திங்கள், டிசம்பர் 21, 2020

நாறுங் குறுங்கதை: மலத்தீவு

எழுதியவர்: செங்கள்ளுச் சித்தன்சமயாரி, மகியாரி, கோதாரி, பசியாரி என்று நான்கு சகோதர்கள் பல வருடங்களுக்கு முன் வெற்றிகரமாக நடத்திய வங்கிக் கொள்ளையினால் பெரும் பணக்கார்கள் ஆனார்கள். கொள்ளை பற்றிய இரசியம் வெளியே எக்காரணம் கொண்டும் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாகச் செயற்பட்டார்கள். இதனால் மற்றய கொள்ளைக்கோஸ்டிகள் இவர்கள் மீது பொறாமை கொண்டாராயினும் தம் இரகசியங்களைக் காப்பதில் ஏற்படும் சறுக்கலிகளில் பிரிந்துபோய்ச் சின்னாபின்னமாகினர்.
பணத்தினால் எல்லாவற்றையும் அடைந்துவிடமுடியும் என்று நம்பியதாலும், மரபுரீதியான பில்லி சூனியங்கள் மற்றும் மந்திரங்களை நம்புவதாக வெளியே காட்டிக்கொண்டு, மக்களை ஏமாற்றுவது எப்படி என்பதை உலகில் புகழ்பெற்ற கொள்ளைக் கோஸ்டிகளுக்கு நிபுணத்துவ ஆலோசனைதரும் கல்விமான்களிடம் இருந்து வழிகாட்டல்களைப் பெற்றுக்கொண்டதாலும் இவர்களை அந்த நாட்டு மக்கள் அவதாரங்களாகப் போற்றத் தொடங்கினர்.
இவர்கள்தான் எங்களை வழிநடத்த வேண்டும் என்று மக்கள் பேசிக்கொள்ளுமாறு கசியவிடப்பட்ட செய்திகள் ஒருமித்த மக்கள் குரலாக ஆக்கப்பட்டது. இந்த நான்கு சகோதர்கள் மீதும் ஆரம்பத்தில் இருந்த பயப்பீதியும், அவப் பெயர்களும் மனித மனங்களில் இருந்து முற்றாக நிக்கப் பட்டுவிட்டன. கொலைகள், கொள்ளைகள் இன்னபிற அட்டூழியங்ளில் எஞ்சிய தடயங்களாகக் கிடந்தவை யாவும் பொட்டளவில் தன்னும் இல்லாதவாறு அழித்துக் துடைக்கப்பட்டுவிட்டன. குடிமக்கள் மூளையில் இருந்தே துடைத்தெறியத் தெரிந்தவர்களுக்கு, அவையெல்லாம், ஒரு காரியமாகவே இருக்கவில்லை. சோதர்கள் நிலங்களைப் பங்கிட்டு முடிசூடி மன்னரானார்கள். பட்டத்து ராணிகள், இளவரசர்கள் என்று, ராணிகளின் உறவினர்கள், உறவினர்களைல் உறவினர்கள் என்று பல்கிப்பெருகி இவர்களே நாட்டின் குடிமக்கள் என்றாகிவிட்டது. இப்படி இருந்துவருங்காலத்தில் இயற்கையின் சீற்றம் இந்த நாட்டில் கவிந்தது. கொலாரா என்ற ஒரு தொற்றுநோய் நாட்டில் அசுர வேகத்தில் பரவியது. மன்னர்கள் மந்திரவாதிகளையும் பில்லி சூனியஞ் செய்பவர்களையும் அழைத்துப் பலவகைப் பரிகாரச் சாத்தியங்களைத் தேடினார்கள். யாகங்கள் வேள்விகள் நடத்தினார்கள். பலவகை மந்திரித்த பாணிகளைத் தயாரித்து மக்களை உடலில் பூசச் சொன்னார்கள், உட்கொள்ளவுஞ் சொன்னார்கள்.

கீழ்ப்படியவே பழக்கப்பட்ட மக்கள், அரசாங்கம் சொல்வதை அப்படியே பின்பற்றினார்கள். தொற்று வீரியமற்ற தாக்கபட்டுவிட்டது என்ற பிரச்சாரத்தால் மக்கள் பயமின்றி உலவினார்கள். ஆனால் உண்மையில் மக்களின் இறப்பு வீதம் கூடிக்கொண்டே சென்றதை மக்கள் புரிய முடியாதிருந்தார்கள். மன்னர்களுக்கு மட்டும் புரிந்தது. மந்திராலோசனை நடத்தி புதிய யுக்தி ஒன்று நடைமுறைக்கு வந்தது. பிளாட்டோ, மாக்கியவல்லி, சாணக்கியன், கொய்ப்பெல்ஸ், ஹென்றி கீசிஞ்சர் போன்றவர்களை கரைத்துக் குடித்த கல்விமான்களின் ஆலோசனைப்படி முதலில் மனிதர்களைப் பயப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ”கிறீஸ் பூதம்” என்றொரு பீதியினை உலவவிட்டுப் பார்த்தார்கள். மனிதர்கள் பயந்தார்களா அல்லது பயந்தது போல் நடித்தார்களா என்று அறியமுடியவில்லை. பக்கத்து நாட்டில் இவர்களுக்கு எதிராகத் தோன்றிய கிளர்ச்சியை, முழுமனிதர்களையும் பூண்டோடு அழித்து வெற்றி கண்டவர்கள் நாங்கள் என்ற இவர்களது பெருமிதமும் கர்வமும் , அவதாரங்கள் என்றால் அப்படித் தான் இருக்கவேண்டும் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். காலை எழுந்தவுடன், மகியாரி என்ற மன்னனது நாமத்தை நினைத்தாலே அந்த நாள் சிறக்கும் என்று அஸ்வகோஷ் என்ற பூசாரி ஒருமுறைகூறிவிட, அப்படியல்ல அந்த வருடமே சிறக்கும் என்று அவர் கூறியிருக்கவேண்டும். எனவே அவரைத் தூக்கிலிட வேண்டும் என்று இன்னொரு பூசாரி கிளம்பினார். அவருக்கு ஞானநாதாரி என்று பெயர். இறப்பு மட்டும் நிற்கவில்லை. இறப்பறியாத வீட்டில் இருந்து எள் எடுத்துவா என்ற போதனைகள் எல்லாம் மக்களிஅட்த்ஹில் எடுபடவில்லை.

இறந்த பிணங்களைச் சிலர் எரித்தார்கள், சிலர் புதைத்தார்கள். உள்நாட்டுக் கலவரமொன்றில் சாதாரண மனிதர்களைக் கொன்று பீதிகொள்ள வைத்தால் கலவரம் தானகவே அடங்கிவிடும் என்று கொல்லப்பட்ட மனிதர்களைப் புதைத்தே பழக்கப்பட்டனர் இந்த மன்னர்களது ஒற்றர்களும் படைவீர்களும். காலப்போக்கில் புதைக்கப்பட்ட சடலங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு பிணங்களில் எஞ்சியிருந்த கந்தல்களில் தெரிந்த அடையாளங்களை வைத்து பாவிகளும், அப்பாவிகளும் கொல்லப்பட்டதாக வேற்று நாடுகள் செய்த பிரச்சாரம் போற்றுநாடுகளால் முறியடிக்கப்பட்டபோதும், மன்னர்களின் மனநிலையில் அது பாதிப்பினை உண்டாக்கி மகியாரி, கோதாரி போன்ற மன்னர்கள் திடீரென உடல்மெலிவுற்றனர். இதனால் மீண்டும் மந்திரோலாசனை கூட்டப்பட்டு மன்னர்கள் நால்வரும் மற்றும் பட்டத்து ராணிகள், இளவரசர்கள், உறவினர்கள், உறவினர்களின் உறவினர்கள் யாவரும் ஓர் சபதம் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

தொடக்கத்தில் இருந்தே மன்னர்கள் எதிலும் நம்பிக்கையற்றவர்கள் என்பது எனது கதையினை இதுவரை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் எல்லோர் முன்னினையிலும் சபதம் எடுத்தாக வேண்டும். ”இறந்த பிணங்களை இனிஒருபோதும் எங்கள் நாட்டில் புதைக்கவிடுவதில்லை. எரித்துச் சாம்பராக்கி விடுவேன் கௌதமனே”. என்று எடுத்தே விட்டர்கள். மனிதர்கள் ஆடிப்பார்த்தார்கள்;ஓடிப்பார்த்தார்கள்; கூடிப் பார்தார்கள்; கூக்குரலிட்டுப் பார்த்தார்கள்; கொடும்பாவி எரித்துப் பார்தார்கள். அவர்கள் சபதம் அப்படியேயிருந்தது. பசியாரி என்ற மன்னன் மட்டும் இடைதரகன் போல அங்குமிங்கும் ஓடினானே தவிர மாற்றங்கள் வந்துவிடவில்லை.

இப்போது புதிய பிரச்சினை ஒன்று உருவானது. மரணித்துக் கொண்டிருந்த தொற்று நோயாளிகள் பயப்பீதியிலோ என்னவோ அதிகதிகமாக மலங் கழித்த பின்னரே இறந்து போனார்கள். மலத்தில் இருந்தும் தான் இந்த நோய் பரவுகின்றது என்று நாட்டின் விஞ்ஞானிகள் குழுவொன்று அறிக்கை சமர்ப்பித்தது. இப்போது இந்த மன்னர்கள் ஆண்ட நாடுகளில் நோயாளிகளின் மலத்தினைச் சேமிக்கத் தொடங்கினார்கள். நாடுகள் முழுக்க மலப் பீப்பாக்களால் நிறைந்தது. வைத்தியசாலைகள், வீதியிலில் சென்று கொண்டிருக்கும் பார ஊர்திகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் எல்லாம் மலப் பீப்பாக்களால் நிறந்து கிடந்தன. இந்தச் சமாச்சாரத்தால் உள்நாட்டுக் கலவரங்கள்,கொந்தளிப்புக்கள் நடக்கக்கூடும் என்று அரசியல் அவதானிகள் எதிர்வு கூறினார்கள். என்ன செய்வதென்று தெரியாது எல்லா நாடுகளும் திகைத்து நின்றன. வேற்று நாடுகள் தம் வியாபரங்கெட்டதுவே என்று வாழவிருந்தன. போற்று நாடுகள் மலம் என்பது உட்கொள்ளும் உணவின் இன்னொரு வடிவமே தவிர வேறில்லை என்று கைகளை விரித்தன. ஆயினும் பூமி புத்திரர்களும் போற்று புத்திரர்களுக்கும் மட்டுமே எமது நாடுகள் என்று எல்லா இடங்களிலும் எழுதியும் பார்த்தார்கள். மாற்றமில்லை. மீண்டும் மந்திராலோசனை. மலத்தீவு என்று ஒரு தீவு இருப்பதாகவும். அதன் பெயரிலேயே மலம் எனும் கூறு இருப்பதால் அந்த நாட்டுடன் பேசிப் பார்க்கலாம் என்று கோதாரி என்ற மன்னன் முன்மொழிந்தான். எதுவும் நடக்கவில்லை. மலம் நாளொரு வண்ணமும் பொழுதாயிரம் பீப்பாப்களுமாகச் சேர்ந்து கொண்டே இருந்தது. மலத்தினை நிலத்தில் புதைத்தால் தொற்றுக் கிருமிகள் நிலக்கீழ் நீரில் சேர்ந்துவிடும், அதனால் எமது நாட்டில் கௌதமக் கொடி பறக்கவிடமுடியாததாகலாம் என்று மன்னர்கள் கவலையில் தோய்ந்தனர். தேங்கிய மலப் பீப்பாக்களை எரியூட்டிப் பார்த்தார்கள் ஒன்றும் நடக்கவில்லை. இப்பொழுது பீப்பாக்கள் இல்லை. பீப்பாக்கள் இறக்குமதி நின்றுபோனது. எண்ணைகள்கூட இப்பொழுதெலாம் சுரக்குடுவைகளில் தான் விற்கப்படுகின்றன. அதனாற் தென்னோலைக் கூடைகளைப் பின்னி அதற்குள் மலத்தைப் போட்டுக் கடலிலே கொண்டுபோய்க் கொட்டினார்கள்.

அதிசயம் என்னவென்றால், மீன் சாப்பிட்டவர்கள், கரையோரங்களில் வாழ்பவர்கள். அயல் நாட்டு மீனவர்கள் எல்லாம் நோய்த் தொற்று இன்றி வாழ்கின்றனர் என்று, இரவு எட்டு மணிக்குப் பின்னர் ஓரு வானொலி அறிவித்தது.

கருத்துகள் இல்லை: