திங்கள், நவம்பர் 23, 2020

நெஞ்சிலே பட்ட வடு

ஓர் அன்றில் பறவையினுடைய நெஞ்சில் அம்பு தைத்ததைப் பார்த்து, துடிதுடித்த ஒரு வேடன் (வால்மீகி) மகாகவியானான். சமுதாய அமைப்பின் மூலமாக கேடுகெட்ட ஒரு மனிதன் என் இதயத்தில் பாய்ச்சிய காயத்தால் நான் ஒரு சிறுகதை எழுத்தாளனாக மலர்ந்தேன்.
கேள்வி: நீங்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் குடியேறிய தமிழரா? உங்களுடைய பிறப்பு வளர்ப்புப் பற்றிச் சொல்ல முடியுமா?

பதில் : பாரம்பரியம் மிக்க இலங்கைத் தமிழ் வம்சா வழியில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன் நான். பிறப்பால் ஒரு பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட சவரத்தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவன். எட்டாவது வகுப்புவரை படித்தேன், அந்தக் காலத்தில் தான் என்னை வெகுவாகப் பாதித்த அந்த நிகழ்ச்சி நடந்தது.

கேள்வி: அந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்ல முடியுமா?

பதில் : என்னுடைய இலக்கியத்துறைப் பிரவேசத்துக்கே அந்த நிகழ்ச்சிதான் காரணம். நான் அப்போது தொடக்கப்பள்ளி மாணவன். அந்தப் பிஞ்சுப் பருவத்திலேயே என் இதயத்தில் விழுந்த அடி.. அதன் வடு........ ஆசிரியர் கரும்பலகையில் ஒரு கணக்கொன்றைப் போட்டுக் காண்பித்தார். அந்தக் கணக்கை அவர் போட்ட முறை தவறு என்பது எனக்குத் தெரிந்தது. நான் என்னுடைய நோட்டில் சரியான முறையில் கணக்கைப் போட்டு விட்டு எழுந்து நின்று ஆசிரியரை நோக்கி, ' நீங்கள் போட்ட கணக்குத் தவறு'' என்றேன் . ஆசிரியர் மிகுந்த கோபத்தோடு, 'சரியான கணக்கை நீதான் போடு!', என்றார். நானும் என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் இருந்த சரியான கணக்கை கரும்பலகையில் போட்டேன். . ஆசிரியர் போட்ட கணக்குத் தவறு என்று புரிந்தவுடன் மாணவர்கள் வகுப்பறையே அதிரும்படி சிரித்து விட்டார்கள். அது உயர்ந்த ஜாதி மாணவர்கள் பெரும் பாலாகப் படிக்கின்ற பள்ளி. ஆத்திரம் கொண்ட ஆசிரியர் என்கையிலிருந்து நோட்டுப் புத்தகத்தைப் பிடுங்கி, இரண்டாகக் கிழித்து என் முகத்தில் எறிந்து, - நீங்கள் எல்லாம் ஏண்டா படிக்கவந்தீர்கள், சிரைக்கப் போவதுதானே!' என்று என் பிறப்பை, என்னை வளர்க்க என் தந்தை செய்த தொழிலை சுட்டிக் காட்டிய பொழுது என் இதயத்தில் விழுந்த காயந்தான், கனன்று கனிந்து கனன்று கனிந்து காலப்போக்கில் இலக்கியமாக என் எழுத்தில் எரிகிறது. சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் தான் இன்று உலகமெங்கும் முற்போக்கு எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, பத்திரியாளர்களாக, ஆத்ம ஆவேசம் கொண்டு அனற் பிழம்பாய் எரிகிறார்கள். ஒரு நாள்—அந்த ஆத்ம தீக்கனலில்- அறிவு ஜுவாலையில், இந்த ஒடுக்கு முறைகள் ஒழிக்கப்படுவது உறுதி.

கேள்வி : தங்களை முதன் முதலில் கவர்ந்த எழுத்தாளர் யார்?

பதில் : என்னை ஆளுமை செய்தவர்- வரிக்கு வரி படிக்க வைத்தவர்- நாவலாசிரியர் தி. ஜானகிராமன், நாவல்-' 'மோகமுள்''. நான் படித்த மற்றொரு சிறந்த நாவல் கி. ராஜநாராயணனின் "கோபல்ல கிராமம்''

கேள்வி: உங்கள் மீது செல்வாக்குச் செலுத்திய சிறுகதை எழுத்தாளரைப் பற்றிச் சொல்லுங்களேன்?

பதில் : ஜெயகாந்தன். அவருடைய ஒவ்வொரு சிறுகதையும் என்னைக் கவர்ந்ததுதான். அவரது எழுத்துலகப் பிரவேசத்தின் போதே அவரை நான் அறிவேன். எழுத்துலகில் அவரது சிறுகதைகள் அக்கினிப் பிரவேசம் செய்தவை. புதுமைப் பித்தனுக்குப் பிறகு ஜெயகாந்தனின் சிறுகதைகள் தான் வாசகர்களை ஆளுமைப் படுத்தியவை என நான் நினைக்கிறேன்.


கேள்வி: தமிழகத்து எழுத்தாளர்களைச் சந்தித்தீர்களா?

பதில் : நிறைய ... நிறைய... ஏராளமானவர்களைச் சந்தித்தேன். குறிப்பாக இளம் எழுத்தாளர்களின் கதைகளை நான் இலங்கையிலேயே எழுத்து எண்ணிப் படித்திருக்கிறேன். அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் பெற்றேன். ஒரு புதிய தமிழகம், புதிய பாதையில் நடைபோடத் துவங்கியுள்ளது. அவர்களது எழுத்தைப் படித்த பிறகு- நேரில் அவர்களைச் சந்தித்த பிறகு- நான் உணர்ந்து கொண்டேன். இந்த இளம் உள்ளங்களின் உணர்ச்சிச் சிறப்பால் நான் மெய் சிலிர்த்துப் போய்விட்டேன்.

கேள்வி: தமிழக சினிமா உலகத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : தமிழக சினிமா உலகமும் புதிய பாதையில் அடிஎடுத்து வைத்திருப்பதாகவும், பல இளைஞர்கள் அந்தத் துறையின் எல்லாப் பகுதிகளிலும் பிரவேசித்திருப்பதாகவும், சிறுகதைகள் படமாக்கப் படுவதாகவும் என் நண்பர்கள் மூலம் அறிந்தேன். 'கிழக்கே போகும் ரயில்'' என்ற படம் பார்த்த பிறகு என் நண்பர்கள் எனக்கு உண்மையான தகவல்களே தந்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன்.

கேள்வி: பதின்நான்கு ஆண்டுகளாக 'மல்லிகை' மாத இதழை நடத்தி வருவதாக அறிகிறேன். ஒரு முற்போக்கு இதழை நடத்துவதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றி தோல்விகளைப் பற்றிச் சுருக்கமாகக் கூறமுடியுமா?


பதில்: ஒரு மாத இதழ் அல்லது வார இதழ் நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்குத் தெரியும். அதிலும் ஒரு நோக்கத்தோடு அந்த இதழை நடத்துவது என்பது அதைவிடச் சிரமம். கடந்த பதின்நான்கு ஆண்டுகளில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று, பத்திரிகை வெளியீட்டின் மூலப் பொருளான காகிதம், அச்சுக்கள், பிளாக்குகள் போன்றவைகளின் விலை உயர்வின் தாக்குதல் ஒருபக்கம், மற்றொரு புறத்தில் இந்தியாவில் ஒரு பத்திரிகை சம்பந்தப்பட்ட பொருளை நாங்கள் மூன்று மடங்கு அதிகம் கொடுத்து வாங்கவேண்டி இருப்பது ஒரு அவல நிலையாகும்.

கேள்வி: இந்தியப் பத்திரிகைகளால் உங்களுக்கு என்ன சிரமங்கள் ஏற்படுகின்றன?

பதில் : தமிழகத்தில் இருந்து வரும் பத்திரிகை விலைக்குத் தான் நாங்கள் எங்களது பத்திரிகைகளின் விலையைப் போட முடியும். நாங்கள் எழுத்துச் சர்ச்சையை விற்கவேண்டி இருப்பதால், தரமான இலக்கியங்கள் எங்கள் நாட்டுக்கு வருவது ''மல்லிகை' ' போன்ற இதழ்களுக்கு நல்லதுதான். ஆனால் உங்கள் நாட்டிலிருந்து தரமற்ற குப்பைகளே மிகவேகமாக எங்கள் நாட்டின் மீது படையெடுக்கின்றன. உள்ளடக்க முதிர்ச்சிக்குப் பதிலாக வெளி வேடக் கவர்ச்சிகள் தான் மிகப் பயங்கரமாக எங்களது நாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதற்கு எதிராக நாங்கள் பலம் பொருந்திய இயக்கங்களை நடத்துகிறோம். இது எங்கள் நாட்டிற்குச் செய்யும் தொண்டு மாத்திரமல்ல, முழுத்தமிழ் இலக்கியமும் ஆரோக்கியமான திசைவழியில் செல்ல வேண்டுமென்ற நல்லெண்ணமும் பின்னணியுமாகும்.

கேள்வி: உங்களுக்கு அரசியல் ஈடுபாடு உண்டா? உங்களுடைய அரசியல் உறவு நிலை என்ன?

பதில்: எனக்கு அரசியல் ஈடுபாடு உண்டு. உழைப்பாளர் மத்தியில் இருந்துதான் பல முற்போக்கு எழுத்தாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். அதேநேரத்தில் ஒரு படைப்பாளியைப் பார்த்து கொடி தூக்கி, ஊர்வலம் வா என்று கேட்பதும் அர்த்தமற்றது. அரசியல் ஈடுபாடு உடைய படைப்பாளி, தான் எந்தப் பக்கம் வலுவாகக் காலூன்றி நிற்கின்றான் என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தாது விட்டால், நாளடைவில் மக்கள் அவனை மறந்து விடுவார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த உலகத்தின் அடித்தளமாகத் திகழும் இயக்கம் எதுவோ அதையேதான் நான் இதயநாதமாகக் கொண்டுள்ளேன்.

கேள்வி: நம் இருநாடுகளிடையேயும் கலை-இலக்கியத்துறையில் நட்புறவும் ஒத்துழைப்பும் வளர நாம் என்ன செய்ய வேண்டும்?

பதில்: பரஸ்பரம் கலைஞர்கள் இருநாடுகளுக்கும் சென்று வரவேண்டும். கலை இலக்கியம் ஒருவழிப்பாதையாக இருக்கக்கூடாது. ஆரோக்கியமான இலக்கிய சிந்தனைக் கருத்துக்கள் படிக்கப் படுவதோடு மாத்திரம் நிற்காது, பரஸ்பரம் விவாதம் நடத்துவதும், கலந்துரையாடுவதும் அவசியமாகும்.இதன் மூலந்தான் இலக்கியத்தைச் செழுமைப் படுத்த முடியும். இப்படிப் புரிந்து கொள்ளும் சரியான நடைமுறைதான் இரு நாடுகளுக்கும் இன்று அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.

கேள்வி : உங்களது 'மல்லிகை' இதழைப் பற்றிச் சொல்லுங்களேன்?

பதில் : இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், விமர்சகர்கள் கடந்த காலங்களில் மல்லிகையில் எழுதி வந்திருக்கிறார்கள். பல மாத இதழ்கள் இலங்கையில் வெளிவருகின்றன. சரியான தத்துவப் பார்வையும் தெளிவான நோக்கும் கொண்ட மல்லிகையின் பாதையிலே, அதே தெளிவும் நோக்கும் கொண்ட பல முற்போக்கு எழுத்தாளர்கள் அடியொட்டி வருவதனால், மல்லிகை ஒரு தேசிய தாக்கத்தைக் கடந்த பதினான்கு ஆண்டுகளில் இலங்கையில் ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி: உங்கள் நாட்டைப் பற்றி எங்களது தமிழகப் பத்திரிகைகள் நிறைய எழுதுகின்றனவே?

பதில் : இலங்கையைப் பற்றி தமிழ்நாட்டில் இருந்து வரும் பல தகவல்கள் பொய்யானவை; மோசடியானவை; திட்ட மிட்டு எழுதப்படுபவை. இதயமற்றவர் களைத் தவிர, நல்லெண்ணம் படைத்த நண்பர்கள் இலங்கையைப் பற்றிச் சொல்கிற கருத்துக்களை இங்குநான் குறிப்பிட வில்லை. வியாபாரத்துக்கென்று இலங்கையைத் தங்கள் நிரந்தரச் சந்தையாக- மேய்ச்சல் நிலமாக வைத்திருக்கும் ஒரு சிறு கூட்ட வர்த்தகச் சூதாடிகள் தான், எங்களது நாட்டைப் பற்றித் தப்புத் தவறான கருத்துக்களை எழுதுகிறார்கள், இவர்களது எழுத்தைப் படித்துவிட்டு நாங்கள் சிரித்துக் கொள்வதை அந்த ‘விஷமப் பிரசாரகர்கள்' ' அறிய மாட்டா விட்டாலும் கூட, எங்களது நாட்டைப் பற்றிச் சரியான கருத்துக்கள் தமிழ் நாட்டில் பரவ முடியாமல் போனது குறித்து நாங்கள் வெட்கப் படுகிறோம்; வேதனைப் படுகிறோம், தமிழுக்கு தமிழா எதிரி! சேச்சே...

கேள்வி: எங்கள் நாட்டிலிருந்து உங்கள் நாட்டிற்கு பத்திரிகை போகும்போது, அங்கிருந்து இங்குவர என்ன தடை?

பதில் : இந்தியாவில் இருந்து கணிசமான மாத, வார, இதழ்கள் மற்றும் சினிமாக்கள் எங்கள் நாட்டிற்கு வருகின்றன. இலங்கையின் தரமான இதழ்களோ, சினிமாக்களோ இந்தியாவிற்கு வரமுடியாததற்கு இந்திய அரசு தடையாக நிற்பதே காரணம். நான் அறிந்தவரையில் சொல்வதானால் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் தமிழும் ஒன்று. இருந்தும் தமிழ்மொழியில், வேறு நாட்டில் இருந்து வருவதை உங்கள் அரசு தடை செய்திருக்கிறது. இதனால் தமிழ்மொழி பேசாதவன் எவனும் பாதிக்கப் படுவதில்லை. பக்கத்து நாட்டில் வாழும் எங்கள் மொழியை அறிந்த நீங்கள் தான் பாதிக்கப்படுகிறீர்கள். இலக்கிய வளர்ச்சிக்கு ஒருவழிப் பாதை கூடாது. இந்தப் போக்கைத் தவிர்க்க தமிழக முற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள் முன்கை எடுத்துப் போராட வேண்டும். உங்களுடைய எழுத்தை எங்களால் உணர முடிகிற போது, ஈழத்து இலக்கியத்தைப் பற்றி உங்களால் எதுவும் அறிய முடிவதில்லை. எங்களைப் பற்றிப் பூரணமாக நீங்கள் அறிய முடியாதது எங்களுக் கொன்றும் இழப்பில்லை. வருங்கால இளம் சந்ததியினர் ஈழத்து இலக்கியங்களைப் படிக்காமல், விரிந்த இலக்கிய அறிவைப் பெறமுடியாது, ஆகவே இந்தத் தடை தமிழ் வளர்ச்சிக்கும் - உங்களுக்கும் தான் விதிக்கப்படுகின்ற தடையே அல்லாது வேறு என்ன? எங்களைப் புரிந்துகொள்ள நீங்கள் தான் முயலவேண்டும்.

கேள்வி: எழுத்தாளர்களுக் கென்று உங்கள் நாட்டில் சங்கம் உண்டா?

பதில்: ஓ... இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் , நீண்ட நெடுங்காலமாக செயற்கரிய பணியைச் செய்து வருகிறதே!

கேள்வி: புத்தக வெளியீட்டு நிறுவனம், பதிப்பகங்கள் எப்படி?

பதில்: ஒரு சில நிறுவனங்கள் உண்டு. முற்போக்கு பதிப்பகங்களும் உண்டு. எழுத்தாளர் பதிப்பகமும் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் பல எழுத்தாளர்கள் தங்களது பிரதிகளை புத்தகவடிவில் கொண்டுவர விலைவாசி ஏற்றங்கள் தடை செய்கின்றன. நான் முன் கேள்விக்குச் சொன்ன பதிலின்படி அடக்க விலையின் அதீத தாக்கம் எங்களுடையப் படைப்புகள் புத்தகவடிவு பெறுவதைத் தடை செய்கிறது.

கேள்வி: புதுக்கவிதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : யார்தான், என்னதான் வழிமறித்தாலும் - அலட்சியம் செய்தாலும் புதுக்கவிதைகள் ஓர் இலக்கிய வெளிப்பாட்டு ஊடகம் என நான் நினைக்கிறேன் .

கேள்வி: உழைக்கும் மக்களின் போர்ப்படையை ஒன்று திரட்ட முயலும் 'மக்கள் செய்திக்கு உழைப்பாளி வர்க்கத்தின் தலை சிறந்த கலை-இலக்கியப் படைப்பாளியாகிய தாங்கள் அளிக்கும் செய்தி என்ன?

பதில் : எந்த இலட்சியத்துக்காக மக்கள் செய்தி போன்ற பத்திரிகைகள் உழைக்கின்றவோ அதுவே மிகப் பெரிய செய்தியாகும். இங்கே மக்கள் செய்தி செய்யும் ஆக்கபூர்வமான வேலைகளைத்தான், நாங்களும் அங்கே செய்ய முயலுகிறோம்.
மக்கள் செய்தி, 26-08-1978.

கருத்துகள் இல்லை: