
எப்பொழுதோ மனதில் வாங்கியது. இன்றும் பிடிக்கிறது. ஏன் என்று கேட்காதீர்கள். நாங்கள் ஐந்தாவது வகுப்பில் படிக்கின்ற போது“ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று“ என்ற இந்தப் பாடல்களை மனனம் செய்யப் பணிக்கப்பட்டோம். அப்போது „நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்…“ என்ற சினிமாப்பாடல் புகழின் உச்சத்தில் இருந்த காலை. அதனால்தான் அந்த மெட்டிலேயே இந்தப் பாடல்கள் எங்கள் நினைவில் புகுந்துகொண்டன. இசைஞானி இளையராஜாவைக் காணும்போதெல்லாம் எனக்கு விபுலாநந்தரின் தோற்றம் நினைவில் வருகின்றது.
ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
பாட்டாளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டாளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
*********************************************************
அஞ்சினர்க்குச் சதமரணம், அஞ்சாத நெஞ்சத்து
ஆடவர்க்கு ஒரு மரணம் என்றும் அவனிமிசைப் பிறந்தோர்
துஞ்சுவர் என்றறிந்தும் சாதலுக்கு அஞ்சும்
துன்மதி மூடரைக் கண்டால் புன்னகை செய்பவன் நான்.
இன்னலும் யானும் (ஓர் குடிப்பிறந்தோம்?)பிறந்தொரு தினத்தில் அறிவாய்
இளம் சிங்கக் குருளைகள் நாம்; யான் மூத்தோன் எனது
பின் வருவது இன்னல் எனப் பகை மன்னர் அறிவார்
பேதுறல் பெண்ணணங்கே யான் போய் வருதல் வேண்டும்.
தாழ்ந்து மென்மொழியுரைத்திடேல் தரணியிற் பணிந்து
வீழ்ந்து நைபவர் பொய்யுரைக்கிரங்கிய வீணர்.
என்னிழல் வாழ்வோர் என்னியல்பறியார்
உண்பார், துயில்வார் ஒண்ணிதி குவிப்பார்
செம்மை நலமிலாச் சிறியோர்.
எத்தனை நகரம் எத்தனை மக்கள்
எத்தனி ஒழுக்கம் எத்தனி அவக் களம்!
வாழ்க்கை வட்டத்து எல்லயில் இருந்த
வேற்றுப் புலங்கள் மிகப் பல உள அவை
செல்வுழிச் செல்வுழிச் சேணிடை அகல்வன.
யாண்டு பல கழிந்தன ஈண்டு இப்பிறவியில்
எஞ்சிய நாள் ஒரு சிலவே; ஆங்கவை
புதுப்பயன் விளையும் நாளாகுக.
வம்மின் நண்பிர்! என்னுடன் உழன்றீர்
யானும் நீரும் யாண்டினில் முதிர்ந்தனம்
மூப்பினும் வினையுள; ஆக்கமும் உளவே
சாதல் எய்துமுன் மேதகவுடைய
செயல் சில புரிகுவோம்.
*****************************************************
மருங்காகப் பலமரங்கள் ஒருங்கு பிணைத்தமைத்ததெப்ப மரபினாலே
இரும்பார மிகத்தாங்கி நூற்றுவரைத் தன்மேற்கொண்டெளிதாய்ச் செல்லும்
கருங்காகப் பொறை சுமவாச் சிறுதோணி நீரமிழ்திடுமால் கடவுண்முன்னோர்
வருந்தாது பலருக்குங்கதியளிப்பார் தமைக்காக்க வல்லார் சித்தர்.
-சுவாமி விபுலாநந்தர். (1892-1947)