல் நிகழ்வுகள் 1956-1969 காலப்பகுதிக்குரியன. இக்காலப் பகுதியை அடுத்து தமிழின விடுதலைப் போராட்ட இயக்கங்கள் உருவான காலம் வரையான ஆண்டுகளில் ஏறத்தாழ 1970-1980 களில் -பஞ்சகோணங்கள் கதை நிகழ்கின்றது என்பது அந்நாவலின் முன்னுரையால் உய்த்துணரப்படுவது. ஏனைய நான்கும் இந்த நூற்றாண்டின் முற்பகுதி சார்ந்தனவாகும். குறிப்பாக கோவிந்தன்1920-1965 காலப்பகுதியையும், அடிமைகள் 1890-1956 காலப்பகுதியையும் கதை நிகழ்காலமாகக் கொண்டவையாகும். இவை எல்லாவற்றையும் தொகுத்து நோக்கும்போது சாதிப்பிரச்சினையை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புக்களின் வரலாற்றில் கதையம்சப் பரப்பு, பிரதேசப் பரப்பு, காலப் பரப்பு ஆகியவற்றில் பஞ்சமர் வரிசை நாவல்கள் முன்னைய ஆக்கங்களைவிட மிக விரிவானவையாக தனிக் கவனத்திற்குரிய கனபரிமாணங்கள் கொண்டவையாகத் திகழ்கின்றமை தெளிவாகும்.

    திறனாய்வு நோக்கில் பஞ்சமர் வரிசை நாவல்கள்


திறனாய்வு நோக்கு என்ற வகையில் இந்நாவல்களின் தொனிப்பொருள், கட்டமைப்பு, கதைமாந்தர் சித்திரிப்பு என்பன தொடர்பான சில சிந்தனைகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன. இந்நாவல்கள் அனைத்தும் அடிநிலை மக்களான பஞ்சமரின் விடுதலை வேட்கையை அடிநாதமாகக்கொண்டவை தெளிவு. யாழ்ப்பாணச் சமூகத்தில் பல்வேறுபட்ட அடக்குமுறைகட்கும் உட்பட்டிருந்த மக்கள் சமூகத்தினர் அறிவும் உணர்வும் பெற்றுக் , கட்டம் கட்டமாகத் தங்களைப் பிணித்திருந்த தளைகளை அறுத்தெறிந்து வந்த வரலாற்றின் பக்கங்களாகவே - வரலாற்றுக் காட்சிப் படிமங்களாகவே - இந்நாவல்களின் கதையம்சங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறுகாட்சிப்படுத்தும் நிலையில் தொடக்கத்தில் தமது சமகால நிகழ்வுகளை மையப்படுத்தி பஞ்சமர் 1ம், 2ம் பாகங்களை எழுதிய டானியல் அவர்கள் பின்னர் வரலாற்றில் பின்னோக்கிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. பஞ்சமர் நாவல் 1956 - 69 காலப்பகுதி நிகழ்வுகளைக் கூற, கோவிந்தன், அடிமைகள், கானல் தண்ணீர் என்பன இந்த நூற்றாண்டின் முற்பகுதிக்கும் அதற்கும் அப்பால் கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கும் எம்மை அழைத்துச் செல்கின்றமை மேலே நோக்கப்பட்டது.

பஞ்சகோணங்கள் மட்டுமே பஞ்சமருக்குப் பிற்பட்ட நிகழ்வுகளுக்கு எம்மை இட்டுச்செல்கிறது. எனவே அடிநிலை மாந்தரின் விடுதலை என்ற மையச் சரட்டில் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் கால சமூக வரலாற்றுப்போக்கை இலக்கியமாகப் பதிவு செய்வது டானியல் அவர்களது நோக்கம் என்பது புலனாகின்றது. அதேபோல அடிநிலை மாந்தரின் விடுதலையுணர்வை முன்னெடுக்கும் நோக்கிற்கு வலுவூட்டத்தக்கவகையில் எதிர்மறையாக உயர்சாதியினர் எனப்படுவோரின் அகநிலைக் குறைபாடுகள் எனத் தான் அறிந்தவற்றை விவரிக்கும் ஆர்வமும் அவருக்கு இருந்ததை இந்நாவல்கள் உணர்த்துகின்றன. குறிப்பாகக் கோவிந்தன், அடிமைகள் என்பவற்றின் முக்கிய கதையம்சங்களில் இதனைத் தெளிவாக அவதானிக்கலாம். எனவே அடிநிலை மாந்தரின் விடுதலை வேட்கை, உயர்சாதியினர் எனப்படுவோரின் உள்ளார்ந்த குறைபாடுகள் என அறியப்பட்டவற்றை விவரிக்கும் ஆர்வம் ஆகிய இரண்டும் பின்னிப் பிணைந்த ஒரு உணர்வுந்துதலின் இலக்கிய வெளிப்பாடுகளாகவே 'பஞ்சமர்’ வரிசை நாவல்கள் அமைகின்றன என்பது நமது சிந்தனைக்குரியதாகும்.
மேற்சுட்டிய பொதுவான உணர்வுந்துதலின் ஊடாக டானியல் அவர்களால் விமர்சிக்கப்படும் விடயங்கள் இங்கு நமது கவனத்துக்குரியன. எல்லா நாவல்களிலும் பொதுவான விமர்சனத்துக்குள்ளானது சாதியமைப்பும் அதனோடு தொடர்புடையதாகக் கொள்ளப்படும் வர்க்க அமைப்பும் என்பது தெளிவு. கானல், பஞ்சகோணங்கள் ஆகிய நாவல்களில் சிறப்பாக முறையே கிறிஸ்துமத மாற்ற முயற்சிகள், தமிழின உணர்வினடிப்படையிலான இயக்க -- எழுச்சிகள் ஆகியனவும் விமர்சனத்துக்குள்ளாகின்றன.

சமயசாதியமைப்பைக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணப் பிரதேச சமூகக் கட்டமைப்புக்கு அடிப்படையான நம்பிக்கையாகச் சைவசமயம் திகழ்ந்து வந்திருப்பது வெளிப்படை. எனவே சாதியமைப்பின் பாதிப்பிலிருந்து விடுபட விளைபவர்களுக்கு ஐரோப்பியர் ஆட்சியில் இங்கு அறிமுகமான கிறிஸ்தவ சமயம் ஒரு விடி வெள்ளியாக -- நம்பிக்க நட்சத்திரமாகத் தோன்றியது என்பது வரலாற்றில் உய்த்துணரப்படுவது. ஆனால் அந்த நம்பிக்கை ஒரு 'கானல் நீர்' தான் என்பது கானல் மூலம் டானியல் முன்வைக்கும் விமர்சனம். இதிலே கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகள் சரி என்றோ அல்லது தவறு என்றோ டானியல் அவர்கள் வாதிக்க முற்படவில்லை. அவர் உணர்த்த விழைந்த செய்தி ஒன்று தான். அதாவது மனிதனில் அடிப்படையான மனமாற்றம் நிகழாமல் மதமாற்றத்தால் மட்டும் எதையும் செய்துவிட முடியாது என்பதே அந்தச் செய்தி. கிறிஸ்தவ தேவாலயத்திலும் சாதி வேறுபாடு காட்டப்படும் சமூக யதார்த்தமும் 'படகினி'' எனச் சிங்களத்தில் சுட்டப்படும் ’வயிற்று நெருப்பு' க்கு -வறுமைக்கு- மதமாற்றம் தீர்வாகவில்லை என்பதும் நாவலின் மேற்படி செய்திக்கு ஆதாரமாக அமைகின்றன. ஐரோப்பியர் இலங்கைக்கு அடியெடுத்து வைத்து 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட போதும் அவர்களால் யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பின் அடிப்படை எவ்வகைமாற்றத்தையும் எய்தவில்லை என சமூகவியலறிஞர்கள் பொதுவாகத் தெரிவிக்கும் ஒரு கருத்தாகும். (பார்க்க: பேராசிரியர் கா. சிவத்தம்பி. யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனக் கருத்தரங்கு உரை 17.03.1994, பக்.3-4).

சமூகவியலறிஞர்களின் ஆய்வு பூர்வமான இக்கருத்துக்கு எவை அடிப்படையோ அவையே டானியல் அவர்களது மேற்படி நாவலின் தொனிப்பொருளுக்கும் அடிப்படைகளாகின்றன என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக ஈழத்தமிழர் தம் உரிமைகளை மீட்கும் நோக்கில் ஆயுதம் தாங்க முற்பட்டு ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகின்றன. இவ்வகையில் உருவான இயக்க நிலைப்பட்ட எழுச்சியானது தமிழர் தமக்குள் ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ நிலையைப் பேணிக் கொண்டு ஒற்றுமைப் பட்டுச் செயற்படும் நிலையிலேயே நிறைவான பயனைத்தரும். விடுதலை என்ற சொல்லும் அர்த்தமுடையதாகும். டானியல் அவர்கள் பஞ்சகோணங்கள் நாவல் மூலம் உணர்த்த விழைந்த கருத்து இது என்பது எனது ஊகம். ஆனால் இன உணர்வடிப்படையிலான இயக்கங்களின் எழுச்சி அடி நிலை மக்களின் விடுதலை வேட்கையை உரிமைக் கோரிக்கைகளை மழுங்கடிக்கும் முயற்சியாக, தாமதப்படுத்தும் முயற்சியாக, திசைதிருப்பும் செயற்பாடாகத் தோற்றம் தருகின்றது என்பது இந்நாவலின் கதைப்போக்கில் புலப்பட்டு நிற்கும் செய்தி.

ஏறத்தாழ பதினைந்தாண்டுகட்கு முற்பட்ட காலப்பகுதியில் பல்வேறு இயக்கங்கள் உருவாகிக் கொண்டிருந்த சூழலில், அடிநிலை மக்களின் சமத்துவம் சார்ந்த உரிமைக் கோரிக்கைகளும் இயக்கங்களின் இனவிடுதலை உணர்வுகளும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த சந்தர்ப்பங்களைப் பொருத்திக்காட்டி அவற்றில் இன உணர்வெழுச்சி முனைவதைத் தாமதப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முனைவதாக உணர்த்திக் கதை வளர்த்துச் செல்லப்படுகின்றது. இதன் சமூக யதார்த்தம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு 1980 க்கு முன் பின்னான ஆண்டுகளின் இயக்கங்கள் பலவும் உருவான சூழலின் சமூகச் செய்தி நுனித்து நோக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கு இவ்வுரையில் வாய்ப்பில்லை (தனியானதொரு ஆய்வில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயம் அது.) ஆனால் இங்கு நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் 1984 இல் இந்நாவல் எழுதப்பட்டபோது இதனை எழுதுவதற்கு அடிப்படை டானியல் அவர்கள் கொண்டிருந்த உணர்வு நிலையாகும். இதனை அவரது முன்னுரை தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. சாதிப்பிரச்சினை தொடர்பாகத் தொடர்ந்து எழுதிவரும் தன்னை நோக்கி, இனப்பிரச்சினை பற்றி ஏன் எழுதவில்லை?என்ற வினா எழுந்துள்ளதாகக் குறிப்பிடும் அவர், இவ்வினாவை எழுப்புபவர்கள் தன்னை,

”…தாழ்ந்தவர்களின் வஞ்சிக்கப்பட்டவர்களின் அன்றாடங் காய்ச்சிகளின் அடிமைப்பட்டவர்களின் வயிற்றுச் சோற்றுக்காக ஆலாய்ப்பறப்பவர்களின் பக்கம் நின்று எழுதுவதிலிருந்து…” தடுத்துவிடும் நோக்கமுடையவர்கள் என்றும்,

”…இன்றைய தமிழர் இயக்கங்களுக்குக் கணிசமான அளவு ஒரு பிரிவு மக்கள் அந்நியப்பட்டு நிற்பதற்கான காரண காரியங்களை உண்மை நிகழ்வுடன் சித்திரிப்பது எனது கடமையாகப்பட்டது…” என்றும் தனது உணர்வு நிலையை முன்னுரையில் உணர்த்துகின்றார். (பக்.5-6). இவற்றிலே இரண்டாவது கூற்று தொடர்பான சமூக யதார்த்தம் மேற்சுட்டியதைப் போல 1980 களுக்கு முன்பின்னான காலகட்டத்தின் சமூகச் செய்திகள் ஊடாக நோக்கித் தெளியப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் முதலாவது கூற்றுத் தரும் கருத்து விவாதத்துக்குரியதாகும். ”டானியல் கதைமாந்தரில் சமூக மெய்ம்மை'' என்ற தலைப்பில் இந்த உயர் நிலை ஆய்வு நிகழ்த்தப்படலாம். இத்தொடர்பில் எனது இப்போதைய அறிவுத் தளத்திலான விமர்சனக் குறிப்பொன்றை இங்கு முன்வைக்க விழைகின்றேன். குறித்த ஒரு மேற்படிக் கதை மாந்தர் பண்பு அமைந்தால் அதற்கான அடிப்படை சமூகத்தில் உள்ளது தான் என வாதிடலாம். ஆனால் பல்வேறு படைப்புக்களிலும் அவ்வாறான கதை மாந்தர் பண்பு மீண்டும் மீண்டும் காட்சிக்கு வரும்போது அப்பண்பு அச் சமூகத்தில் தவிர்க்க முடியாதவாறு உள்ளுறைந்துள்ள – சுட்டிக் காட்டப்படவேண்டிய முக்கியத்துவம் உடைய ஒரு கூறாக இருக்க வேண்டும். இது அவ்வாறு உள்ளதா? அன்றேல் டானியல் அவர்கள் பார்வை இவ்வாறான பண்புள்ளவர்களில் மட்டுமே பதிகின்றதா? இவையே எம்முன் நிற்கும் லிவாதம்.

"…என்னுடைய பஞ்சமரில் வந்த கமலாம்பிகை அம்மாளும், மாம்பழத்தியும் அப்படிப்பட்டவர்களாகப் பிறந்து விட்டதற்காக நீங்கள் ஏன் இப்படி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறீர்கள்? நான் பஞ்சமரைப் படைத்தது சகல வசதிகளும் கொண்ட கமலாம்பிகை அம்மாளினதும் மாம்பழத்தியினதும் ஒழுக்கக் கேட்டுக்கான பெரும் சுகபோக ஏகபோகத்தை அம்பலப்படுத்துவதற்கேயன்றி...”

என டானியல் அவர்கள் ' என்கதை' நூலில் தந்துள்ள தன்னிலை விளக்கம். அவருக்கு கமலாம்பிகை. மாம்பழத்தி முதலியவர்களின் ஒழுக்கக் கேடுகளையும் அவற்றுக்கான காரணிகளையும் அம்பலப்படுத்தும் உள்நோக்கம் இருந்தமையைத் தெளிவுறுத்தும். பஞ்சமர் தவிர்ந்த ஏனைய நாவல்களின் கதைமாந்தருக்கும் இது பொருந்தும் என்பது உய்த்துணரப்படத்தக்கது. எனவே டானியல் அவர்கள் சமூகத்திலிருந்து இயல்பான - சமூக யதார்த்தத்தை இயல்பாக எடுத்துக்காட்ட வல்ல - கதைமாந்தரைக் காட்ட முற்படவில்லை என்பதும் தாம் தரிசித்த ஒரு வகைமாதிரியான கதைமாந்தரையே காட்ட முற்பட்டுள்ளார் என்பதும் தெளிவாகின்றன. இதனை விளக்குவதானால் யாழ்ப்பாணப் பிரதேச சமூகத்தின் ஒரு பக்கத்தை டானியல் அவர்களின் உணர்வுகளைப் பாதித்து நின்ற பக்கத்தை தாம் காண்கிறோம் எனலாம். அக் காட்சியில் கமலாம்பிகை, மாம்பழத்தி போன்றோரே தெரிகிறார்கள். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் உயர்சாதியினர் எனப்படுவோரின் யதார்த்தமான பெண் சமூகம் டானியல் அவர்களால் எமக்குக் காட்சிப்படுத்தப்பட வில்லை. கண்ணம்மா நீங்கலாக. கண்ணம்மா பாத்திரம் டானியல் அவர்களின் பார்வையில் விதிவிலக்கான கோணம் எனத் தெரிகிறது. உயர்சாதி எனப்பட்டோரின் சமூகத்தின் பெண்மையில் இயல்பாகவே நிகழ்ந்துவரும் ஒரு மாற்றத்தைக் கண்ணம்மா காட்டி நிற்கிறாள் எனக் கொள்ளலாமா? இது தொடர்பாக திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் தந்துள்ள ஒரு கணிப்பு இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

"கந்தனைக் கந்தன்மாமா வாக்கியதால் கண்ணம்மா பாத்திரப் பண்புகளை மாற்றுகிற புதுமையைச் செய்ததாக யாரும் எண்ண இடமில்லை. மரபு மரபாகக் கையாளப்பட்டு வந்த ஆழமான அன்பு நிலையின் உறைவிடமான பெண்மையையே டானியலும் வெளிப்படுத்தியுள்ளார்.

டானியலின் கதைமாந்தர் பற்றி நிகழக்கூடிய ஒரு நுண்ணாய்வின் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய கணிப்பு இது. பஞ்சமர் வரிசை நாவல்களின் கட்டமைப்பிலே நம் கவனத்திற்கு வரும் ஒரு முக்கியகூறு அது காட்டும் பண்பாட்டுக் கோலம் ஆகும். யாழ்ப்பாணப் பிரதேச சமூகத்தின் பல்வகைப் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், உணவு முறைகள், பொழுது போக்குகள், சமயச் சடங்குகள், விளையாட்டுக்கள், மருத்துவ முறைமைகள், பழமொழிகள், பேச்சு வழக்கு, மொழிநடைப் பாங்குகள் முதலிய பல்வேறு கூறுகளையும் நாவல்களின் உருவாக்கத்திலே அவர் திட்டமிட்டுப் பயன்படுத்தியுள்ளமை தெரிகிறது. பஞ்சமர் நாவலிலே கடதாசி விளையாட்டு, திருவிழா. வானவிளையாட்டு, மேளக்கச்சேரி, மரணச்சடங்கு முதலியவற்றின் விவரணங்களை அவதானிக்கலாம். கோவிந்தன் நாவலிலே நாய் வளர்க்கும் முறை, வேட்டை, ஏராக்கள் குடித்து தாய்மை எய்தும் வாய்ப்பு என்பன தொடர்பான விவரணங்கள் உள. நாட்டு வைத்தியம், பேயோட்டும் முறைமை , பங்கம் எனப்படும் தேங்காய் உடைப்புப் போட்டி, கோழிச்சண்டை என்பது அடிமைகளில் முக்கிய இடம் பெறுகின்றன. இவற்றில் இறுதி இரண்டும் பற்றிய நுணுக்க விவரங்களை டானியல் அவர்கள் திட்டமிட்டுப்பதிவு செய்து உள்ளமை தெரிகின்றது. சமயத் தொடர்பு நாவலாக 'கானலில்' சைவம், கிறீஸ்தவம் என்பன தொடர்பான கிரியை விபரங்களையும் காட்சிப்படுத்த டானியல் முற்பட்டுள்ளார். கிறிஸ்தவம் தொடர்பான வழிபாட்டு முறைகளை அருகில் நின்று பார்ப்பது போலக் காட்டும் அவர் சைவம் தொடர்பான அத்தகு முறைமைகளை ஒரு தொலைப் பார்வையாகவே புலப்படுத்துகிறார்.

பிள்ளை வயிற்றோடு ஒரு பெண் இறக்க நேரிட்டால் அவளை அவ்வயிற்றுடனே புதைப்பது பிள்ளையின் தந்தைக்கு சடுதியில் மரணத்தை விளைவிக்கும் என்பது ஒரு நம்பிக்கை. தண்ணீர் நாவலின் கதையின் முற்பகுதியில் இந்த நம்பிக்கை முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் புத்தூர் கிராமத்தில் நிலவிய நாய் பழக்கி வேட்டையாடும் முறைமை, தாழ்த்தப்பட்டோரின் திருமண நடைமுறைகள் என்பனவும் இந்நாவலில் விவரிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் தொகுத்து நோக்கும் போது டானியல் என்ற நாவலாசிரியனுக்குள் உள் நின்று இயங்கும் ஒரு நாட்டார் வழக்காற்றியல் பதிவாளனை நாம் தரிசிக்கின்றோம். சமகாலச் செய்திகளைக் கூறும் பஞ்சமர். பஞ்சகோணங்கள் தவிர்ந்த ஏனைய நான்கும் இவ்வாறான நாட்டார் வழக்காற்றியல் களஞ்சியங்களாகக் காட்சி தருகின்றன என்பது சுட்டிக் காட்டத்தக்க ஒன்றாகும். சமூகத்தின் முன்னைய தலைமுறைகளின் வரலாற்றைப் படிப்படியாக எடுத்துக் கூற முற்படும்போது இவ்வாறான பண்பாட்டுக் கூறுகளை கட்டமைப்பு நோக்கில் பயன்படுத்திக் கொள்ள முற்படுவது கலைப்படைப்பாக்க உத்திகளிலொன்றாகும். இதனை டானியல் அவர்கள் சிறப்புறவே செயற்படுத்தியுள்ளார் என்பது எனது கணிப்பு.

டானியல் அவர்கள் பண்பாட்டுக் கோலங்களைச் சித்திரிந்துள்ள திறன் அவரை இலக்கியவாதிகள் பண்பாட்டாய்வாளர் ஆகியோர் மத்தியில் தனிக் கவனத்திற்கு உரியவராகியுள்ளது; பிறமொழிசார் ஆய்வாளர்களும் அவரது படைப்புக்களை ஆய்வுக்கவனத்தில் கொள்ள வாய்ப்பளித்துள்ளது.

பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் டானியல் அவர்களை "ஈழத்தின் தலைசிறந்த பண்பாட்டு நாவலாசிரியர்' என்று குறிப்பிடுவார். (மல்லிகை,ஆகஸ்ட் 1986, ப. 52). புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்கள் டானியலை பண்பாட்டுப் பாட்டனாராக'' மதிக்கிறார் (மல்லிகை, மே 1987, ப. 2-45). யப்பானியப் பேராசிரியர் 'யசமசசெக்கின' அவர்கள் தனது ’யாழ்ப்பாணத் தமிழர் சமூகத்தில் துடக்கும் சாதியமைப்பும்' என்ற தலைப்பில் எழுதிய முதுகலை மாணிப் பட்ட ஆய்வேட்டில் டானியல் அவர்களின் நூல்களில் இருந்து தரவுகள் பெற்றுள்ளார். ஹோம்ஸ் என்னும் அமெரிக்க ஆய்வாளர் “யாழ்ப்பாணம் 1980' என்ற தலைப்பில் எழுதியநூலிலே டானியல் தொடர்பான குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. பேராசிரியர் அ . சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், யப்பானிய பேராசிரியர் சுசுமு ஒவோ ஆகியோர் இணைந்து எழுதிய யப்பானிய -- தமிழரிடையே உலக நோக்கும் கிரியைகளும் என்ற தலைப்பிலான நூலிலே டானியலின் பஞ்சமர் நாவலிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. (தகவல்: மல்லிகை, ஆகஸ்ட் 1986, ப. 54). இவை டானியல் அவர்கள் தம்படைப்புக்களில் புலப்படுத்தியுள்ள பண்பாட்டுக் கோலங்கள் எய்தியுள்ள சமகால வரலாற்றுக் கணிப்பை உணர்த்தும் சான்றுகளாகும்.    டானியல் ஒரு சகாப்தம்


இதுவரை நோக்கியவற்றினின்று வந்தடைந்த முடிபுகள் சிலபற்றை முன்வைத்து இவ்வுரையை நிறைவு செய்ய முனைகிறேன்:

(அ) ஈழத்தின் நவீன படைப்பிலக்கிய வரலாற்றிலே சாதிப்பிரச்சினை என்ற சமூக யதார்த்தத்தின் பல்வேறுபரிமாணஙகளைக் காட்டிய தனிப்பெரும் படைப்பாளி என்ற நிலையில் டானியல் தனியொருவராகத் தெரிகிறார். (அவருக்குஅருகிலே இன்னொருவரை நிறுத்த முடியுமா என்ற வினாவுக்கு இன்றுவரை விடையில்லை. ஏனைய சிலபடைப்பாளிகள் சற்றுத் தொலைவிலேயே நிற்கின்றனர்)

(ஆ) கடந்த ஏறத்தாழ சில நூற்றாண்டு யாழ்ப்பாணப் பிரதேசசமூக பண்பாட்டுக் கோலங்களையும் நாட்டார் வழக்காற்றியற் கூறுகளையும் இலக்கியமாகப் பதிவு செய்த வகையிலும் இவர் முதன்மைக் கவனிப்புக்த உரியவராகிறார்.

(இ) இவரது சமூகப் பார்வை இவர் சார்ந்திருந்த அடிநிலை மக்கள் சார்பான ஒருபக்கப் பார்வைதான். பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் அடிக்கடி கூறுவதுபோல கந்தபுராண கலாசாரத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டும் பார்வைதான் இப்பார்வை. பார்க்க வேண்டியதையும் காட்டுகிறது: பார்க்க வேண்டாதவற்றைக் கூடக் காட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இதுவே அவரது கதை மாந்தர் சித்திரிப்புத் தொடர்பான விமர்சனங்களுக்கு அடிப்படையாகின்றது. 'பஞ்சமர் வரிசை நாவல்கள்' புலப்படுத்தி நிற்கும் டானியல் அவர்களின் ஆளுமை மேற்படி விமர்சனங்களால் மட்டுப்படுத்தப்பட முடியாத நிலையில் விரிந்து பரந்ததாகும். இவ்விலக்கிய வரிசை ஈழத்து படைப்புலகில் நிகழ்த்தக் கூடியதாக்கம் மிகப் பெரிதாக இருக்கும் என்பது எனது ஊகம். டானியல் அவர்களின் கல்லறையில் இருந்து புதிய பஞ்சமர் இலக்கியங்கள் பல பூக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.

(உ) ஈழம் என்ற எல்லைக்கு வெளியே தமிழகத்தையும் உள்ளடக்கிய தமிழ் கூறும் நல்லுலகிலும் 'பஞ்சமர் வரிசை நாவல்கள்' தனிக்கணிப்பைப் பெற்றுள்ளன. இவற்றுட் பல தமிழகத்தின் திறனாய்வாளர்களது கணிப்புக்குட்பட்டு நூலுருப் பெற்றவை என்பதும் அத்திறனாய்வாளர் சிலரே இவற்றுட் சிலவற்றைப் பதிப்பிப்பதில் முன்னின்றுள்ளனர் என்பதும் (உ-ம்: பஞ்சகோணங்கள், அ. மார்க்ஸ்) இங்கு கவனத்திற்கு உரியது. இவை அனைத்தையும் தொகுத்துச் சிந்திக்கும்போது ”ஈழத்து நவீன தமிழ்ப் படைப்பிலக்கிய வரலாற்றில் கே. டானியல் ஒரு சகாப்தம்” என்பது புலனாகின்றது. நூல்களிற் கற்ற தத்துவங்களைப் பேசிக்கொண்டு உத்தியோகங்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் வாழ்க்கை முறைகளின் ஊடாகவும் அநுபவங்கள் ஊடாகவும் தத்துவத்தெளிவு பெற முனைந்தவர் கே. டானியல். ஐந்தாம் வகுப்பு மட்டுமே பள்ளிக் கல்வி பெற்ற டானியல் அவர்கள் தந்துள்ள படைப்பிலக்கியங்களின் பரப்பை நோக்கும் போது அவரது சாதனையின் பேரெல்லை புலனாகும். இவ்வகையில் இன்றைய இலக்கியவாதிகள் அனைவரும் தலைவணங்கத்தக்க பெருமைக்குரியவராக அவர் திகழ்கிறார்.


டானியல் அவர்களது சாதனைகளை நினைவுகூரும் இவ்வேளையில் தமிழகத்தில் தற்பொழுது முனைப்புப் பெற்றுவரும் 'தலித்' இலக்கியச் சிந்தனை கவனத்துக்குரியதாகின்றது. 'தலித்' என்ற பெயர் இடாமலே பஞ்சமர் என்ற தலைப்பில் அவ்வகை இலக்கியம் படைத்தவர் டானியல். இவ்வகையில் தமிழில் இவ்வாறான இன்றைய முனைப்புற்ற அப்போக்கிற்கு முன்னோடியாக அமைந்தவர்களில் ஒருவர் என்ற கணிப்பும் டானியல் அவர்களுக்கு உரியது.

டானியல் அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில் அவருடைய இலக்கியப் பணிக்குத் துணை நின்றோர் பலர். அவர் இயற்கை எய்திய பின்னரும் அவரது இலக்கிய ஆக்கங்களைக் கையெழுத்து நிலையில் பேணி வைத்திருந்து பின் நூல் வடிவம் தந்து நிலைபெறச் செய்தவர்கள் சிலர், அவற்றை உரியவாறு விமர்சித்து அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்தியோர் சிலர். அவரது வரலாற்றை அவர் வாழ்ந்த காலத்தே பதிவு செய்துவைப்பதில் பங்கு பற்றியோர் சிலர். இவ் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த வே . மு பொதியவெற்பன், கோ. கேசவன், அ. மார்க்ஸ் ஈழத்தில் பேராசிரியர் அ. சண்முகதாஸ், திருமதி மனோன் மணிசண்முகதாஸ், திரு வி. ரி. இளங்கேவன், திரு. வீ.சின்னத்தம்பி முதலியவர்களின் பங்களிப்புக்கள் வரலாற்று முக்கியத்துவமுடையன. பிரகாஷ், தோழமை. வராவொல்லை, விடியல் ஆகிய பதிப்பக - வெளியீட்டக முயற்சிகளும் நன்றியுணர்வுடன் சுட்டிக் காட்டத்தக்கன.

டானியல் அவர்களின் படைப்புக்களை உயர்கல்விக்கான நூல்களாக ஆக்கியதன் மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை அவருக்கு தனது உயர்நிலைக் கணிப்பை வழங்கியுள்ளது.
டானியல் என்ற வரலாற்று மனிதனை உரியவாறு இனங்காண வகைசெய்து நிற்கும் மேற்குறித்த அறிஞர்கள், நிறுவனத்தினர் அனைவர்க்கும் டானியலை எழுத்தெண்ணிப் பயிலும் ஆய்வாளன் என்ற வகையிலும் டானியலின் மனித நேயத்தை மதிக்கும் சக மனிதன் என்ற வகையிலும் என் உளமார்ந்த நன்றியுணர்வைத் தெரிவித்து இவ்வுரையை நிறைவு செய்கின்றேன். இந் நினைவுரையை ஆற்ற வாய்ப்பளித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்மன்றத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி.

சனி, ஏப்ரல் 17, 2021

எழுத்தாளர் டானியலுடன் ஒரு மாலைப் பொழுது…

நேருக்கு நேர்:

எழுத்தாளர் டானியலுடன் ஒரு மாலைப் பொழுது…

-பூமணிமைந்தன்


தொழில் வாய்ப்புகளும், வேலைப் பளுக்களும் நிரம்ப உள்ள போதும் தாங்கள் எழுத்துலகில் பிரவேசித்ததற்கான காரணம்?

இதற்கான காரணத்தை நான் தேடிப்பிடிக்க முயற்சிக்கவில்லை. ஒழிவு மறைவின்றிக் கூறுவதானால் எனது காதலி ஆனவளுக்கு மனதைத் திறந்து காட்டுவதற்காகவே எழுதத்தொடங்கினேன் என்று சில வார்த்தைகளில் கூறிவிடலாம். இதில் வெட்கம் என்ன இருக்கிறது? நான் ஒருத்தியைக் காதலித்தேன். அவள் என்னை ஏமாற்றிவிட்டாள். அதனாலேயே சோதனையின் கொடுமை அல்லது பழிக்குப்பழி" என்ற முதலாவது சிறுகதை பிறந்தது.

எழுத்துலக ஆரம்பம் அப்படி இருந்தபோதிலும் உங்களால் எழுதப்பட்ட நாவல், சிறுகதைகளைப் படிக்கும்போது ஆழமான கருப்பொருளைக் கொண்டனவாகக் காணமுடிகிறதே.... அது எப்படி?

ஏறக்குறைய இருபத்துரெண்டு, இருபத்துமூன்றாவது வயதுக் காலகட்டத்தில் அரசியலில் கால் வைத்தேன். என்னை ஆகர்சித்த அரசியலுக்காக மக்களுடைய பிரச்சனைகளுடன் கலக்க வேண்டியதாயிற்று. அதனால் பெற்றுக்கொண்ட அனுபவங்களை அப்போதைக்கப்போது வெளிக்கொண்டு வருவதற்காக எழுத்தைப் பயன்படுத்தினேன். என்னால் எழுதப்பட்ட ஒவ்வொரு படைப்புக்குமான கருப்பொருள், பேச்சு,மொழி, களம், சம்பவத் தொடர்புகள்சகலதையும் மக்கள் மத்தியிலிருந்தே பெற்றுக்கொள்வதனால் படைப்புகள் கனதி பெறுவது இயல்பாயிற்று.

இதுவரை நீங்கள் எழுதியுள்ள நாவல்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்வீர்களா?

முதலில் வீரகேசரி' தின இதழில் “நெடுந்தூரம்'' என்ற தொடர் நாவலை எழுதினேன். அதை விமர்சித்து எழுதியவர்கள் 'டானியலுக்கும் நாவலுக்கும் நெடுந்தூரம்' எனக் குறிப்பிட்டார்கள். நான் சோர்வடையவில்லை; 'பஞ்சமர்' நாவலின் முதற்பாகத்தை எழுதினேன். அதில் இடம்பெற்ற சம்பவங்களில் நானும் பங்கு வெற்றியும் கிடைத்தது. அந்த உற்சாகத்துடன் 'போராளிகள் காத்திருக்கின்றனர்நாவலை எழுதினேன். அதற்கு யாழ்ப்பாணக் கடற்பிரதேசத்து மக்கள் தந்த வரவேற்பு 'பஞ்சமரி'ன் மறு பாகத்தையும் எழுதத் தூண்டியது.'கோவிந்தன்'நாவலை எழுதினேன். அதற்கு இரட்டிப்பு வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்துடன் 'அடிமைகள்'' கானல்" ஆகிய நாவல்களையும் எழுதிமுடித்து பதிப்பிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தவேளை 'ஈழநாடு' வார இதழ் கேட்டுக்கொண்டதற்காக 'மையக்குறி' நாவலையும், 'தினகரன்'வார இதழுக்காக 'முருங்கையிலைக் கஞ்சி'யையும் எழுதிக்கொடுத்தேன். இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இலக்கியம் மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமென விரும்புகிறீர்கள்?

வஞ்சிக்கப்பட்ட சகல மக்களும் தங்கள் பலத்தை உணர்ந்து, தன் நம்பிக்கையுடன் எழுந்து நின்று இன்றைய நடைமுறைச் சமூக அமைப்பை உடைத்தெறியும் துணிவினை ஏற்படுத்துவதாகவும்; சகல சீரழிவுகளுக்கும் காரணமான சமூகத்தை மாற்ற முற்படும் பெரும் சக்தியாம் மக்கள்சக்திக்கு உறுதுணை புரியும் பாதிப்பை வருவிப்பதாகவும் இருக்கவேண்டும்.

சமுதாய மாற்றத்தை பேனா முனையால் ஏற்படுத்திவிடலாம் என்று சொல்லப்படுவதுபற்றி...?

இது மிகவும் பிழையான ஒரு கருத்தாகும். சமுதாயத்தை மாற்றும் பிற சக்திகளுக்கு பேனா ஒத்தா சையாக இருக்கமுடியுமே தவிர தனித்து அதனால் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியவே முடியாது.

உங்களுடைய படைப்புகளில் வழக்கொழிந்துபோன சொற்களும், அருகிவரும் சொற்களும் இடம்பெறுகின்றனவே!இவற்றை எப்படித் தேடிக்கொள்கிறீர்கள்?

அதற்காக நான் ஒன்றும் சிரமப்படுவதில்லை. கிராமப்புற வயதானவர்களைச் சந்தித்து அவர்களின் வாயிலாக அனுபவங்களைக் கேட்கும் போது சொற்கள் தானாகவே கிடைத்து விடுகின்றன. நீங்கள் நினைப்பது போல் அவை வழக்கொழிந்துபோகவில்லை. அவைகள் கிராமப்புறங்களில் இன்றும் வாழ்கின்றன. இப்போதாவது ஆவணமாக்காவிட்டால் காலக்கிரமத்தில் அவை அழிந்தும் போகலாம்.

தமிழர் பிரச்சனையை விட்டு. சாதியை வைத்துத்தான் உங்களால் இலக்கியம்செய்யமுடியும் என்று பொதுவில் பேசப்படுகிறது. இதுபற்றி ......

சாதியைத் தொடாமல் என்னால் சிருட்டிக்கப்பட்டவைகளை சரியாக இவர்கள் படிக்கவில்லை என்றுதான் அர்த்தம். அத்தகைய ”போராளிகள் காத்திருக்கின்றனர்'' என்ற நாவலைப் படிக்கக் கிடைக்காதவர்கள் இப்பொழுது 'தினகரன்' வார இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் "முருங்கையிலைக் கஞ்சி'' என்னும் யாழ்ப்பாண விவசாய மண்ணின் கதையைப் படித்துப் பார்க்கட்டும். இவர்கள் சொல்வதுபோல, நான் எழுதும் சாதியை, தமிழர் பிரச்சனை என்று ஒப்புக்கொள்வதற்கு ஏன் மறுக்கின்றனர்? எதை இழந்தாலும் சாதிக் கௌரவத்தை இழக்கமுடியாதிருக்கும் தமிழர் வாழ்க்கையை இவர்கள் தமிழர் பிரக்சனையாகக் கருதவில்லையா? தெரிந்துகொண்டுதான் என் மீது பழிசுமத்துகிறார்கள் என்றால் அது பெரும் அயோக்கியத்தனமாகும். மனதார இவர்கள் இந்த அயோக்கியத்தனத்தை விடும்வரை யாருமே தமிழர்களின் சரியான பிரச்சனைகளை உணர்ந்தவர்களாக மாட்டார்கள்.

உங்களுடைய இலக்கிய நோக்கங்கள் என்றாவது நிறைவேறும் என்று நம்புகிறீர்களா?

அந்த நம்பிக்கையை இழந்துவிடும் அளவுக்கு என் சிந்தனைகள் இன்னும் வக்கரித்துவிடவில்லை. ”இது நிறைவேற முடியாதது" என்று நானே சொல்வேனாகில் எனது மூளையில் பழுது ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் நம்பலாம். மனித வரலாறு ஒரு தொடர்ச்சியான போர். அதற்கு இலக்கியமும் விதிவிலக்கானதல்ல. நான் இல்லாவிட்டால் எனக்குப்பின் இன்னொருவன்; அவனுக்குப்பின் வேறொருவன் இப்படியே உலகின் சுகபோகங்களைத் தனித்தனியே தன்னது, ஆக்கிக்கொண்டிருக்கும் வர்க்கத்தை அழித்தொழித்து எல்லாம் எல்லாருக்கும் என்ற எல்லைவரை இந்தப் போரை நடத்தி வெற்றிபெறுவர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அந்நாள் இப்பொழுதே என் கண்களுக்கும் தெரிகின்றது.

உங்கள் படைப்புகளில் தாழ்த்தப்பட்ட பாத்திரங்களாக வரும் செல்லனின் மனைவி 'செல்லி'யாகவும் எல்லிப்போலையின் மனைவி 'இத்தினி' யாகவும் காரணப்பெயர்ப் பொருத்தம் பெறுவதற்கான ஞாயங்கள் என்ன?

கிராமப்புறத்தில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவனுக்கு 'மாதன்' பெயர் இருந்தால் அவர்களைக் குடிமைகளாக வைத்திருப்பவர்கள் அவனது மனைவியை 'மாதன் பெண்டில்' என்றழைக்கத் தொடங்கி கடைசியில் 'மாதி' ஆக்கிவிடுகின்றனர். நாளடைவில் அதுவே அவளின் இயற் பெயராகியும் விடுகிறது. இதுபோலவே செல்லனின் மனைவி 'செல்லியாகவும், எல்லிப்போலையின் மனைவி ‘இத்தினி' என்றும் ஆகின்றனர். இது இன்றுவரை யாழ்ப்பாணக் கிராம மண்ணுடன் ஒட்டிப்போயே இருக்கிறது. அந்த மண்ணின் வாசனை வெளிப்படுகிறதே அன்றி வேறல்ல.

நீங்கள் இலக்கண நூல்கள் ஒன்றையும் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை என்கிறார்களே இது பற்றி…

எனது மாணவ காலத்தில் 5ம் வகுப்புக்கு இலக்கண நூல் வரவில்லை; அதுவரை வகுப்பாசிரியர் பேசிய வார்த்தைகள் தான் இலக்கணப் பாடமாகும். வாழ்க்கையில் பின்தள்ளப்பட்ட மக்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதற்கும் அவர்கள் பேசும்விதத்திலேயே விசயங்களை இலகு படுத்திக் கூறுவதற்கும், எழுதுவதற்கும் எனக்கு இலக்கணம் தெரியும். இலக்கணம் என்பது மனித ஜீவன் உதயமான பின்னர் வந்த ஒன்றே தவிர அதற்கு முற்பட்டதல்ல. அதனால் மனிதன் எப்படிப் பிறந்தான், எப்படி இருக்கிறான், எப்படி வாழவேண்டும் என்பதற்குப் பின் தான் இலக்கணம் என்ற ஒன்று இருக்கமுடியும்.

எழுத்தாளர்களை எந்தெந்த அளவுகோல்களால் வரிசைப்படுத்துகிறீர்கள்?

பழைய சமூகப் பழக்கவழக்கங்களுக்கும்; அந்த அமைப்புகளுக்கும் உட்பட்டு எழுதுபவர்கள். அந்தக் கட்டுக்கோப்புகளைக் கடந்து எழுதுபவர்கள். அக்கட்டுக்கோப்புகள், வரம்புகள் சகலதையும் அழித்துப் புதிய ஒரு சமூகக் கட்டுக்கோப்பை உருவாக்க எழுதுபவர்கள் என்ற வரிசைகளில் .!

குறிப்பிடத்தக்க சிறுகதையாளராக விளங்கிய நீங்கள் எழுபதுகளில் தான் நாவலாசிரியராகப் பரிணமித்தீர்கள்; இந்த இரண்டு இலக்கிய வடிவங்களிலும், சமூகத்திற்கு தங்களால் சொல்ல நினைக்கும் விடயத்தை இலகுவாகப் பதிய வைப்பதற்கு உகந்ததென்று எதனைக் கருதுகிறீர்கள்?

குறிப்பிடக்கூடிய ஆணி அடித்தாற் போன்று பட்டென்று புரியக்கூடியதான கருப்பொருளைச் சிறுகதைக்கூடாகவும்; ஒரு விசயத்தை விஸ்தாரமாக்கி, அதனோடுணைவுள்ள உபவிசயங்களையும் விளக்கிக் கூறவேண்டும் என்ற அவசியம் ஏற்படும் பட்சத்தில் அதை நாவலுக்கூடாகவும் கொண்டுவருகிறேன். இவை இரண்டில் எதை முதன்மைப் படுத்துவதென்ற கேள்விக்கு இடமே இல்லை. இலக்கியத்தின் இலக்கில் இரட்டைத் தன்மை இருக்கும்போது தான் வடிவங்களை ஆளுமைப்படுத்துவதிலும் வெவ்வேறு மச்சோரம் ஏற்படுமே தவிர மற்றப்படி அப்படி ஏற்படநியாயம் இல்லை.

உங்களை இலக்கியக்காரனாக உருவாக்குவதற்கு யார் யார் உறுதுணையாக நின்றனர் என்பதை குறிப்பிடுவீர்களா?

யாரையும் யாரும் உருவாக்குவதில்லை என்பது எனது கருத்து. அந்தந்தக் காலத்தின் தேவைகள் தான் எதையும் உருவாக்குகின்றன. அதற்கு இலக்கியக்காரனும் உட்பட்டவனே! 'நான் அவனை உருவாக்கினேன்' என்பதெல்லாம் அகம்பாவத்தின் வெளிப்பாடே! நான் எழுத்துலகில் பிரவேசித்த காலத்தில் எனது எழுத்துக்களைத் திருத்தங்கள் செய்தும் அச்சுவாகனம் ஏறுவதற்கான ஒத்தாசைகள் புரிந்தவர்கள் திருவாளர்கள் எஸ். பொன்னுத்துரை,என். கே. ரகுநாதன் ஆகியோர். இதைச் சொல்வதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?

எஸ். பொ. வின் இலக்கிய ஆளுமையைப் பற்றிய உங்கள் கருத்து?

ஆளுமை என்ற வரையில் எஸ்.பொ.மிகவும் உன்னதமானவர். ஆனால் அதுமட்டும் ஒரு சிருஷ்டி கர்த்தாவுக்குப் போதுமானதல்ல. எப்போது -- எதற்காக ஆளுமையைப் பயன்படுத்துவதென்பதில் தான் ஆளுமையின் பரிபூரண வெற்றி தங்கி இருக்கிறது. மழை எல்லாராலும் வேண்டப்படுவதொன்று. அம் மழை கடலில் பெய்யுமானால் அதனால் யாருக்குப் பயன் கிடைக்கப்போகிறது? மனித இனத்தின் முதன்மையான தேவைகளை மையப்படுத்தாமல் பிறப்பெடுக்கும் கருவூலங்களை வெறும் ஆளுமையால் மட்டும் மேன்மைப் படுத்த நினைப்பது சரியானதென்று நான் கருதவில்லை.

இலக்கியத்தில் பாலியல் பற்றி உங்கள் அபிப்பிராயம்?

இலக்கியத்தில் பாலியல் கூடாதென்று கொள்ளலாகாது. அப்படி எழுதக்கூடாதெனக் கட்டளை இடுவது வேறோர் வகையில் 'உயிருள்ள எதைப்பற்றியும் எழுதாதே!' என்று கூறுவதற்கே ஒப்பானதாகும். மனித வாழ்க்கை முழுவதும் பாலியல் மயமானதோ, அன்றி அதிலே தங்கி நிற்பதோ அல்ல. அதேபோன்று இலக்கியம் பாலியலை முதன்மைப்படுத்தும் விதத்திலோ அன்றி அதில் தங்கிநிற்கும் முறையிலோ அமைவது இயல்புக்கு மாறானதும், தேவைகளுக்குப் புறம்பானதுமாகும். சந்தர்ப்பத்தால் பாலியல் வியாபாரத்தை நடத்தும் ஒருவள், முழுமனித சமூகத்துக்கும் எதிரியான ஒருவனை அல்லது ஒரு வர்க்கத்தை அழிக்க பாலியலையே ஆயுதமாக உபயோகித்து செயல்படுவதாக சிருஷ்டி அமையுமெனில் அக்கருவூலத்தை எவரும் 'பாலியல்' என்பதற்குள் அடக்கிவிடமுடியாது.

இறுதியாக ஒரு கேள்வி எதுவும் விளங்கிக்கொள்ள முடியாதவாறு எழுதுபவர்கள்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆதியும் அந்தமுமில்லாத – தொட்டோ உணர்ந்தோ கொள்ளமுடியாத 'கடவுள்என்ற ஒரே ஒரு வாசகனுக்காக மட்டும் எழுதுபவர்கள் என்றுதான் கூறுவேன்.

இதுவரை 'தாரகை' வாசகர்கள் சார்பாகவும், ஏனைய இலக்கிய நெஞ்சங்களுக்காகவும் நான் தொடுத்த கேள்விகளுக்கு பொறுமையுடன் மிகவும் அருமையான பதில்களைத் தந்துதவினீர்கள் அதற்காக அவர்கள் சார்பில் வணக்கத்தையும்; நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே என்னிடம் இருந்து இந்தப் பேட்டியை எடுத்து வெளியிடும் 'தாரகை' வெளியீட்டாளர்களுக்கும் எனதுமார்ந்த நன்றி உடையதாகும்.

சனி, பிப்ரவரி 20, 2021

If you compare the west part of Neduntivu, where I was born and grown up, with the central part of the island, you may conclude the west as a backward area! I was born at 16:15 on a sunny afternoon of a Thursday, 1st of January in a small hut at Mooththar Valavu, Neduntivu -West. I learned my letters in a primary school and came to junior school in Neduntivu -Centre for my 7th standard.


In a cleaning work of that school at an abandoned dark room, I found a small notebook of former and the first principal Mr.Navaratnasingam with his amazing beautiful English hand writing!

Since I found this note book, full of English poems by famous poets in English, then I practiced to write like Mr. Navaratnasingam. I would say he is my Throner, a virtual Guru. I hope he lives in my hand writing of my Latin letters!

ஏழுபிள்ளை நல்லதங்காள்எங்கள் வீட்டில் இருந்து கூப்பிடு தொலைவில் தென்மேற்குத் திசையில், வெந்த வளவிற்குத் தெற்கால் இருந்தது இராமலிங்கம் அப்பப்பா வீடு. சீதேவி அப்பாச்சிதான் என் நினைவில் முன்னணியில் நிற்பதால் அவர் தான் குடும்ப வண்டியின் சாரதியாய் இருந்திருக்க வேண்டும். அவர்களது கடைசி மகன் யோகநாதன், என் வயதொத்தவன், அவனே ஆரம்ப வயதுகளில் எனக்கு மந்திரியாகவிருந்தவன். பஞ்சமியில் இறந்துவிட்டார் என் பூட்டியின் கடைசித் தங்கை, நாகுட்டியார் பெண்சாதி. இறக்கும்போது அவளுக்கு வயது தொண்ணூறுக்கும் அதிகமாக இருந்திருக்கும். தகப்பனிடம் அடிவாங்கும் எனக்காக அவள் பரிதாபப் பட்டதான மெல்லிய அரைகுறை நினைவுகள் கொஞ்சம் இன்னமும் என்னிடம் எஞ்சியிருக்கின்றன. பிரேதம் எடுத்தவுடன் அந்தப் பஞ்சமிக் குடிலை எரித்துவிடுவார்கள். அங்கே மிஞ்சிய கயிறுகளைச் சேகரித்து நானும் யோகநாதனும் மாடுகட்டி விளையாடியது நன்றாகவே ஞாபகத்தில் உண்டு. அவனுக்கு ஓர் பட்டப் பெயர். ”கட்ட விதான” (கட்டை விதானை).கட்ட விதான வீட்டின் தலை வாசலுக்குள் ஒரு மேசையிருந்தது. படுத்துறங்கும் ஓர் வாங்கில் (கட்டில்) இருந்தது. அங்கிருந்த மேசையில் பலவெல்லாம் இருந்திருக்கக் கூடும். ஆனால் எப்பொழுதும் அந்த வருஷத்திற்குரிய இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் உங்கள் கவனைத்தை நிறைத்துவிடும். அதன் இடைநடுப் பக்கமொன்றில் ”தொடுகுறி சாஸ்திரம்” இருக்கும். 108 எண்களைப் பலகோணக் கூம்பு வடிவத்தில் அடுக்கி வைத்து, ஒவ்வொரு எண்ணுக்குமான பலன்களை அடுத்துவரும் பக்கங்களில் எழுதிவைத்திருப்பார்கள். அந்தத் தொடுகுறி சாஸ்திரப் பக்கத்தை அவர்களது மேசையின் கீழ் இருந்து நாள் முழுவதும் தொடுவதும், பலன்களை எழுத்துக்கூட்டி வாசிப்பதும் எனக்குப் பிடித்தமான விளையாட்டு. பலனில் ‘ஸ்திரீ லாபம்` என்றும் பலவேளைகளில் வரும். பொருள் தெரிந்ததில்லை. கட்ட விதானையின் மூத்த அக்காவிற்கு கல்யாணம் நடந்தது. அவர்கள் வீட்டின் முன்னால் ஒருமுள்முருக்கு ஒன்றை நாட்டி, அதற்கு மஞ்சள் நிறத்தில் ஒரு பொன்-துண்டும் கட்டி நீறு, சந்தனம், குங்கும் போட்டு வைத்திருந்தார்கள். எத்தனையோ ஆண்டுகள் பின்னாடி அகலிகையின் கதைக்கும் இந்த முள்முருக்கு நாட்டுவதற்கும் உள்ள தொடர்ந்து அறிந்தபின்னர், ’இந்திரனின் உடலெங்கும் யோனி’ என்றவுடன் இந்த முள்முருக்கே என் நினைவில் வந்துவிடுகின்றது.

சீதேவி அப்பாச்சி வீட்டில்தான் புகழேந்திப்புலவர் இயற்றிய, ”நல்லதங்காள் கதை”, ”அல்லி அரசாணிமாலை”, ”அபிமன்னன் சுந்தரி மாலை” போன்ற பெரிய எழுத்துப் புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். எல்லாமே புகழேந்திப் புலவர் இயற்றிய, பெரிய எழுத்து என்று அச்சிடப்பட்டிருக்கும். அப்பொழுது உள்ளிருக்கும் பாடல்களைப் படிக்க முயற்சித்ததில்லை. ஆனால் அவற்றில் இருக்கும் படங்களை ப் பார்ப்பதில் கொள்ளை இன்பம். அந்த உருவங்கள் யாவும், அதிகமாகப் பெண் உருவங்கள் பலவும் கட்டையாய், மொத்தமாய்ப் பருமனாய் இருப்பதைப் பார்ப்பதில் அலாதி இன்பம். இந்தப் புத்தகங்களை அவர்கள் வீட்டில் யார் படிப்பார்களோ ? ஆனால் அழிந்துவிடாது என்றும் நினைவில் நிற்கும் இராகத்துடன் , சோகமே உட்பொதிவாக இராமலிங்கம் அப்பப்பா அந்தப் பாடல்களைப் பாடிய ஞாபகமும் இருகின்றது.

’ஏழுபிள்ளை நல்லதங்காள்…’, ’மூளியலங்காரி மொய்குழலாள்…’ என்ற தொடர்களும் நினவில் இருக்கின்றன. இந்த நூல்களைப் படித்தாதலும் கேட்டதாலும், இந்த ஊரவர்கள் பாடும் ஒப்பாரிகளும், பொருள்பொருந்துவதாய், பொருள் பொதிந்தவையாய் இருக்கின்றனவோ என்று நான் சிந்திப்பதுண்டு.இந்தப் பெரிய எழுத்துப் புத்தகங்கள் பற்றி ஆய்வு நூலொன்றை நண்பர் டாக்டர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள் எழுதியிருகின்றார். இலங்கையின் பிற இடங்களில் இந்த வெகுஜன இலக்கியங்கள் பரம்பலடைந்திருந்தனவா…போன்ற தகவல்கள், ஆய்வுகள் நான் காணக் கிடைக்கவில்லை.

திங்கள், பிப்ரவரி 15, 2021

வீரியம் குன்றாத சாதியம்!

க. நவம்(2015 கடைசியில் ரொறன்ரோவில் நடைபெற்ற திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ நூலறிமுக நிகழ்வில் வழங்கிய உரையின் எழுத்துருவம்.)எமது ஊரில் சவரத்தொழில் செய்து வாழ்ந்துவந்த குடும்பம் ஒன்றின் கதையை, எழுத்தாளர் தெணியான் அவர்கள் ‘குடிமைகள்’ என்ற பெயரில் ஒரு நாவலாக எழுதியிருந்தார். அதற்கான அறிமுக நிகழ்வு ஒன்றினை, கடந்த வருடம் அவரது நண்பர்கள் கொழும்பில் நடத்தியிருந்தனர். அதில் கலந்துகொண்ட கொழும்புவாழ் கனவான்கள் சிலர், ”சாதியம் செத்துப்போன இன்றைய நிலையிலும், இது போன்ற படைப்புக்களுக்கான அவசியந்தானென்ன?” எனக் கேட்டு, ’அரியண்டப்’ பட்டிருந்தனர். இதே கேள்வியை திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது இந்த நூல் குறித்து, ஒருசில தமிழ்க் கனடியக் கனவான்கள், கல்விமான்கள் கேட்டுக் கறுவிக்கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! இந்நிலையில் திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ எனும் இந்த, தன்வரலாற்று நூல் குறித்து, கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து, இன்றைய காலகட்டத்திலும் இவை போன்ற படைப்புக்களுக்கான தேவை என்ன? இவற்றின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன? என்பன போன்ற வினாக்களுக்கான ஒருசில ‘அடையாள விடைகளை’ சொல்லிச் செல்வதே எனது நோக்கமாகும்.

வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் - ஆதிக்க சாதியினருக்காக - ஆதிக்க சாதியினாரால் எழுதப்பட்ட கடந்தகாலக் ’கலாபக் கதைகள்’ என்பதாகவே காலம் காலமாக இருந்து வந்தது. ஆயினும் மாறிவரும் இன்றைய நவீன உலகின் நடப்புகளுக்கேற்ப, இதிலும் பல மாற்றங்கள் இடம்பெறலாயின. மேட்டிமையாளர்களால் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்த உழைக்கும் மக்களதும், ஒடுக்கப்பட்ட மக்களதும், அடிநிலை மக்களதும் கதைகள் இப்போது இலக்கியங்களாகப் புனையப்படுகின்றன; வரலாறுகளாக வரையப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களது வரலாற்று ஆவணங்களாக, தமிழ்நாட்டில், பாமாவின் ‘கருக்கு,’ கே.ஏ. குணசேகரனின் ‘வடு,’ ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்,’ என்பவை முதற்கொண்டு, இன்னும் பல தன்வரலாற்று நூல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. ஈழத்தைப் பொறுத்தவரை, கடந்த ஐம்பதுகளின் ஆரம்பத்தில் வதிரியைச் சேர்ந்த கா. சூரன் எழுதிய ‘சூரன் சுயசரிதை,’ 2001 இல் டொமினிக் ஜீவா எழுதிய ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்,’ 2004இல் என்.கே. ரகுநாதன் எழுதிய ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி,’ 2005இல் இலங்கையன் செல்வரத்தினம் எழுதிய ‘வாழ்வும் வடுவும்,’ 2011 இல் தெணியான் எழுதிய ‘இன்னும் சொல்லாதவை,’ அதேயாண்டில் யோகரட்ணம் எழுதிய ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூட்டிய நாட்களும்,’ 2013இல் தெணியான் எழுதிய இன்னொன்றான ‘பூச்சியம் பூச்சியமல்ல’ என்பன ஒடுக்கப்பட்டோரது தன்வரலாற்று நூல்களாகும்.

”ஈழத்தில் சாதியம் செத்துப் போய்விட்டதே! இந்நூல்களுக்கும் இவையொத்த இன்னபிற புனைவுகளுக்கும் இப்போது என்ன தேவை!” என்பது, ஒரே அடைப்படையில்தான் எப்போதுமே சிந்தித்துப் பழக்கப்பட்ட ’அடிப்படைவாத அரிதாரிகள்’ முன்வைக்கும் கபடத்தனமான கருத்து. ஆனால் இன்றும் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் பலர், போர்க்கால ஆக்கங்களைப் படைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ’மூன்று தசாப்தகால ஈழப்போர் முள்ளிவாய்க்காலில் வந்து முடிவடைந்து விட்டதே! போர்க்கால இலக்கியங்களுக்கு இன்னும் என்ன தேவை’ என்று யாராவது கேட்கின்றார்களா? இல்லையே! சாதியத்துக்கு மட்டும் ஏன் இப்படியொரு சப்பைக்கட்டுச் சமாதானமோ தெரியவில்லை!

வெளிநாடுகளிலும் ஈழத்தின் பட்டின, நகர, பெருநகரங்களிலும் வாழும் மேட்டுக் குடியினர்தான் பெரும்பாலும் ஊரில் சாதியம் செத்துவிட்டது என்று சாதிப்பவர்கள். உண்மை நிலையை உள்ளது உள்ளபடி நேரில் கண்டறிய வேண்டுமாயின் இவர்கள் ஊரிலுள்ள கிராமங்களைப் போய்ப் பார்த்து வரவேண்டும். யாழ் மண்ணின் பல கிராமங்களில் இன்னமும் அதே அடிமை குடிமை முறைமை பேணப்பட்டு வருகின்றது; மரணம், திருமணம், பூப்பு நீராட்டுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் சவரத் தொழிலாளர்களும் சலவைத் தொழிலாளர்களும் பறைமேளம் தட்டுவோரும் ஊரூராகச் சென்று, தத்தமக்கே உரிய அடிமை குடிமைத் தொண்டுகளை இன்றும் ஆற்றிக்கொண்டுதான் உயிர் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற உண்மைகளை இவர்கள் அறியமாட்டார்கள். வெளிநாட்டுப் பணச் செருக்குடன் மூலஸ்தானத்தில் சொகுசாக வீற்றிருக்கும் எத்தனையோ சுவாமிகளின் கோவில்கள் இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே விடாமல் பூட்டப்பட்டிருக்கின்றன என்பதையும், சாதியின் பேரால் எத்தனை காதல் கல்யாணங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன என்பதையும், எத்தனை சண்டைகள் சச்சரவுகள் இடம்பெற்று வருகின்றன என்பதையும், பல்கலைக்கழகம் முதற்கொண்டு சின்னச் சின்னப் பாலர் பள்ளி வரை, புதுப் புது வடிவங்களில் சாதியம் பூடகமாகப் பேணப்பட்டு வருகின்றது என்பதையும், யாழ் சமூக வெளியெங்கும் சாதிய அடக்குமுறையென்னும் கூரிய கத்தியின்மீதுதான் அடிநிலை மக்கள் அச்சத்துடன் கால்பதித்து நடக்கின்றனர் என்பதையும், சாதி என்னும் கெட்ட வியாதியால் அந்த மக்கள் சிந்திய கண்ணீர், மானுடத்தின்மீது படிந்த கறையாக இன்றும் அங்கு மண்டிக் கிடக்கின்றது என்பதையும் இவர்கள் அறியமாட்டார்கள்.

கல்வி, பொருளாதார அபிவிருத்திகள் காரணமாக, ஒடுக்கப்பட்டோரது பிள்ளைகள் சிலர் ஒருசில வாய்ப்புக்களை ஆங்காங்கே பெற்றுவருகின்றனர் என்பதும் – அதனால் அவர்களது வாழ்வுநிலை ஓரளவு மேம்படுகின்றது என்பதும் உண்மையே. ஆனால் தவிர்க்கமுடியாத அல்லது தட்டிக் கழித்துவிட முடியாத சூழ்நிலைகளில்தான் அவ்வாறான வாய்ப்புக்கள் அவர்களுக்குத் தரப்படுகின்றனவே தவிர, யாழ்ப்பாண மேட்டுக்குடியினரின் சாதிய மனோபாவ வாசற்கதவுகள் திறந்துகொண்டதினாலல்ல என்பதை நாம் மறந்துவிடலாகாது. உண்மையைச் சொல்வதானால், ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சாதியம் என்பது சுவாலையின்றி இன்னமும் கனன்றுகொண்டிருக்கும் ஒரு தணல் நெருப்பு; அது அணைந்துபோன நெருப்பல்ல. இந்த நெருப்புக் கனலின் அகோரம் குறித்து ஷோபாசக்தி தமது கட்டுரை ஒன்றில் – ‘சாதியத்தின் பாரத்தை, வலியை, இழிவை அடக்கப்பட்டவன் அல்லாத ஒருவனால் எதிர்வுகூறவும் முடியாது, உணரவும் முடியாது. சைலன்ஸ்ர் துப்பாக்கியில் ஸ்னைப்பர் பூட்டப்பட்டு, அதிலிருந்து லேஸர் குண்டு சுடப்படுவதுபோல, சத்தமில்லாமல் சாதியத் தாக்குதல் நெருப்பைக் கக்கிக்கொண்டு வரும்’ என்று போர்க்கால மொழியில் கூறுகின்றார்’. இதனால்தான் ஒரு இளங்கீரனோ அல்லது ஒரு கணேசலிங்கனோ சாதியத்திற்கு எதிராக எழுதிச் சாதித்ததைவிட, டானியல், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், பெனடிக்ற் பாலன், தெணியான் போன்றவர்களது எழுத்துக்கள், சாதியத்தைத் தகர்ப்பதற்கான தர்க்க மனநிலையோடும், பரிதவிப்பின் உணர்வோடும், சில தருணங்களில் பொங்கியெழும் கோபாவேசங்களோடும் வெளிவந்திருக்கின்றன. வெளியில் நின்று அனுதாபத்துடன் அணுகுவதற்கும், உள்ளே தன்னிலையில் நின்று தானே உணர்வதற்கும் உள்ள வேறுபாடு இதுதான்! இலங்கையின் வடபுலத் தமிழர் வாழும் பிரதேசங்களில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள்மீது மிக நீண்ட காலமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுவந்த அநீதிகளுக்கும் சாதிய அவமானங்களுக்கும் அளவுகணக்கே கிடையாது. அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கென்று, ஏற்கனவே நிர்மாணிக்கப் பெற்றிருந்த ’ஒடுக்கப்பட்ட ஊழியர் சங்கம்’ 1943இல் ’சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ எனப் புதுவடிவமெடுத்தது. இதே காலகட்டத்தில் வில்லூண்டி மயானத்தில் முதலி சின்னத்தம்பி என்ற தாழ்த்தப்பட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, யாழ் குடாநாட்டில் அடிநிலை மக்களுக்கெதிரான வன்செயல்களும் துச்சாதனங்களும் துரிதமடைந்தன. சுமார் 5 வருட காலத்திற்குள் மட்டும் பூநகரி, காரைநகர், கரவெட்டி, ஊர்காவற்துறை, பருத்தித்துறை ஆகிய இடங்களில் ஒடுக்கப்பட்டோருக்குச் சொந்தமான 65 வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டன; 18 உயிர்கள் பறிக்கப்பட்டன. ஆயுதப் போராட்டம் தலைதூக்கும்வரை இந்நிலைமை தொடர்ந்த வண்ணம் இருந்தது. விபரங்கள் ஏற்கனவே பல இடங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளதால், விரிவஞ்சி அவற்றை இங்கு தவிர்த்துக் கொள்ள விரும்புகின்றேன். இதேவேளை போராட்ட காலங்களின்போது ஆயுதக் குழுக்களின் தாராள சிந்தையினால் சாதியக் கெடுபிடிகள் தடுக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டு வருவது பச்சைப் பொய்! ஆயுதப் போராட்டத்தைத் திசைதிருப்பி விடக்கூடாது என்பதற்காகப் பலவந்தமாக, சாதியம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததே தவிர, யாழ்ப்பாணத்தில் ஒருபோதும் சாதியம் தனது வீரியத்தை இழந்ததில்லை!
”நிர்வாணம் கொண்டு தமிழர்கள் அனைவரும் தெருக்களில் திரிக!
மீண்டும் ஒருதரம் ஆதிமனிதனை நெஞ்சில் நினைத்திட,
நிர்வாணம் கொண்டு தமிழர்கள் அனைவரும் தெருக்களில் திரிக!’

என்று கவிஞர் சேரன் அறம்பாடிய சம்பவத்தை நீங்கள் மறந்திருக்க முடியாது. மிருசுவில் கிராமத்தில் தென்னை மரத்தோடு தாழ்த்தப்பட்டவனொருவன் தறித்து வீழ்த்திக் கொல்லப்பட்ட அந்தக் கொடிய சம்பவம் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தது. அது நடந்து முடிந்த கையோடு, இரவோடிரவாக எழுத்தாளர் டானியலின் வீட்டுக்குச் சென்று, அவர் கன்னத்தில் துப்பாக்கியை வைத்து ‘இது பற்றி நீ எழுதினால் இதுதான் உனக்குப் பரிசாகக் கிடைக்கும்’ என்று, அன்று ஆதிக்கத்திலிருந்த ஆயுதக் குழுவினர் எச்சரிக்கை விடுத்துச் சென்ற சம்பவமும் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது. தனது தம்பிக்கு உயர்சாதியினர் ஏன் அடித்தார்கள் எனக் கேட்டுச் சென்ற அண்ணன் ஒருவனை, 54 தடவைகள் அறம்புறமாகக் கத்தியால் வெட்டிக் கொலைசெய்த கொடிய சம்பவமும் கொடிகாமத்தில் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது. எழுதுமட்டுவாலில் வாழ்ந்துவந்த ஒடுக்கப்பட்ட சாதியொன்றின் - பாவம், அப்பாவிப் பள்ளிப் பிள்ளைகளது பாடப் புத்தகங்களைப் பறித்து, தீயிட்டுக் கொழுத்திய சம்பவமும் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது. புத்தூரிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களது வீடுகளை விட்டுத் துரத்தப்பட்டதும், நீர்வேலி, கரவெட்டி கிராமங்களில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதும் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது. கரணவாய் மூத்தவினாயகர் கோவிலினுள் தாழ்த்தப்பட்டவர்கள் சென்று வழிபட முற்பட்டபோது, ஆயுததாரிகள் தந்திரமாகக் கோவிற் கதவைப் பூட்டி, திறப்பைத் தம்வசம் வைத்திருந்து, பின்னொருகால் சமயம் பார்த்துச் சாதிமான்களிடம் அதைக் கையளித்து, ஆலயப் பிரவேசத்தைத் தந்திரமாகத் தடுத்தாட்கொண்டமையும் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது. பசி, பட்டினி, பஞ்சம், போர், கலவரம், பிரளயம் என்பன உலகில் எங்கு நடந்தாலும் அடிநிலைவாழ் ஏழை எளிய மக்களே பெருந்தொகையில் பாதிக்கப்படுகின்றவர்கள். சுனாமியின்போது இந்தியக் கடற்கரையோரங்களில் பல்லாயிரக் கணக்கில் காவு கொள்ளப்பட்டவர்களும் இவர்கள்தான்.தமிழீழ யுத்தச் சூறைக் காற்று வீறுகொண்டு வீசியடித்தபோது, நம்பிக்கைத் துரோகம் செய்யத் துணியாதவராய் – தப்பியோடும் தந்திரம் தெரியாதவராய் - எண்ணிறந்த தொகையில் இம்சிக்கப்பட்டவர்களும் இவர்கள்தான்; இடராழிக்குள் அமிழ்ந்தி இறந்தழிந்து போனவர்களும் இவர்கள்தான். இந்தப் பச்சை உண்மையைத் தெரிந்துகொண்டும் – வரலாறு காணாத பேரழிவுகளைக் கண்முன்னே கண்டுகொண்டும் - தமிழன் மனம் இன்னமும் திருந்த மறுக்கும் குரூரத்தை என்னவென்று சொல்வது? அண்மையில், உடுப்பிட்டியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களது வீடு வாசல்களிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டுள்ளார்கள். பருத்தித்துறை – வியாபாரிமூலையில் சவரத்தொழில் செய்து வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள், அங்குள்ள கிணறு ஒன்றிலிருந்து நல்ல தண்ணீரெடுத்துக் குடிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள். கைதடியில் நடைபெற்ற ஓர் அன்னதானத்தின் போது, பசிக்குச் சாப்பிடச் சென்ற தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கைநீட்டி அடித்ததால் ஏற்பட்ட கைகலப்பு, பின்னர் வழக்கில் போய் முடிந்திருக்கின்றது! இவைபோன்று இன்னமும் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எண்ணிலடங்காச் சாதியக் கொடுமைகளுக்கெல்லாம் கொடுமுடி வைத்தாற்போல - இரண்டு வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் நினைவுநாளில் உரையாற்ற வந்த முன்னாள் மட்டுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான இராசதுரை அவர்களைப் பார்த்து ”இந்தச் சக்கிலியனை ஆரிங்கை பேசக் கூப்பிட்டது?” என்று அவர்மீது சீறிப் பாய்ந்த, இந்நாளைய அரசியல்வாதி ஒருவருக்கு, இராசதுரையைச் சாடுவதற்குச் சாதியைவிட, சரியான ஆயுதம் வேறெதுவும் அகப்பட்டவில்லை! “இத்தனை பெரிய போராட்டத்திற்குப் பிறகும் சிங்கள மேலாதிக்கத்திடமிருந்து மட்டுமல்ல, வெள்ளாள மேலாதிக்கத்திடமிருந்தும் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் பிற அடுக்கினர் விடுதலையைப் பெறமுடியவில்லை’ என்று ஈழ மண்ணில் வாழ்ந்துவரும் கவிஞர் கருணாகரன் அண்மையில் பேட்டியொன்றில் கூறியுள்ளமை இங்கு மனங்கொள்ளத் தக்கது. எனவேதான், போருக்குப் பின்னர் ஊரில் சாதியம் நீர்த்திருப்பதாகக் கூறுவது தவறு. அது நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை! சரி, அதுதான் போகட்டும்! வெளிநாடுகளில் வந்து வாழும் தமிழன் தன்னிலும் திருந்தினானா? இல்லை! ஊரிலுள்ள இன்னானின் மகன் எனக்கு மேலை இருக்கவோ என்று, தான் வசித்த அடுக்குமாடி வாசஸ்தலத்தைக் காலிசெய்து வெளியேறிய தமிழன் கனடாவிலிருகின்றான். ’ஏதோ பெடியள் காதலிச்சுப்போட்டுப் பிடிவாதமா நிக்கிதுகள். சரி, கலியாணத்தைச் செய்து வைப்பம். ஆனால் எங்கடையாக்களுக்கு ஒரு நாளைக்கு றிசெப்ஷன், உங்கடையாக்களுக்குப் புறம்பா இன்னொரு நாளைக்கு றிசெப்ஷன்’ என நிபந்தனை வைத்து, வாக்குவாதப்பட்டுக் காதல் இணையரைப் பிரித்தெடுத்த தமிழன் கனடாவிலிருகின்றான்.
வங்கி ஒன்றில் சக உழியர் ஒருவரின் சாதியைச் சொல்லி, ஏனைய இனத்தவர்முன் தலை குனியவைத்து அவரை வேலையைவிட்டு விரட்டியடித்த தமிழன் கனடாவிலிருகின்றான். கல்வியாலும் தொழிலாலும் மொழியறிவாலும் பண்பாலும் சிறந்து விளங்கிய தமிழ் மகன் ஒருவரை, மார்க்கம் நகரசபைத் தேர்தலில் தோல்வியுறச் செய்யவென, இரவிரவாய்ச் சாதி சொல்லிச் சுவரில் சாந்து பூசிய தமிழன் – இழிவுமொழி எழுதிய சுவரொட்டி சுமந்த தமிழன் கனடாவிலிருகின்றான்.
2009ஆம் ஆண்டு ஈழத்தில் தமிழ்க் குருதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த தருணம், ரொறன்ரோ நகரப் பிரதான வீதியொன்றில் தமிழ்மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஊர்வலமாய் ஊர்ந்துகொண்டிருந்த தருணம், வேற்றினத்தவர் அமைப்புக்களும் வீதியில் எம்மோடிணைந்து ஊர்வலம் போய்க்கொண்டிருந்த தருணம், எங்களுக்காகக் குரலெழுப்பியபடி, ரொறொன்றோ சுத்திகரிப்பு ஊழியர் சங்கம் சுமந்து வந்த சுலோகத்தைக் கண்டு, ‘சக்கிலியத் தொழில் செய்யும் சங்கத்தின்ரை சப்போட் எங்களுகென்னத்துக்கு?’ என்று வாய் கூசாமல் கேட்ட தமிழன் கனடாவிலிருகின்றான். ’அவற்ரை ஏறுபெட்டியையும் தளநாரையும் பாரன்…’ என்று சொல்லி ஏளனஞ்செய்து, எள்ளிநகையாடிய தமிழ் எழுத்தாளக் குஞ்சுகள் கனடாவில் இருக்கிறன. ’தமிழிசைக் கருவியான பறையானது, தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து’ எனப் பெருமைபடப் பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனால் அப்பெருமைக்குரிய பறையை எமது இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யவெனத் தன்னை அர்ப்பணித்து, அயராது உழைத்துவரும் இளம் நங்கை ஒருத்தியின் மனதை வருத்தி அவமதித்த, நமது சமூகத்தவரும், நண்பர்களும், நம்பிக்கைக்குரியவர்களும் உற்றாராரும் உறவினரும் கனடாவில்தான் இருக்கின்றார்கள்.
பன்னெடுங்காலமாக யாழ் மண்ணில் ஒடுக்கப்பட்ட சமூகமொன்றை, சங்கம் அமைத்து, இரவு பகலாக வியர்வை சிந்தி வளர்த்தெடுத்த முதியவர் ஒருவர் கடந்த வருடம் கனடா வந்திருந்தார். பெருமக்கள் பலரும் அவர் குறித்து எழுதிய கட்டுரைகளின் திரட்டு ஒன்றினை இங்கு அவரது உறவினர் வெளியிட்டனர். நூல் குறித்து உரையாற்ற நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அதனால் அந்நூலை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்தது. விளைவாக அவர் மீதான எனது மதிப்பு உயர்ந்தது. வெளியீட்டின் பின்னர் அவருடனான தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தேன். ஆர்வமுள்ள நண்பர்கள் பலர் அதில் பங்குபற்றினர். பயன் மிக்கதொரு சந்திப்பு. அடிநிலைச் சமூகமொன்றின் அபரிமிதமான வளர்ச்சிப் பயணத்தின் வெற்றிகளையும் வேதனைகளையும் – வடுக்களையும் வாழ்மானங்களையும் ஒருசேர அவர் வாயிலிருந்து வரக் கேட்டறிந்தோம். ஊர் திரும்பிய அப்பெருமகனைப் புலன் விசாரணையாளர்கள் அடிக்கடி சென்று சந்தித்தனர்; திரும்பத் திரும்ப அவரைத் தேடிச்சென்று குறுக்கு விசாரணை செய்தனர். 80 வயதுக்கும் மேற்பட்ட நோயாளியான அந்தப் பெருமகனுக்கு, தொடர்ச்சியான இவ்வகை இடைஞ்சல்கள் கொடுத்த மன உளைச்சல் காரணமாக, இப்போது அவர் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டவராய், பேச்சுமூச்சற்றவராய், நடமாட்டமற்றவராய் வீழ்ந்து முடங்கிப்போய்க் கிடக்கின்றார். ’ஊரில தன்ரை சாதியைத் தலைநிமிரச் செய்தது போதாதெண்டு வெளிநாட்டுக்கும் வந்துவிட்டானோ’ என்று பொறாமையில் மனம் பொருமி, அவர் குறித்துப் பொய்யான தகவல்களை, இரகசியமாய் அனுப்பிவைத்த தடித்தனம் மிக்க சாதித் தமிழனும் கனடாவில்தான் இருக்கின்றான்.
இவ்வாறாக, எமது சமூகத்தில் சாதியம் இன்னமும் சாகவில்லை என்பதற்கான சாட்சியங்கள் ஏராளம் உண்டு. உடலை நோய் பீடித்தால் சிகிச்சை தேவை. நோய் தடுப்புக்கும், நோயெதிர்ப்புக்கும் மருந்துவம் தேவை. அவ்வாறே சமூகத்தில் நோயிருந்தால், எதிர்ப்பும் தேவை, தடுப்பும் தேவை. அதனைச் சாதிக்கவல்ல கருவிகளில் நிச்சயமாக எழுத்தும் ஒன்று என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. திரு. என்.கே. ரகுநாதன் அவர்களைப் போலவே, அடிமை முறையிலும் கொடுமையான இந்தச் சாதியத்துக்கெதிராக, எழுதுகருவி எடுத்த எழுத்தாளர்கள் அனைவரும் சமூக விடுதலைப் போராளிகளே. கருத்தியல் தெளிவுடனும் ஆழ்மன உணர்வுடனும் இவர்கள் வெளிப்படுத்திவரும் நினைவுகளையும் வாழ்வனுபவங்களையும் தேவைதானா எனக் கேட்டு எள்ளிநகையாடுவது, அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். அது அவர்கள் வாழ்ந்த சமூகத்துக்குச் செய்யும் நிரந்தர அவமானம்!


knavam27@hotmail.com

(மேலுள்ள கட்டுரை’பதிவுகள்’ சஞ்சிகையில் இருந்து மிக்க நன்றியுடன் எடுக்கப்பட்டது.)

சனி, பிப்ரவரி 06, 2021

பௌத்தம்- சிங்களம்-இலங்கை- சுதந்திர தினம்! 4.2.1948!

ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திரதினம் ( 4.07.1776) என்பது வெள்ளை இன அமெரிக்கர்கள் கொண்டாடுவதே என்று சொல்வார் அன்றைய அடிமைமுறை ஒழிப்புப் போராளியும் எழுத்தாளருமான ஃபிரடெரிக் டக்ளஸ் (1818-1895) அவர்கள்.

ஃபிரடெரிக் டக்ளஸ் அவர்கள் அடிமையாகவே பிறந்த அமெரிக்கர். 1852 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய நீண்ட சொற்பொழிவொன்றின் சுருக்கிய வடிவம் கீழே தரப்படுகின்றது. இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து அதன் அரசியல் வரலாற்றின் எதிர்முனை வளர்ச்சி, தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தமுடியாத தோல்வி மற்றும் சிங்கள பௌத்த,பேரினவாத உச்சக் கட்ட வளர்ச்சியின் ” ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி” என்ற அந் நாட்டின் அதியுயர் அதிகாரப் பதவித் தலைவரின் சுதந்திரதின உரையினைக் கேட்கும்போது அன்று ஃபிரடெரிக் டக்ளஸ் அவர்கள் பேசியதைத்தான் ஓரங்கட்டப்படும் வேற்றினப் பிரஜை எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கின்றது.

ஃபிரடெரிக் டக்ளஸ்(FREDERICK DOUGLASS):
" இந்த நாட்டின் சக பிரஜைகளே, நானோ அல்லது நான் பிரதிநிதித்துவப்படுத்தும் என் சமூகமோ நீங்கள் மகிழ்ந்து கொண்டாடும் இந்தத் தேசியச் சுதந்திரத்துடன் எவ்வகையிலும் சம்பந்தமுடையவர்களாக இருக்கின்றோமா? நீங்கள் உன்னதம் என்று களிக்கும் இந்தச் சுதந்திரம் உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான நீண்டு செல்லும் விரிசலையே புலப்படுத்துகின்றது.
முதுசொமென உங்களது தந்தையர்களால் உங்களிடம் கையளிக்கப்பட்டுள்ள சட்டம், நீதி, விடுதலை, செழிப்பு மற்றும் சுதந்திரம் உங்களுக்குள்லேயே பங்குகொள்ளப்படுகின்றன. என்னோடு அல்லவே! உங்களுக்கு ஜீவித்தையும் சேமநலத்தினையும் நல்கும் சூரிய ஒளியோ (சவுக்கடியின்) கோட்டுரணங்களையும் சாவினையுமல்லவா எனக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. இந்த ஜூலை நான்காம் தேதி உங்களுடையதே அல்லாமல் என்னுடையது அல்ல. நீங்கள் மகிழ்ந்து களியுங்கள், நான் துக்கப்பட வேண்டும்.

விலங்கிடப்பட்ட மனிதனொருவனை ஒளிர்ந்து மின்னும் விடுதலை என்னும் ஆலயத்திற்குள்ளே வலிந்திழுத்துச் செல்வதும் ஆனந்த கீதம் இசைக்க வைப்பதும் மனித்துவமற்ற கேலிக்கூத்து. புனித்தின் முரண்நகை. எங்களுக்கான [ கறுப்பு அமெரிக்கர்களுக்கு] ஜூலை நான்கு எதுவென என்னிடம் கேட்டால், இப்படித்தான் நான் பதிலிறுப்பேன்: ஆண்டின் மற்றெல்லா நாட்களையும் விட எந்த நாள் அவனை விடுலைதலை செய்கிறதோ , அளவற்ற அநீதிக்கும், நித்திய குரூரத்திற்கும் பலியாவதில் இருந்து எந்தநாள் அவனை விடுலைதலை செய்கிறதோ அந்த நாளே அது! அதுவரை உங்கள் கொண்டாட்டம் அவனுக்கு ஒரு ஏமாற்று மோசடி. […] காட்டுமிராண்டிகளின் இழிந்த தேசம் தம் குற்றங்களை மறைக்கப் போடும் ஒரு கந்தல் மூடுதிரை.

‚மல்லிகை‘ டொமினிக் ஜீவா: அரை நூற்றாண்டு கால எழுத்து இதழியல் ஊழியம்! 40ஆவது இலக்கியச் சந்திப்பின் உயரிய கௌரவம்!

தோழமைக்கும் பெருமதிப்பிற்குமுரிய டொமினிக் ஜீவா அவர்களை, அவரது அயராத உழைப்பிற்கும் அதன் சமூக முக்கியத்துவத்திற்குமாக கௌரவம் செய்து, எமது ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்துவது முக்கிய கடமை எனக் கருதுகிறோம்!

டொமினிக் ஜீவா நமது சமூக, பண்பாட்டு, எழுத்து செயற்பாட்டில் அரை நூற்றாண்டிற்கும் மேலான பங்களிப்புடைய போராளி! காயங்களையும் வலிகளையும் தாங்கி ஓங்கி ஒலித்த குரல் ஜீவாவுடையது. 'மல்லிகை ஜீவா' என்கின்ற ஒரு இயக்கத்திற்கு நாம் செய்ய வேண்டிய சமூகக் கடமையில் இந்த நிகழ்வு ஒரு சிறு துளியானதே!

இனம், மதம், சாதி, பால், பிரதேச, மேலாதிக்க, அனைத்துவகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக புகலிட நாடுகளில் மாற்றுக் குரலாக செயற்பட்டு வரும் 25 வருட வரலாற்றைக் கொண்ட 'இலக்கியச் சந் திப்பு அரங்கு', அதே மூல நோக்கினை தனது வாழ்நாள் இலட்சியமாகவும் நாளாந்தப் பணியாகவும் கொண்டிருந்த ஜீவா என்கின்ற அந்த மகத்தான வரலாற்று மனிதனை கௌரவிப்பதானது, எம்மில் ஒருவரை கௌரவம் செய்வது என்கின்ற அரசியல் தெளிவுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் இன்று நடைபெறுகிறது.

தோழர் டொமினிக் ஜீவா அவர்களே! உங்கள் அர்ப்பணத்திற்கும் ஓர்மத்திற்கும் முன் நாம் தலை தாழ்த்தி நிற்கிறோம். அதே நேரம் நமது சமூக, அரசியல் தளத்தில் மிகப் பெரும் பங்களிப்பினை வழங்கிய ஒரு மனிதனை, ஒரு தொடர்ச்சியான இயக்கத்தை கௌரவிப்பதற்கு, 'சாதியத்தின் பெயரால்' முடியாதுள்ள சாதிய மேலாதிக்கத்தை அதன் வரலாற்றுக் குருடையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்! இத்தகைய மேலாதிக்கப் போக்குகளை சதா நிராகரித்தும் மறுத்தோடியும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புவதை நமது பணிகளில் முதன்மையானதாகவும் கருதுகிறோம்!ஜீவா அவர்களின் அரை நுாற்றாண்டுப் பணி நம் கண் முன் உள்ளது. 89 வயது, மல்லிகை 401 இதழ்கள், சிறுகதையாசிரியர், இதழியலாளர், பதிப்பாளர், சமூக செயற்பாட்டாளர், அரசியல் கருத்தாளர், பேச்சாளர், விமர்சகர், சுயசரிதையாளர் என டொமினிக் ஜீவா அவர்களின் பங்களிப்பு பன்முக ஆளுமை நிறைந்தது.

நமது தமிழ் எழுத்தியக்க சமூக வரலாற்றில், உற்சாகமும் தன்னம்பிக்கையும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான துணிச்சல்மிகு போர்க்குணாம்சம் கொண்ட வரலாற்று மனிதனாக தனது வாழ்வினை வரித்துக் கொண்ட ஜீவாவின் வரலாறு, ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் மனிதர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகும்.

'சாதியம்' என்னும் மனித சமத்துவத்திற்கு எதிரான கொடூரம், பாகுபாடு டொமினிக் ஜீவாவின் உழைப்பினை மதிப்பதற்கும் அவருக்குரிய இடத்தினை வழங்கத் தடுப்பதற்கும், சமூகப் பொதுத் தளத்தில் பெரும் ஆதிக்க அதிகாரமாக நிலைபெற்றிருக்கிறது. குறுக்கீடும் ஒதுக்கலும் கண்டு கொள்ளாமையும் புறக்கணிப்புமென நிகழ்த்திக் காட்டப்படு கிறது.

'வாழ்நாள் உழைப்பிற்கும் அர்ப்பணத்திற்குமாக' இதுவரையான பங்களிப்புகளை நேர்மையுடன் கணக்கீடு செய்து, நமது தமிழ் வாழ்வில் ஒரு மனிதனை, ஒரு பங்களிப்பாளனை கௌரவிக்க வேண்டுமென நினைத்தால், அதற்கான முழுத் தகுதியும் முன் உரித்தும் வாழ்ந்து கொண்டிருப்போரிடையே டொமினிக் ஜீவா அவர்களுக்கே உள்ளது. ஈழத்து தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, உலகளாவிய தமிழ்மொழிச் சூழலில் ஜீவாவே இந்த கௌரவிப்புக்கு தகுதியான முதலாமவர்.

மொழி, கலை, பண்பாடு, எழுத்து என்கின்ற தளத்தில் ஜீவா அவர்களே வயதினாலும் வாழ்நாளினாலும் தளராத பணியாலும் நம்முன் உள்ளார். ஆனாலும் ‚வாழ்வை விட வலியது சாதி' என்கிற மேலாதிக்கமிகு சாதிய அதிகாரம் ஜீவாவிற்குரிய இடத்தினை வழங்க மறுத்தது, மறுக்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்க மறுத்த கௌரவம் வரலாற்றுக் கறைக்குரியது. இதுவரை டொமினிக் ஜீவா அவர்களுக்குரிய கௌரவத்தினையும் மதிப்பினையும் வழங்க மறுத்து நிற்கின்ற சமூக, கல்வியியல் நிறுவனங்களின் அரசியலை ஜீவா துணிச்சலுடன் எதிர்கொண்டு நின்ற உறுதிநிலை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கௌரவத்தினைத் தந்தது. சாதிய மேலாதிக்கத்தின் கரிய முகத்தினை உலகிற்கு அம்பலப்படுத்தியது.

„ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்“ஒடுக்கப்பட்ட மக்களின் பெயரால், நமது பெருமதிப்பிற்குரிய ஜீவா அவர் களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியைக்கண்டு, மானிட குலத்தை சமத்துவமாக நேசிக்கும் உள்ளங்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றன.

கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்புலத்திலிருந்து வந்து, பொதுவுடைமைவாதியான மு.கார்த்திகேசன் மாஸ்டரைத் தனது அரசியல் முன்னோடியாக வரித்து, 'இழிசனர் இலக்கியம்' என அடையாளப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் கதைகளை எழுதியவர் ஜீவா! அவரது எழுத்துக்கள் சாதாரண மக்களின் பாடுகளைப் பேசியதுடன், அவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிக்கெதிரான வீச்சான உணர்வுகளையும் மனித நீதியை நிலைநாட்டப் போராடும் கலகக் குரலையும் தன்னகத்தே ஒருங்கேகொண்டவை. 'மல்லிகை இதழ்' இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒடுக்கப்படுகின்ற அனைத்து மக்களின் குரலாகவும் அதற்கான விளைநிலமாகவும் இருந்தது. ஒடுக்குமுறையாளர்களுடன் சமரசம் என்பதே ஜீவாவின் வாழ்வில் இருந்ததில்லை.

மல்லிகை இதழ் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒடுக்கப்படுகின்ற அனைத்து மக்களின் குரலாகவும் அதற்கான விளை நிலமாகவும் இருந்தது அவரது அரசியல் பார்வையையும் வழிமுறையையும் பொறுத்தவரை அவர் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் இணைந்த வாழ்வையும், இன அரசியல் வழிமுறையை முன்னிலைப்படுத்தாத நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடிய, இனவாதத்திற்கெதிராக எழுதிய, பேசிய அனைவரையும் ஜீவா நேசித்தார். இந்தக் கருத்தியலுக்கு அமைய சிங்கள மக்களிடமிருந்து வந்த சிங்கள மூலமொழிப் படைப்புகளை, தனது மல்லிகை ஊடாக தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். மல்லிகையில் முஸ்லிம், மலையக மக்களின் படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து களம் தந்தார்.

அம்பேத்கார் அவர்களின் நூற்றாண்டையொட்டி 1990களில் தமிழ்ச் சூழலில் மேற்கிளம்பி வந்த 'தலித் எழுத்து கருத்தியல் அடையாளம், ஈழத்தில் 1960, 1970 களில் தொடங்கி ஒரு பெரும் எழுத்தியக்கமாக செயற்பட்டது என்பதற்கு டானியல், டொமினிக் ஜீவா அவர்களின் எழுத்துக்கள் சான்று பகர்கின்றன. தமிழில் தலித்திய எழுத்தியக்கத்திற்கு ஜீவாவின் பங்களிப்பு கணிசமானது.

டொமினிக் ஜீவா அவர்களின் சுயசரிதமான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' தலித் செயற்பாட்டாளர்களுக்கும் சமூகப் போராளிகளுக்குமான துணிச் சல்மிகு வாழ்வுப்பிரதி. இப்பிரதி ஜீவாவின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, சாதியக் கட்டுமானம் மிகுந்த சமூகத்தின் முகத்தை ஆவணப்படுத்தியுள்ள ஒரு தலித் போராளியின் வாழ்வும் அனுபவமும் கூடி வந்த ஒரு பிரதியாகவும் உள்ளது. இதுவரை வெளியாகி உள்ள ஈழத்தமிழ் பிரதிகளில் ஜீவாவின் சுயசரிதம் தனித்த ஒரு இடத்தினை கொண்டது.

சாதியத்தின் பெயரால் பெரும்பான்மையான மூத்த தலைமுறையாலும், நமது காலகட்ட தலைமுறையாலும் ஒதுக்கப்பட்டு வந்த இத்தகைய பிரதிகள், 1990க்குப் பின் எழுத்துத்துறைக்கு வந்த இளைய தலைமுறையாலும் சரியாக வாசிப்பு செய்யப்படவில்லை. ஜீவா போன்றவர்களின் எழுத்துத் தன்மை குறித்தும், அதன் அழகியல் குறித்தும், அவரது இதழியல், மற்றும் பதிப்பு பணி குறித்தும் ஒரு மறுவாசிப்பு பார்வை மேற்கிளம்பவில்லை. இன்னொரு வகையில் சொல்வதானால் புதிய இளைய தலைமுறையின் பெரும்பான்மையான பகுதியினர் இந்த வகை எழுத்துக்களை - பிரதிகளை கண்டு கொள்ளவில்லை. இதற்கு ஒருவகையில் தேசிய இனப்பிரச்சினையும், அதன் பாற்பட்ட எழுத்துக்கள் எழுதப்படும் காலகட்ட சூழலும் காரணம் என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படலாம். ஆனாலும் தமிழ் தேசியப் பிரச்சினையில், தலித் மக்களின் இடம் தொடர்ந்தும் மறுக்கப்படுவதே இந்த நிலைக்கான பிரதான கார ணமாகும். தலித் எழுத்துக்கள் மீதான அதிகக் கவனக் குவிப்பும் அது தொடர்பான வாசிப்புப் பெருக்கமும் ஈழத் தமிழ் சூழலையொட்டி நிகழாதது பெரும்குறைபாடே.

டொமினிக் ஜீவா அவர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்வில் ஈழத் தமிழ்ப்பரப்பில் வெளியான தலித் படைப்புகள் மற்றும் விளிம்பு நிலை படைப்புகளை முற்கற்பிதங்களைக் கடந்து வாசிப்பு செய்வது அவசியமானது என்பதனை வலியுறுத்துகிறோம். அப்படி வாசிக்கப்படுவது தொடங்கப்படுமானால் பல வாசல்கள் திறக்க வாய்ப்புள்ளது. நிறைவாக, இந்த உயரிய கௌரவத்திற்கும் வரலாற்றுப் பதிவிற்கும் டொமினிக் ஜீவா அவர்கள் முழுப்பெறுமதி உடையவர், அந்த வரலாற்று மனிதனை கௌரவிப்பதனுாடாக இலக்கியச் சந்திப்பு அரங்கு பெருமிதமடைகிறது.

40வது இலக்கியச்சந்திப்பு - லண்டன்
6-7, ஏப்ரல் 2013