சனி, டிசம்பர் 05, 2020

எதுவரை தொடரும் மனிதரின் கதை!

தமிழில்: ந.சுசீந்திரன்

சல்மான் றுஸ்டிக்கு (Salman Rushdi) மரணதண்டனை பிறப்பித்த மூன்றாவது ஆண்டையொட்டி குந்தர் கிறாஸ் (Günter Grass) அவர்கள் பிபிசி (BBC) தொலைக்காட்சியில் ஆற்றிய உரை.குந்தர் கிறாஸ் (1927-2015):
இரண்டாம் உலகபோருக்குப் பின்னரான மேற்கு ஜெர்மன் இலக்கிய வரலாற்றில் ஹென்றிஸ் பொல் (Heinrich Böll), குன்ரர் கிறாஸ்(Günter Grass), ஊவே ஜான்சன்(Uwe Johnson), சீக்பிரீட் லென்ஸ் (Siegfried Lenz) ஆகியோர் மிக முக்கியமானவர்கள். 16.10.1927 இல் டான்சிக்கில்(போலந்து) பிறந்த கிறாஸ் 1959 இல் தகர மேளம் (Die Blechtrommel- The Tin Drum)என்ற நாவல் மூலம் உலக அளவில் பரவலாக அறியப்பட்டவர். அறுபதுகளில் தீவிர அரசியல் விமர்சனங்களில் இறங்கியவர்; சிற்பி, கவிஞர், ஓவியர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், நாடகாசிரியர் என்று பன்முனைப் படைப்பாளி. 1999 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். 2006 இல் வெளியாகிய ’வெங்காயத்தினைத் தோலுரிக்கும் வேளை’ (Beim Häuten der Zwiebel) என்ற தன் வரலாற்று நூலில் 1944 இல் ஓரு பதினேழு வயது இளைஞனாக நாசிகளின் எஸ்-எஸ் ஆயுதப்படையில் இயங்கியதைத் தெரிவித்து, சர்ச்சைக்குள்ளானார்.

ஹென்றிஸ் பொல் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் உலகெங்கும் ஒடுக்கப்படும் எழுத்தாளர்களுக்காகக் குரல்கொடுக்கும் சேவையைக் கிறாஸ் அவர்களே தொடர்ந்து மேற்கொண்டார். இவருடைய ஆக்கங்களின் சாயலை Salman Rushdie யிடம் காணலாம். இவரது இன்னும் பல ஆக்கங்களில் “Katz und Maus", "Hundejahre", "Der Butt", "Die Ratte" போன்றவற்றில் ஒரு கவித்துவ மொழியும் அங்கத நகைச்சுவையும் செறிந்திருக்கும்.

சல்மான் றுஸ்டி:
1947 இல் மும்பாயில் பிறந்தவர். 1988 செப்டெம்ப்ரில் சாத்தானின் வாக்கியங்கள் (Satanischen Verse) என்ற நூல் வெளியாகிய பின்னர் பெப்ரவரி 1989 இல் ஈரானிய ஆன்மீகத்தலைவர் அயத்துல்லா கொமெய்னி இவருக்கு மரணதண்டனை பிறப்பித்தார். பின்னர் வெளி உலகுடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுத் தலைமறைவாக வாழுகின்றார்.


ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)[1] அவர்கள் 1937 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலிருந்து திரும்பிய போது, ஸ்பெயின் உள்நாட்டு யுத்தத்தில் தனது விஸ்தாரமான அனுபவங்களை வெளிப்படுத்தும் குறிப்புக்களை ’வணக்கம் கடலோனியா’('Homage to Catalonia’) என்ற தலைப்பில் கைப்பிரதியாக எடுத்துவந்தார். இந்த நூலை வெளியிட முதலில் எந்தப் பதிப்பகத்தாரும் முன்வரவில்லை. இங்கிலாந்தில் அன்று மிகவும் செல்வாக்குடனிருந்த இடதுசாரிப் புத்தி ஜீவிகள் அனேகர் ஆர்வெல் அவர்களின் இந்த அதிர்ச்சிதரும் தகவல்களை ஏற்றுக் கொள்ள விரும்பாது இதன் வெளியீட்டைத் தடுத்து வைத்தனர்.
அவர்கள் ஸ்டாலினின் அக்கிரமத்தை, அவர் அனார்ஸிட்டுக்களையும் ரொட்ஸ்க்கியவாதிகளையும் தீவிர இடது சாரிகளையும் திட்டமிட்டே மேற்கொண்ட அழிப்புகளை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இந்த அழிப்பில் இருந்து ஆர்வெல் கூட மயிரிழையிற்றான் உயிர் தப்பினார். ஆர்வெல் அவர்களின் மிகவும் யதார்த்தமான குற்றச்சாட்டு அன்றைய 'பாசிசத்திற்கெதிரான போராட்டத்தை முன் நகர்த்தும் அப்பழுகற்ற சோவியத் நாடு' என்ற புனித உலகச் சித்திரத்துடன் முரண்பட்டு நின்றது. ஆர்வெல் அவர்களின் அறிக்கைகள், குற்றசாட்டுக்கள் சகிக்கமுடியாத நிஜங்களாய், இது மட்டுமே நல்லது இவை கெட்டன என்ற சித்திரக் கதைகளில் சொல்லப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட உலகத்தின் விம்பத்தை உடைத்தெறிந்தது.
சுமார் ஒரு வருடத்தின் பின்னரே ஒரு மிதவாதப் பதிப்பகத்தினரால் இங்கிலாந்தில் இந்நூல் வெளியிடப்பட்டது. கம்யூனிட்டுக்களுக்கு மத்தியில் அவர் பெற்ற கசப்பான ஸ்பெயின் அனுபவங்களைக் கூறும் ஆர்வெல் அவர்களின் படைப்புக்கள் - அனைத்தும் சுமார் அரை நூற்றாண்டு காலமாகத் கம்யூனிச ஆட்சி நிலவிய அனைத்திடங்களிலும் தடைசெய்யப்பட்டிருந்தன. கிழக்கு ஜெர்மனியின் அரச பாதுகாப்பு மந்திரியாக இறுதிவரை இருந்த எறிக் மீல்க்க (Erich Mielke)[2] ஸ்பெயின் போரின் போது முன்னணிக் கம்யூனிசப் படைத் தலைவர்களில் ஒருவர். மர்மக் கொலைகளின் மூலம் களையெடுப்புக்களை நடத்தியவர்; ஸ்பெயினில் போராடியவர் ஆனால் அங்கு எப்பொழுதும் உயிர் தப்பிவாழும் பதவியில் இருந்தவர்.
ஜார்ஜ் ஆர்வெல் அவர்களுக்கு ஏற்பட்ட இவ்வாறான நெருக்கடி, புத்தி ஜீவிகள் எப்படி தணிக்கை அதிகாரிகளாகவும் அதேவேளை மறுமுகமாக மிகவும் பாதிக்கப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதனை நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. அதனால் எனது உரையின் தொடக்கமாக இந்த உதாரணத்தை எடுத்துக்கொண்டேன். இந்த நெருக்கடி இன்னும் முற்றுப்பெற்றுவிடவில்லை.
கம்யூனிச அதிகாரத்தின் வீழ்ச்சி இயல்பாக அதன் புதிய வெற்றி நாயகர்களை அதிகாரத்தில் நிறுத்துகின்றது. இந்த நாயகர்களோ எந்த மாறுபாடுமற்று அவர்களின் கண்ணாடி விம்பங்களாகவே முன்னைய அதிகாரத்தில் நடந்தவாறோ அல்லது அதைவிட மோசமாகவோ சொல்லப்போனால் மெர்கர்த்தி (Mc Carthy)[3] பாணியிலான அடக்கு முறைகளையே மீண்டும் ஆரம்பிக்கின்றனர். முஸ்லிம் மதவெறிப்போக்கு அன்றைய மத்தியகாலத்துச் சட்ட திட்டங்களோடு, அதன் எச்சசொச்சச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதைப்போலத் தோற்றமளித்தாலும், நுணுக்காய்வுப் புத்திபடைத்த மேற்கத்தைய அரசியலமைப்புக்களும் கூட இதைவிட வேறுபட்ட ஒரு பயங்கரவாதத்திற்கான எதிர்காலத்தையே தம் தேவையாக வேண்டி நிற்கின்றன. பழைய நிலவுடமைச் சமூக மத்தியகாலமும் (3. -13. ம் நூற்றாண்டு) இன்றைய நவீனகாலமும் ஒரே தன்மையில், ஒரே காலத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. அன்றைய மத அதிகாரத்தின் நீதிமன்றும் சிரச்சேதங்களும் இன்று கணினிகளில் – கம்பியூட்டர்களில் அனைத்து விபரங்களையும் உள்வாங்கிச் சேமிப்பதன் மூலம் செய்யப்படுகின்றன.
இந்த மிலேனியம்-நூற்றாண்டு உலக அரசியல் அரங்கில் அனேக விடயங்களில் பின்னோக்கிய வீழ்ச்சியோடு தான் முடிவுக்கு வருகிறது. ஆர்மேனியாவில் (1920 வாக்கில் நடந்ததைப் போலவே ) இனப்படுகொலை நட்கின்றது. பால்க்கன் (யூக்கோஸ்லாவியா) நாடுகள், போர் என்பது திரும்பத் திரும்பச் செய்யப்படவேண்டிய நிர்ப்பந்தம் போல் தங்களுக்குள் யுத்தம் செய்கின்றனர். உரிமைகள் மீட்டெடுக்கப்படுந் தறுவாயில், சுதந்திரம் அங்கே மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் முடக்கிவிடப்படுகிறது. நாசகாரக் கொள்ளைக்கோஷ்டி போலவே தேசியவெறியர்கள், யூத எதிர்ப்பாளர்கள், முல்லாக்கள், உயர் பீடப்பாதிரிகள், முதலாளித்துவவாதிகள், இளம் பாசிஸ்ட்டுக்கள். பழைய ஸ்டாலினிஸ்டுக்கள் என்று இந்தச் சபிக்கப்பட்ட நூற்றாண்டின் பிரதான பாத்திரங்கள் ஜனநாயகத் தாராளவாதத்தில் தமது ஒப்பனை அலங்கரிப்புக்களைச் சீர்திருத்தமாகக் காட்டிக் கொண்டு திரையகற்றி மேடைக்கு முண்டியடித்துக் கொள்கின்றனர். பேச்சுச் சுதந்திரத்திற்குக் குரல் கொடுக்கின்றனர். ஆனால் தனித்தனியே தங்கள் தங்களுக்காக.
ஒருவர் குரலை இன்னொருவர் அடைத்துவிட எத்தனிக்கும் இந்த அனேக கூக்குரல்களினால் எனக்கு முன்னால் இருக்கும் இந்த விடயத்தைத் தாண்டி இன்னும் பலவற்றைப் பேசுவதற்கு எனக்கு மிகவும் கஸ்டமாக இருக்கிறது.

[1]George Orwell:1903-1950; ஆங்கில எழுத்தாளர்:1936/37 இல் ஸ்பெயின் உள்நாட்டு யுத்தத்தில் பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போராடியவர்: விலங்குப் பண்ணை, 1984 (தமிழில்:க.நா.சு) போன்ற உலப்புகழ் பெற்ற நூல்களின் ஆசிரியர்.

[2]Erich Mielke : முன்னைய கிழக்கு ஜெர்மனியின்(German Democratic Republic) இன் உளவுப்பிரிவின் (Staatssicherheit;சுருக்கமாக:STASI) தலைவராக இருந்து அனேக அரசியல் மாற்றுக் கருத்து எதிரிகளைப் பழிவாங்கியதாக மற்றும் பல குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் 1931 ம் ஆண்டு ஒரு பெர்லின் அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச் சாட்டுக்கு மேற்கு ஜெர்மன் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

[3]Mc Carthy (1909-1957): US அமெரிக்காவில் 1950 களில் அரச உயர் திணைக்களங்கள் கம்யூனிஸ்டுக்களினால் நிரப்பப் பட்டுள்ளதாகக் குற்றஞ் சாட்டியும், அனைத்துச் சமூக விமர்சனங்களையும் கம்யூனிசப் பின்னணி என்றும் விசமப்பிரச்சாரம் செய்து அவர்களை வேட்டையாடிய அரசியல்வாதி.

மானுடச்சுய அழிப்புக்கு இட்டுச்செல்லும் எல்லா வகையறாக்களையும் பற்றிப் பேசுவதற்கு எனக்கு ஆவல் இருந்தாலும் அவற்றைத் தவிர்த்து, நிச்சயமாக இலக்கியத்தோடு மட்டும் நின்று கொள்ளுகிறேன்.
இலக்கியத்தையும். அதற்கேற்படும் அவலத்தையும் பற்றிப் பேசுவதற்கு எப்பொழுதும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. எப்பொழுது எழுதத்தொடங்கினார்களோ அன்றே எழுத்தின் மீதான தடைகளும் தொடங்கிவிட்டன. அதிகாரம் என்ற வார்த்தை ஆரம்பிக்கப்பட்டவுடனேயே கலைஞர்களுக்கும் தத்துவஞானிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் நஞ்சு, தடையுத்தரவு, தணிக்கை, தலைமறைவு வாழ்க்கை, கொலை முகாம், தனிமைச் சிறை, உயிர் போகும்வரை சித்திரவதை என்று யாவும் உறுதிசெய்யப்பட்டு விட்டன. இது சாக்கிரடீஸ் தொடக்கம் ஒவிட்(Ovid)[4] வரை மொன்ரேஞ் (Montaigne)[5] தொடக்கம் ஹைன (Heine)[6] வரை சோலா (Zola)[7] தொடக்கம் மண்டெல்ஸ்ரம் (Mandelstam)[8] வரை ஆர்வெல், காவ்ஃகா (Kafka)[9], றுஸ்டி(Rushdie) வரை அவை ஒரு காட்சிமண்டபமேதான்.
இலக்கியமும் அதனுடன் நெருக்கமாகப் பிணைந்திருக்கும் தணிக்கை எனும் எதிரொலியும் உள்ளவரை சொல்லின் சுதந்திரம் வேண்டி ஒரு சாராரும், எழுத்துக்கு வரையறைபோட இன்னொரு சாராரும் இருப்பார்கள். இலக்கியத்தினதும் அதன் மீதான தடையினதும் இணைந்த போக்கானது, இதில் யார் எழுதி யார் தடைசெய்கிறார் என்பதில் தங்கியில்லை. ஏனெனில் தணிக்கை செய்வதன் மூலமே, தமது வாழ்க்கையைக் குறிப்பிட்ட காலம் வரை ஓட்டிய பிரபல பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்களின் பட்டியல் இருக்கவே இருக்கிறது. ஒருவர் எழுத இன்னொருவர் தடைசெய்வதென்பது, அது இன்னும் தொடர்கிறது. அரசியற் காற்று அடுத்த பக்கம் மாறிய அண்மைக்காலம் வரை எழுத்துக்குத் தடை விதிப்பதில் தமது சம்பாத்தியத்தைப் பெற்றவர்கள் பலர். இன்றைய அனுபவ சாட்சியங்கள் வாயிலாக நாம் கீழ்வரும் முடிவுக்கு வரலாம்: நன்கு கைவரப்பெற்ற தணிக்கையென்பது, ஒரு இலக்கியமறிந்த தணிக்கையாளர் ஒருவராலேயே சாத்தியப்படலாம். அதேவேளை நன்கு இலக்கியப் பரிச்சியம் உள்ள ஆனால் சிலவேளை இலக்கியத்தில் நேசமில்லாத ஒருவரால் மிகத்திறமாகத் தணிக்கையைச் செய்யக்கூடியதாக இருக்கும். ஒருவேளை அவர் இலக்கியப் படிவங்களைக் கைப்பற்றுவதிலும் பரீட்சிப்பதிலும், பின்னர் அதனைத் தடைசெய்வதிலும் வெறிகொண்டிருந்து விட்டால் இது இன்னும் விசேடமாக நடைபெறலாம்.
இத் தணிக்கை ஓர் உயர் ரகமாக அதாவது தணிக்கையாளர் பதிப்பாசிரியராக இருந்தும் நடாத்தப்படலாம். ஜெர்மனியில் நாடெங்கிலும் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறியின் போது 'ஆபத்தான இலக்கியங்கள்' என்று அடையாளம் காணப்பட்டவற்றை அழிப்பதற்கு இது போன்றதும், இதனையும் மிஞ்சக்கூடியதுமான நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதை ஜெர்மனியில் இருப்பவர்கள் தெரிந்திருப்பர். இதற்கும் மேலால் எனது நாடு பகிரங்கமாகப் புத்தகங்களுக்குத் தீவைத்த நாடு. அதன்பின்னர் எழுதியதெதுவும் அச்சிடக் கூடாது என்பது மட்டுமல்ல, மௌனமாக்கப்பட்ட படைப்பாளிகள் மீது அட்டூழியங்களும் அவர்களைத் துன்புறுத்தின.
எறிக் மூஸாம் (Erich Mühsam)[10] வதைமுகாமில் கொல்லப்பட்டார்: கார்ல் பொன் ஓசியெற்ஸ்க்கி (Carl von Ossietzky)[11] வதை முகாமின் சித்திரவதைகளினால் கொல்லப்பட்டார். பெரும்பாலானோருக்கு புகலிடம் மட்டுமே கைகொடுத்தது. புகலிடமென்பது நாடு நாடாக ஓடுவது அல்லது தற்கொலையிடம் தஞ்சம் புகுவது. தற்கொலை என்றவுடன் வால்ரர் பென்ஜமீன் (Walter Benjamin)[12] அவர்களை இந்த இடத்தில் நினைவு கூரலாம்.
இது போலவே ஏனைய கலைஞர்களது அனுபவம் இருப்பினும், மக்கள் பேசும் மொழியின் ஓசையைக் கேட்கவேண்டிய, அவர்களின் உதடுகளின் அசைவைப் பார்க்க வேண்டிய, பேசும் மொழியோடும் இயல்போடும் சூழலோடும் இரண்டறக் கலந்தவர்களான எழுத்தாளர்கள் என்ற கலைஞர்களின் அனுபவங்கள் இன்னும் கசப்பானவை. புலம் பெயர்ந்த போது அவர்களால் மேற்கொண்டு எழுத முடியவில்லை. எழுத்து வாழ்க்கை எழுத்தாளன் என்ற வாழ்க்கை அவர்களுக்குக் குறுகிப்போயின. எவ்வளவு காலத்திற்குத் தான் மொழியைத் தேக்கிவைக்க முடியும் ? எவ்வளவு புத்தகங்களால் நினைவுகளை உள்ளபடி மீட்டு வர முடிகிறது?
ஜெர்மன் இலக்கிய வரலாற்றில் ஒருபுறம் எதனோடும் சமப்படுத்தமுடியாத மறுபுறம் இணைக்கவும் முடியாத ஒரு முறிவாக அமைந்து விட்ட புகலிட இலக்கியம் இவ்வாறு தான் உருவாகின்றது. தோமஸ் மான்(Thomas Mann)[13] , ஹெய்ன்றிஸ் மான் (Heinrich Mann)[14] , அல்பிரெட் டொய்ப்பிளின் (Alfred Döblin[15]) , ரொபெர்ட் மூசில் (Robert Musil)[16] என்று இவர்கள், இவர்களின் படைப்புக்கள் புகலிடம் என்ற தழும்பைத் தாங்கி நிற்கிற போதும் இன்று வரை அந்நியமாக்கப்பட்டே உள்ளனர், உள்ளன.
அழைக்கப்படாத விருந்தாளிகளாக புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தமது நாடு திரும்பியபோது அங்கேயும் இங்கேயுமாகத் துண்டாடப்பட்ட நாட்டில், அந்தந்த நாட்டின் அரசியலமைப்புக்கு ஏற்றவாறு வாழ வேண்டியிருந்தது. தடையிலும் தணிக்கையிலும் இவர்கள் ஏற்கனவே துன்பப்பட்டிருந்த போதும் நாடு திரும்பிய இவர்களிற் சிலர் புதிய முறையிலான அல்லது ஏலவே அறிமுகமாகிப் போயிருந்த திணிப்புக்குப் பலியாகிப் போனார்கள்.
இலக்கியங்கள் மீது தணிக்கை-தடை எனும் கட்டுப்பாடு கட்சி சார்பு ரீதியாக அல்லது வர்க்கப் போராட்ட ரீதியாக நியாயப்படுத்தப்பட்ட போது தணிக்கையின் தலையீட்டை இவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்கள். இந்த முரண்பட்ட நிலைப்பாடுகளுக்கு பெர்தோல்ட் பிறெஸ்டும் (Bertolt Brecht)[17] அன்னா சேகேர்ஸையும் (Anna Seghers)[18] உதாரணமாகக் கொள்ளலாம்.
ஜெர்மன் மொழியின் கட்டற்ற இலக்கியக் காலத்தை(Romantik) நோக்கினால் இவர்களுக்கு முன்னோடிகள் அங்கேயும் இருக்கின்றார்கள். இருப்பினும் அதன் மூலம் இவர்கள் போக்கினை நியாயப்படுத்தி விடமுடியாது. பிறீட்றிஸ் ஸ்லேகலும்(Friedrich Schlegel)[19] க்ளெமென்ஸ் பொன் பிறென்ரானோவும் (Clemens von Brentano)[20] பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நிலவிய மெட்டேனிஸ் (Metternich)[21] ஆட்சிக்கு நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு உளவாளிகளாக, தணிக்கையாளர்களாக மிகவும் ஆர்வத்தோடு மனம் வைத்துச் செயற்பட்டிருக்கின்றனர். தெளிவற்ற ஒரு இலக்கியப் பாரம்பரியம் இன்றைய நிகழ்கால இழுபறிகள் வரை நிழலாகப் பின்தொடர்வதை எடுத்துக் காட்டவே மேற்படி உதாரணங்களை நான் இங்கே எடுத்துக் கொண்டேன்.
கிழக்கு ஜெர்மனியின் (German Democratic Republic) அரசுக்கு எதிரானவர்களின் ஆக்கங்கள் இரகசியமாகவே எழுதப்படுகின்றன, தலைமறைவில் எழுதப்படுகின்றன என்று நாம் இரண்டு ஜெர்மன் மொழிப் படைப்பாளிகளைப் பற்றி எண்ணியிருந்தோம். அவர்களும் அப்படித்தான் தம்மைப் பற்றி நினைத்திருப்பார்கள். ஆனால் அந்த இருவரும் அரசின் நெடு நாளைய, நீண்டகால உளவாளிகள் என்பது பின்னரே தெரிய வருகிறது. முழு மக்களையும் கண்காணிக்கும் அமைப்பினுடைய ஆரம்பப் படியாக; அதற்கு இன்றியமையாத மூலமாகத் தணிக்கைத் திணைக்களம் இயங்குகின்றது. இலக்கியத்தை உற்பத்தி செய்கிறது.
'இரட்டை வாழ்க்கை' என்பது சந்தர்ப்பவாதிகளின் போக்கிடமாகக் கூறப்பட்டாலும் இவர்கள் போக்கினை இரண்டக நிலையெனக் குறிப்பிட முடியாது. இவர்கள் தணிக்கையாளர்கள், இலக்கியக்காரர் போலப் புத்தகங்கள் எழுதுவார்கள்.
ஒரு சில எழுத்தாளர்களை இங்கே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்க இது சரியான சந்தர்ப்பமாக எனக்குப் படவில்லை. ஆனால் மறந்துபோன அல்லது மறைந்துபோன இவ்வகைப் பழைய அனுபவங்கள் அதாவது இவ்வகைப் போக்குகள் மீண்டும் தலைதூக்குவதொன்றும் அதிசயமில்லை. அரச அதிகாரம், திருச்சபை அதிகாரம் என்பவற்றோடும் அவற்றுக்கிடையிலும் ‘பேச்சு-எழுத்து சுதந்திரத்தின் பகைவர்களாக’ ஒரு சில எழுத்தாளர்களும் தொழிற்படுகின்றனர் என்பதை அறியமுடிகிறது. விட்டுக்கொடுப்புக்கும் சகிப்புத்தன்மைக்கும் பேர்பெற்றவர்கள் என்று அறியப்பட்டவர்கள் சிலர் திரைக்குப் பின்னால் அதற்கு எதிராக, விட்டுக்கொடுக்காது, சகிப்பின்மையற்று அதிகாரத்தின் சேவகர்களாக மாறிவிடுகிறார்கள். இவர்களின் செயற்பாடுகள் நுட்பமானவை. தணிக்கைக்கு அப்பால் ஒருவகைத் தாராளத் தன்மைபோல் தோன்றும். அரசதிகாரத்தின் நேரடிக்கட்டுப்பாட்டின் தலையீடு இல்லாது, ஒரு மெல்லிய அதிகாரத்தொனியுடன் செயற்படும். .
இன்றைய சமகால இலக்கியங்களில் சமுக விமர்சனங்கள் தவிர்க்கமுடியாது அரசியற் பார்வைகளைக் கொண்டிருப்பின், அவை எழுத்தாளர்களது அரசியல் நிலைப்பாடு என்று முத்திரை குத்தப்பட்டு நிராகரிக்கப்படுவது இனியாவது தவிர்க்கப்பட வேண்டும்.
தங்கள் ஆத்மாவை பூரண திருப்திப்படுத்தக் கூடியதாக எழுதப்பட்டால், நிச்சயமாக அரச அதிகாரமோ, மடாலய அதிகாரமோ மகிழ்ச்சியடைவார்கள். 'கலை கலைக்காகவே' என்று கலைஞர்கள் தங்களின் தற்திருப்திக்காக படைக்கப்படுகின்ற ஆபத்தில்லாதவற்றை விட ஏனையவற்றை இவர்களால் சகிக்க முடியாது. எப்போதும் மனித வாழ்க்கையின் யதார்த்தமான போக்குகள் சீரழிந்து விடுகின்ற போது 'கலை கலைக்காகவே என்ற வாதம் நாகரிகமாக உருவெடுக்கிறது.
உண்மையில் இன்று நாற்றமடிக்கின்ற யதார்த்தம் உள்ளடக்கத்தை விட்டு விலகி, வடிவ வாஞ்சைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. பார்க்கப்போனால் நிறம் பற்றியோ , சுருதி பற்றியோ, மொழியழகு பற்றியோதான் இறுதியில் பிரஸ்தாபிக்கப்படுகிறது. உட்பொதிவு இல்லாமல் அழகு ஜெயிக்கிறது. இதனால் தணிக்கைக்கோ தடைக்கோ அவசியமேற்படுவதில்லை. நவீனத்துவத்திற்குப் பிந்திய காலகட்டத்தில் எல்லாம் விரும்பியவாறு நடப்பதால் தணிக்கைகள் அதிகம் பயன்படுவதில்லை. கரைச்சலில்லாத இலகுவாகக் கையாளக்கூடிய இலக்கியங்கள்; தத்தமது செல்லக்கைகளை முத்தமிடத் தருகின்ற இலக்கியங்கள். இவை தான் இவர்களுக்குத் தேவைப்படுகின்றன. இருந்தாலும் ஏனைய எழுத்தாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த எழுத்தாளர் பலருடைய படைப்புக்கள் இலகுவானதாகவும். தமாஷாகவும் எழுதப்பட்டாலும் , வார்த்தைககள் அவை பல அர்த்தங்களைக் கொடுக்கக் கூடியவை. உயர்பீட மடாலய மீட்பர்களுக்கோ ஒருபொருள் கொண்ட வார்த்தைகள் மட்டுமே சகிக்கக் கூடியவை. அது இல்லாதபோது அவர்களின் கோபத்தை இந்தப் படைப்புக்கள் சம்பாதிக்கின்றன. இந்த வகையில் சல்மான் றுஸ்டி இன்று எங்களை ஒன்றாக்கியுள்ளமை மிகவும் அரிதாக நடைபெறக்கூடிய ஒரு விடயம் தான்.

இதனை நாம் எமக்கேற்பட்ட பிரச்சினயாக விளங்கிக்கொள்ள வேண்டுமென்பதை அவருக்கு ஏற்பட்ட நிலைமைகள் நம்மை எச்சரிக்கை செய்கிறன. இந்த எழுத்தாளனை மிரட்டுவோர் எம்மைத்தான் மிரட்டுகிறார்கள். அவனை ஊமையாக்கி உயிரைப் பறித்து விட விரும்புவோர் இறுதியில் எம்மையும் எம் குரலையும் உயிரையும் காவு கொள்ளவே என்பது எமக்குப்புரிகிறது. சல்மான் றுஸ்டியுடன் நாம் எல்லோரும் தான் எச்சரிக்கப்படுகிறோம்.

இவரது நூலை ஐப்பானிய மொழியில் மொழி பெயர்த்தவர் கொல்லப்பட்டார். இத்தாலிய மொழிபெயர்ப்புச் செய்தவர் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார். இவர்களையும், றுஸ்டியுடன் சேர்த்து ஆபத்திற்கு முகங்கொடுக்கும் அனைவரையும் நாம் மறந்து விட முடியாது. மறந்து விடக் கூடாது. உயர் பீட மடாதிபதிகளின் அதிகாரத்தை நாம் உடைத்தெறியப் போவதில்லை. அவர்கள் விதித்த மரண தண்டனையை நாம் இரத்து செய்ய முடியாது. கொல்வதற்கு அவர்கள் கொடுக்கும் சன்மானப் பணத்தின் பெறுமதியை நாம் இல்லாமற் செய்து விடமுடியாது.அரசியல் வாதிகளோ, தொழில் அதிபர்களோ தங்கள் வியாபாரத்தையும், புகழையும் புறமொதுக்கி இது விடயத்தில் தலையிடப் போவதில்லை. தியமென் சதுக்கச் சிரச்சேதத்தின் பின்னே எவ்வாறு வியாபாரங்கள் சீன அதிகாரத்துடன் செய்யப் படுகின்றதோ அவ்வாறே ஈரானுடனான வியாபாரத்திலும் அதனால் கிடைக்கும் இலாபத்திலுமே இவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். சில வேளை தங்கள் தங்கள் இடங்களில் தொலைக்காட்சிகளில் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கக் கூடும். இதோடு இவர்கள் எதிர்ப்பு முடிந்து விடும்.
றுஸ்டிக்கும் அவரது நூலை மொழி பெயர்ப்பவர்களுக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையின் அநியாயம் கால உதிர்வில் நாளாந்தக் கொலைகளில் எமது அக்கறையை வேறெங்கோ கரையொதுக்கி விடலாம். வருடாந்தம் உலகின் ஏழ்மைப் பரப்பான மூன்றாம் உலகின் குழந்தைகளை மில்லியன் கணக்கில் கொள்ளை கொள்ளும் பட்டினிச் சாவுகள் முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத பிரச்சினையாய் பட்டினி என்பது பாலகர் கொலையாக சட்டப்பிரகடனம் செய்தாற் போல் இருக்கின்றபோது, தனியொருவனின் உயிரைப்பற்றி ஏன் கவவைப்பட வேண்டும் என்ற வாதம் இந்த விடயத்தை மழுங்கடிக்கலாம். இது கடைசியுமில்லை. இலக்கிய வாதிகளுக்கிடையிலான இழுபறிகள் எங்களுக்கிடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தலாம் அதுவே சல்மான் றுஸ்டியைக் காட்டிக்கொடுக்கவும் காரணமாகவும் அமையலாம். தாம் விரும்பும் இலக்கியப்படைப்புக்கு எம்மை நிர்ப்பந்திக்கலாம்.
இந்த விடயத்தை நான் மிகவும் சுருக்கமாகவே இங்கே முன்வைக்கிறேன் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள். இலக்கிய வரலாறு என்பதே அதன் பிரத்தியேகமான தணிக்கை அத்தியாயத்தை எடுத்துக்கொண்டால், சின்ன அல்லது பெரிய காட்டிக்கொடுப்புக்கவின் சரித்திரமே. ஐரோப்பிய அறிவொளி இயக்கத்தின்[22] எழுச்சியினால் விவேகமாகியும், பாதிக்கப்பட்டும் போன மைந்தர்கள் நாம் அறிவோம் விட்டுக்கொடுப்புக்கான எங்கள் கூக்குரல் ஒருபோதும் கட்டுப்படுத்தும் எதிர்க்குரல் இல்லாமல் இருந்ததில்லை. என்ன செய்வதென்று அடிக்கடி தெரியாது இறுதியாகப் பகுத்தறிவின் அடிப்படையில் மன்னிப்பை வேண்டி நின்ற சல்மான் றுஸ்டிக்குத் எங்கள் முன்னோடி மிசேல் து மொன்ரன் (Michel de Montaigne) அவர்களின் எழுத்துக்களுக்கு என்ன நடந்ததென்று தெரிய வேண்டும். கத்தோலிக்க நிர்வாகம் அவன் எழுத்தைத் தடைசெய்தது; பஸ்காலும் (Pascal)[23] ஜன்செனிஸ்டுக்களும் (Jansenisten)[24] அது சரிதான் என்றார்கள். அறிவொளி இயக்க எழுச்சியின் மூலவர்களான வோல்டையரும்(Voltaire)[25] மற்றவர்களும் இவன் எழுத்தைப் போற்றிப் புகழ்ந்தார்கள். ஆனால் ரூஸோவின் (Rousseau)[26] இயற்கை நீதியினதும் வழக்கமான மரபுகளினதும் அடிப்படையில் அறிவின் ஆட்சி குறித்த கோட்பாட்டில் இவற்றின் கொடூரம் பிரான்சியப் புரட்சியின் ஆரம்பத்தின் பின்னால் அதி பயங்கரவாதமாக வெளிக்கிளம்பியது. இன்னும் உறுதியாகச் சொல்லப்போனால் இன்று வரை ஆட்சி புரியும் இந்த மரபுகளின் அடிப்படையில் மிசேல் து மொன்ரன்(Montaigne) அவர்களது ஆக்கங்களை நிராகரித்தார்.
புத்திஜீவித வலிப்புக் குணத்திற்கு வேண்டுமானால் விசேடமாக ஜெர்மனியில் பாடம் கற்ற இன்னுமோர் உதாரணத்தைக் கூறலாம்: ஹைன்றிஸ் ஹைனெ(Henrich Heine) அவர்களுக்கும் அகுஸ்ட் வொன் பிளாந்தன் (August von Platen) அவர்களுக்கும் இடையில் இலக்கியச் சண்டைகள் மூண்டன. இரண்டு உயர்ந்த படைப்பாளிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் ’தன்னினச் சேர்க்கையாளன்’ என்றோ ’யூதன்’ என்றோ வக்கரித்த வசைச்சேற்றை வாரியிறைத்தார்கள். இந்த வார்த்தையாடல்களில் ஹைன அவர்களின் கூர்மையான வார்த்தைகள் இறுதியில் அகுஸ்ட் வொன் பிளாந்தனைச் (August von Platen)[27] சாகடித்தன.
நாங்கள் எழுத்தாளர்கள் தவறுவிட மாட்டோம் என்று கூறவில்லை. உலக இலக்கியம் என்பது புனிதமானவர்களால் உருவாக்கப்பட்டதுமல்ல. நாங்கள் பல்லாண்டு நெடுகிலும் பயமுறுத்தப்பட்டிருந்தாலும் தடையாலும், தணிக்கையாலும் துன்பப்பட்டாலும், அனைத்துக்கும் முகங் கொடுத்து, நுட்பமான தேடலாலோ அல்லது தன்முனைப்பு ஆர்வத்தினாலோ வார்த்தை விளை நிலங்களைப் பெருக்கியுள்ளோம்.
எங்களை அர்ப்பணித்து நாங்கள் தியாகிகளாக வேண்டுமென்று அசரீரி எதுவும் கட்டளையிடவில்லை. இருப்பினும் சரித்திரத்தால் தாக்கப்பட்ட எழுத்தாளர்களைச் சமுகம் எப்பொழுதும் காலக் கரைவிற்குப் பின்னால் விருப்போடு தியாகிகளாகத் தன்னகத்தே சுவீகரித்துக் கொள்கிறது. ஒன்று மட்டும் உறுதி: நாங்கள் ஆர்வத்தோடு இழிவுபடுத்துகிறோம். இந்த வரிசையில் உட்கார்ந்திருக்கும் போது நக்கலாகக் கதைக்க விருப்பமிருக்கும். தாம் தவறே விடமாட்டோம் என்றெண்ணுபவர்களைப் பார்த்து நகைக்கிறோம். யாராவது ஒரு எழுத்தாளர் ஒரு மதபோதகர் மாதிரிப் பிதற்றினால் கூச்சத்தோடு சிரித்துக் கொள்கிறோம். எழுத்துப் படிவங்கள் ஒவ்வொன்றிலும் பொறுமையான எங்கள் விடா முயற்சி யாவரும் அறிந்ததே. அதேவேளை வழக்கமாகவே நாங்கள் உதிரிகள். இந்த உதிரிகளின் சக்தியும் பொறுமையும் இன்னும் கொஞ்சக் காலத்திற்கு தொடர்ச்சியாகச் சல்மான் றுஸ்டியைப் பாதுகாப்பதற்குப் பயன்படமாட்டாதா?
கடந்த சில வாரங்களாக எழுத்தாளர்கள் றுஸ்டிக்குக் கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவை ஆங்காங்கே அனேக தினசரிகளில் பிரசுரமாகின்றன. இது உலகம் முழுக்கப் பரவ வேண்டும்; உலகெங்கினுமுள்ள எழுத்தாளர்கள் இவ்வாறு எழுதுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். முதலில் எழுதப்பட்ட கடிதங்களில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் நர்டின கோர்டிமர்(Nardine Gordimer)[28] அவர்களின் கடிதத்தில் ”…நீங்கள் உங்கள் நூலில் வருகின்ற எந்தப் பாத்திரத்தினூடாகவும் இரத்தக் களரி ஏற்பட வேண்டுமென்று கேட்கவுமில்லை; விரும்பவுமில்லை. இவை விளங்கிக் கொள்ளப்படாமலேயே உங்கள் உயிரைப் பறிக்க நினைப்பது மனித குலத்திற்கு எதிராகச் செய்யப்பட்ட அநீதி. இந்த மண்ணின் எப்பாகத்திலும் அடக்கு முறையை மீறி சுதந்திரமான இலக்கியப் பிறப்பில் இது தன் நிழலைப் பதித்தே தீரும்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தான் நாமும் விரும்பி வேண்டி நிற்கிறோம். கலை இலக்கியத்தின் நெகிழ்ச்சியான மரபுக்குள் எப்பொழுதும் புதிய மரபுகளையே நாடுகின்ற சுதந்திரமான படைப்புக்கள் எழுதப்படவேண்டும். உண்மையில் மற்றவர்களால் எது முடியாதோ அதைத்தான் நாம் விரும்புகின்றோம். அப்படித்தானே சல்மன் !
கதை சொல்லுதல், பழைய கதைகளை என்றும் வேறுவகையிற் சொல்லுதல், இந்தக் கதைகள் வெளிப்படையாகச் சொல்வது மட்டுமல்ல எல்லோர் முன்னிலையிலும் சொல்லி வைக்கப்படுகிறன. சரியாகச் சொல்லியிருக்கிறேன் என்ற இறுமாப்பில் அல்ல, மாறாகத் தோல்வியின் / வீழ்ச்சியின் பரிகசிப்பில் அவை வாழ்கின்றன. கதை சொல்பவன் ஒருபோதும் வெற்றியாளனின் பக்கம் நிற்கமுடியாது. இழப்பிலேயே அவன் வாழ்கிறான். இழந்தவர்கள் தோல்வி, விசேடமாக எப்பொழுதும் தோற்பவர்கள் அவன்பால் அவற்றைச் சேர்த்து விடலாம். ஏதோவொரு பட்டஞ் சூட்டி, குரல்வளை நெரிப்புக்கு நியாயம் தேடுவது முல்லாக்களுக்குக் கைகூடியிருக்கலாம். இன்னும் துரிதமாக இந்தக் கதை சொல்பவனின் குரல்வளையை நெரித்தும் விடலாம். அப்போது மனிதர்களின் கதையைச் சொல்வதற்கு ஆள் இல்லாமற் போகுமென்பதல்ல. அதோடு மனிதர்களின் கதையே முடிந்து விடுகின்றது.

[4]Ovid: கி.மு 43 - கி.பி. 17: ரோம லத்தின் மொழிக் கவிஞர் அதிகாரத்தில் இருப்பவர்களால் நாடு கடத்தப்பட்டு கருங்கடலுக்கு அருகே உள்ள நாடொன்றில் (தற்போதைய கிரேக்க நாடு) இறுதிவரை வாழ்ந்தவர். உலக புகலிட இலக்கியத்தின் தந்தை.

[5]Montaigne: (1533-1592) கட்டுரை இலக்கியத்தை செழுமைப்படுத்திய பிரான்ஸ் தத்துவஞானி

[6]Heinrich Heine: 1797-1856; புரட்சிக் கவிஞர்; இவரது சமூகவிமர்சனமான Reisebilder (பயணக்குறிப்புக்கள்) என்ற அங்கத உருவகம் 1831 ல் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டது. 1835 இல் இவருடைய ஆக்கங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. பின்னர் பிரான்ஸ்சிலேயே தன்வாழ்க்கைத் தொடர்ந்தார். தன்னை ஜெர்மனியர்களுக்கு மத்தியில் 'யூதன்' எனவும், பிரெஞ்சுக்காரருக்கிடையில் 'ஜெர்மனியன்' எனவும், யூதர்கள் மத்தியில் கிரேக்கன் எனவும் புரட்சியாளன் – என்று சிறு குழுக்களுக்கு மத்தியிலும் பிற்போக்குவாதி' யாய் புரட்சிக்காரருக்கு மத்தியிலும் நினைத்துக் கொண்டார்.

[7]Zola: 1840-1902; பிரான்சிய எழுத்தாளர்;1893 ல் அன்றைய பிரான்ஸ் நாட்டின் தலைவருக்கு "J” accuse"(நான் குற்றம் சாட்டுகிறேன்) என்ற பகிரங்க கடிதம் பத்திரிகையில் எழுதியதன் பின் பல்வேறு பயமுறுத்தல்களினால் இங்கிலாந்துக்குத் தப்பியோடினார்.

[8]Osip Mandelstam:1891-1938; ஸ்ராலினின் இரகசியப் பொலிசாரால் பலதடவை கைது செய்யப்பட்டும், நாடு கடத்தப்பட்டும், சைபீரியச் சிறையில் உயிர்நீர்த்த கவிஞர் ; மேலும் அறிய ரஷ்ஷியப் புரட்சி – இலக்கிய சாட்சியம் (ஆசிரியர்:S.V.ராஜதுரை) என்ற நுாலைப் படிக்கவும்.

[9] Franz Kafka:1883-1924; செக்கோசிலவாக்கிய - பராக்கைச் சேர்ந்த உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்: அங்கே ஜெர்மன் மொழிபேசும் யூதச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தமையால் அங்குவாழும் ஜெர்மனியர்களாலேயே புறக்கணிக்கப் பட்டனர்.

[10]Erich Muahsam:1878-1934; கவிஞர். பத்திரிகையாளன், ஜெர்மன் ராஜ்ஜிய சபைக் கட்டடம் நாசிகளாலேயே தீ மூட்டப்பட்டு பழியை அரசியல் எதிர்ப்பாளர் மீது போட்டு அவர்களைக் கைது செய்து கொன்றபோது, இவரும் கைது செய்யப்பட்டுக் கொலைமுகாமில் கொலையுண்டார்.

[11]Carl von Ossietzky:1889-1938;தீவிர பத்திரிகையாளன் ; 1935 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.

[12]Walter Benjamin:1892-1940 (புகலிடத்தில் தற்கொலை); இலக்கிய விமர்சகர்; பிராங்போட் சிந்தனைப்பள்ளியின் நவீன சிந்தனையாளர்களில் ஒருவர்.

[13]Thomas Mann:1875-1955;1933 இல் ஜெர்மனை விட்டு பிரான்ஸ், கவிற்சலாந்து இறுதியில் US அமெரிக்காவில் குடியேறினார்.புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் சர்வதேசப் பேச்சாளர்;1929 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு; ஜேர்மன் இலக்கியத்திற்கு அசாதாரண , புதிய பரிமாண புகலிட நாவல்கள் எழுதினார்.

[14]Heinrich Mann:1871-1950;Thomas Mann இன் தமையனார். பிரஸ்ஸிய கலைக்கல்லூரியின் முதல்வர்:1933 இல் ஜெர்மன் குடியுரிமை பறிக்கப்பட்ட பின்னர் பிரான்ஸ், US அமெரிக்காவில். நாசிகளுக்கு எதிரான தீவிர எதிர்ப்புச் செயற்பாடுகள், சிறந்த நாவலாசிரியர்.

[15] Alfred Doeblin:1878-1957;1933 வரை பெர்லினில் மூளை நரம்பு வைத்தியர். 1933 இவருடைய நுால்கள் தடை செய்யப்பட்டன . சிறந்த நாவலாசிரியர். பிரான்ஸ், US அமெரிக்காவில் புகலிடம்.

[16] Robert Musil:1880-1942; ஆஸ்திரிய நாவலாசிரியர்; சுவிற்சலாந்தில் அரசியற் தஞ்சம்.

[17]Bertolt Brecht : 1898 - 1956 ,உலகப்புகழ் பெற்ற நாடகாசிரியர், கவிஞர்,புகலிடம் தேடி உலகின் பல்வேறு நாடுகள்.

[18]Anna Seghers:1900-1983; முற்போக்கு எழுத்தாளர்: 1933 இல் மெக்சிக்கோவில் அரசியற் தஞ்சம் புலப்பெயர்வு வாழ்வில் பரவலான பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகள்

[19] Friedrich Schlegel:1772-1829:ஜெர்மன் இலக்கிய விமர்சகர் கட்டற்ற கற்பனை இலக்கிய முன்னோடி.

[20]Clemens von Brentano:1778-1842; கவிஞர், நாவல் இலக்கிய முன்னோடி.

[21] Metternich :1809 தொடக்கம் 1848 வரை ஆஸ்திரிய தேசாதிபதி.

[22]அறிவொளி இயக்கம்:17ம் 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் முகிழ்த்த ஆத்மீக கலாசார இயக்கம்

[23]Pascal:1623-1662; கணிதமேதை: மத தத்துவவியலாளன்.

[24] Jansenisten: Cornelius Jansen(1535- 1638) என்ற மதபோதகரால் ஆரம்பிக்கப் பட்ட கத்தோலிக்கச் சீர்திருத்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

[25]Voltaire:1694-1778: பிரெஞ்சுத் தத்துவவியலாளன் ; யுக எழுத்தாளர்

[26]Rousseau : 1712-1778: பிரெஞ்சுத் தத்துவவியலாளன், அறிவொளி இயக்கவாதி

[27]August von Platen:1796-1835:ஜெர்மன்மொழிக் கவிஞர். நாடகாசிரியர்

[28]Nardine Gordimer:1923-2014:ஐரோப்பிய அடியைச் சேர்ந்த தென்னாபிரிக்க சமூக ஆய்வு நாவலாசிரியை. 2001 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.

கருத்துகள் இல்லை: